மெல்ல நடப்போருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு?
17 Jul,2020
நடை வேகம் என்பது உடல்நலத்தின் முக்கிய அளவுகோலாக மருத்துவ உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மையில், கொரோனா தொற்று ஏற்படுவதற்கும், நடை வேகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
பிரிட்டன் அரசின் 'பயோபேங்க்' அமைப்பு, பல்லாயிரம் பேரின் உடல்நல விபரங்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது. அதனிடமிருந்து பெற்ற, 4 லட்சம் பேரின் தகவல்படி, 973 பேருக்கு மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு கோவிட் - 19 தாக்குதல் தீவிரமாக இருந்தது.
பயோபேங்கின் தகவல் கோப்புகளிலிருந்து, கொரோனா தொற்றியோரின் நடை வேகத்தையும், கொரோனா தொற்றாதோரின் நடை வேகத்தையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இதில், சராசரி எடை உள்ளோரில் மணிக்கு, 6.4 கி.மீ., வேகத்தில் நடக்கும் திறன் தனக்கு இருப்பதாக சொன்னோரை விட, 4.8 கி.மீ., வேகத்தில் தான் தங்களால் நடக்க முடியும் என்று சொல்லியிருந்தோருக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு இருமடங்கு இருந்தது தெரியவந்தது.
வேகமாக நடப்போருக்கு உடலில் பிற நோய்கள் குறைவாகவும், நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகவும் இருப்பதே இதற்கு காரணம் என, 'மெட்ஆர்க்சைவ்' இணைய இதழில் வெளியான ஆய்வில், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.