கொரோனா பரவல் வாய்ப்புகள் என்னென்ன? புதிய தகவல்கள்
10 Jun,2020
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கொரோனா வைரஸ் தொடர்பான மறுவரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்தே நோய் பரவும் வாய்ப்பு அதிகம் , வைரஸ் இருக்கும் மேற்பரப்புகளிலிருந்து எளிதாக பரவாது. இதேப்போல் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து பரவும் வாய்ப்பும் மிகக் குறைவு.
தும்மல் அல்லது பேசும் போது வெளியிடப்படும் நீர்துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் என்றும், வைரஸ் பரவலுக்கு காரணமானவர், நோய் வாய்ப்பட்டிருக்கவோ, அறிகுறியுடனோ இருப்பது அவசியமல்ல.
6 அடிக்கும் குறைவான இடைவெளியுடன் இருக்கும் போது வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும்.
மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், கப்பல்களில் அதிகமாக நோய் பரவல் இருக்கும். பலர் ஒன்றாக கூடும் போதே அதிகமாக தொற்று ஏற்படுகிறது. மார்ச் மாதத்தில், வாஷிங்டனில் நடந்த இசை பயிற்சியின் போது வைரஸ் தாக்கிய ஒருவர் தும்மியதால் 52 பேர் நோய்வாய் பட்டு உள்ளனர்.
நோய் தாக்கியவருடன் ஏற்படும் நேரடி தொடர்பினாலேயே ஒருவர் பாதிக்கப்படுவர். அவர் கொடுக்கும் காகிதம் அல்லது கூரியர் ஆகியவற்றால் பரவல் ஏற்படும் வாய்ப்பு குறைவு. பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை வைரஸ் வாழும் என்ற போதிலும், அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும்.
ஒருவருக்கு தொற்று ஏற்பட ஆயிரம் வைரஸ் துகள்கள் தேவைப்படுகின்றன. மூச்சு விடும் போது நிமிடத்திற்கு 20 வைரஸ் துகள்கள் உள் இழுக்கப்படுகின்றன. பேசும் போது நிமிடத்திற்கு 200 வைரஸ் துகள்கள் வெளியிடப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மலின் போது 200 மில்லியன் வைரஸ் துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றோட்டம் இல்லாத இடங்களில், காற்றில் பல மணி நேரம் உயிர் வாழும்
6 அடி இடைவெளியுடன் 45 நிமிடங்கள் வரை இருக்கும் போது வைரஸ் பரவாது. பாதிக்கப்பட்டவருடன் முகக்கவசம் அணிந்து 4 நிமிடங்களுக்குள் பேசினால் வைரஸ் தொற்று ஏற்படாது. காற்றோட்டம் மிக்க இடங்களில் வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனால் மூடப்பட்ட இடங்களில் மக்கள் கூடும் போது வைரஸ் பரவல் அதிகரிக்கும். பொது கழிப்பிடங்கள், பொது இடங்கள் வைரஸ் பரவலை வேகப்படுத்தும் இடங்களாகும்.அலுவலகங்கள், பள்ளிகள், ஓட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள் ஆகியவை வைரஸ் பரவலை மிகவும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது