உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் நெய்
30 Jul,2020
நெய், ஆரோக்கியமான கொழுப்பை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. சூடாக சமைத்த உணவின் மீது நெய் ஊற்றி பலரும் சாப்பிடுவார்கள். ஆயுர்வேதத்தின் கூற்றின்படி, வெறும் வயிற்றில் நெய் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் நெய் விளங்குகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. நெய்யில் உள்ள பிட்யூட்ரிக் அமிலம் மற்றும் டிரைகிளிசரைடுகள் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கின்றன.
காலையில் ஒரு டீஸ்பூன் பசுமாட்டு நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகிவரலாம். ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சிறிதளவு மஞ்சள் துண்டை கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தும் பருகலாம். தினமும் அவ்வாறு செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வறட்டு இரு மலும் குணமாகும். ஒரு டீஸ்பூன் நெய்யுடன் மஞ்சளை அரைத்து நீரில் கொதிக்கவைத்து பானமாகவும் பருகி வரலாம்.
தினமும் காலை பொழுதை நெய்யுடன் தொடங்கினால் மூட்டுகள் வலுப்படும். எலும்பு மூட்டுகள் இணையும் இடத்தில் நெகிழ்வு தன்மை உருவாகும். இதனால் மூட்டு தேய்மான பிரச்சினை ஏற்படாது.
நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் தன்மை கொண்டது.
நெய்யில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நிரம்பி இருக்கின்றன. இது தொப்பையை குறைக்கவும் உதவும். மேலும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கவும் செய்யும்.
தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக வேலைப்பளு காரணமாக கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படும். தூங்க செல்லும் முன்பு கண்களை சுற்றி நெய் தடவுவது நல்ல பலனை தரும்.
நெய்யில் கொழுப்பு அமிலங்களும், ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருக்கின்றன. இவை உலர்ந்த கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராகவும் செயல்படும்.