கொரோனா நோயாளிகளுக்கு ஒருமுறை நெகட்டிவ் முடிவு வந்துவிட்டது என்பதால் மீண்டும் தொற்று ஏற்படாது என்ற முடிவுக்கு வர முடியாது.
ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல செய்திகளைக் கேள்விப்படுகிறோம். பாதித்தவர்களுக்கே மீண்டும் தொற்று ஏற்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், எந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதற்கு எதிரான எதிர்ப்புப்பொருள் (ஆன்டிபாடி) உடலில் உருவாகும். குறிப்பிட்ட நாள்களுக்கு அது தடுப்பாகச் செயல்பட்டு அதே பாதிப்பை மீண்டும் ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, ஒருவகை வைரஸ் பாதிப்பான சின்னம்மை ஒருமுறை வந்துவிட்டால் ஆயுள் முழுவதற்கும் அது மீண்டும் தாக்காது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு, சுமார் ஓராண்டுக்காவது அந்த ஆன்டிபாடி உடலில் இருக்கும். அதனால் மீண்டும் தாக்காது என்று கூறுகின்றனர். அப்படியிருக்கும்போது கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் நீடிக்கிறது.
இது தொடர்பாக சீனாவில் முதன்முதலில் தொற்று பரவத் தொடங்கிய வூகானிலுள்ள அரசு மருத்துவமனையில் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. கொரோனா வைரஸ் தாக்கிய 938 பேரில் 58 பேருக்கு (6.2 சதவிகிதம்) மீண்டும் தொற்று தாக்கியிருந்தது.
மீதமுள்ள 880 பேருக்கு நெகட்டிவ் என்ற முடிவே வந்தது. தொடர் சிகிச்சையின் பேரில் மீண்டும் தொற்று ஏற்பட்டவர்களில் 54 பேருக்கு மீண்டும் நெகட்டிவ் முடிவு வந்தது. இரண்டு நோயாளிகளுக்கு நோய்த் தொற்று நீடித்தது. இரண்டு பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான, மிதமான கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
தொற்று நோய் மருத்துவர் என். சுதர்சன்
முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கூறியது:
“ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான காரணத்தைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை. மீண்டும் மீண்டும் தொற்றுக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. சில நோயாளிகள் குணமடைந்தாலும் பரிசோதனையில் கண்டறியப்படாத வகையில் அவர்களின் நுரையீரலின் ஆழத்தில் வைரஸ் இருந்திருக்கலாம்.
முடிவுக்கு வர முடியாது!
இவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பதும் மீண்டும் நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால் உடலிலிருக்கும் வைரஸின் எண்ணிக்கையிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.
அதன் காரணமாக ஒருமுறை நோய் குணமானாலும் பல நாள்கள் கழித்து மீண்டும் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வரலாம். நோயாளிகளுக்கு ஒருமுறை நெகட்டிவ் முடிவு வந்துவிட்டது என்பதால் மீண்டும் தொற்று ஏற்படாது என்ற முடிவுக்கு வர முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனாதொற்றிலிருந்து மீண்ட சிலரை மறுபடியும் தொற்று பாதித்துள்ளதால் இதுபற்றி தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்ஸ
ஒருவர் உடலில் கோவிட்-19 பாதித்த பிறகு அதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) எப்படி உருவாகிறது என்பதன் அடிப்படையில்தான் மீண்டும் நோய் பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. லேசான, மிதமான பாதிப்புள்ளவர்கள் அல்லது அறிகுறியில்லாதவர்களுக்கு ஆன்பாடி குறைவாகவே உருவாகியிருக்கும். அதன் காரணமாக, அவர்களுக்கு நோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
தீவிர பாதிப்பு பாதுகாக்கும்!
அதே நேரம், நுரையீரலில் தொற்று, அதிக காய்ச்சலோடு தீவிர தொற்றுக்கு ஆளாகி குணமடைவர்களுக்கு மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. அந்த நோயாளிகளுக்கு ஆன்டிபாடி நன்றாகவே உருவாகியிருக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு கோவிட்-19 மீண்டும் தாக்காது.
எந்த வைரஸ் தொற்று பாதித்தாலும் அதனால் உருவாகும் ஆன்டிபாடி, குறைந்தது ஆறு மாத காலத்துக்கு உடலில் இருக்கும். வைரஸ் தொற்றுக்கு எதிராக உருவாகும் ஆன்டிபாடியில் ஐந்து வகைகள் உள்ளன. அவற்றில் IGG, IGM ஆகிய இரண்டும் தீவிர தொற்று ஏற்படும்போது உருவாகும். குறிப்பிட்ட காலத்துக்கு உடலில் இருந்து நோயை எதிர்க்கும். குறிப்பாக, IGG ஆன்டிபாடி இரண்டு மூன்று ஆண்டுகள்கூட உடலில் இருக்கும். கொரோனா வைரஸ் புதிய வகை என்பதால் ஆன்டிபாடி எத்தனை காலத்துக்கு உடலிருக்கும் என்று சரியாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமே சற்று மந்தமாகச் செயல்படும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். அதனால் தொற்று எளிதில் பரவுகிறது.
கொரோனா தொற்றில் லேசான, மிதமான பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுள்ள பகுதியில் வெளிப்படாமல் (Expose) இருப்பது நல்லது” என்கிறார்.
நீரிழிவாளர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள இந்தியாவில் கொரோனாபாதித்து மீண்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசம், கை கழுவுதல், தனிமனித இடைவெளி ஆகிய மூன்று பழக்கங்களையும் ஆழ்மனத்தில் பதியவைத்து மறக்காமல் பின்பற்றுவதுதான் அனைவருக்கும் மிகப்பெரிய அரணாக அமையும்