வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை கண்டறிந்த மருத்துவர்கள்!
28 Apr,2020
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு புரியாத புதிராக மாறி உள்ளது,
மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கொரோனாவின் குணாதிசயங்களைக் கண்டறிய தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு கூறுகையில், சிலர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள், ஆனால் மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளனர். பெரும்பாலான மக்கள் (சுமார் 80 சதவீதம்) மருத்துவமனை சிகிச்சை தேவையில்லாமல் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து பேரில் 1 நபர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறார்.
வயதானவர்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள், நீரிழிவு நோய் அல்லது புற்றுநோய் போன்ற அடிப்படை மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்கள் கடுமையாக நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று கூறி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இணைய தளத்தில் கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, மற்றும் வலிகள், மூக்கு நமைச்சல், தொண்டை புண் மற்றும் வயிற்றுப்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்புக் குழு, கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை கண்டறிந்து உள்ளனர்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) உலகளவில் நோய்களைக் கண்காணித்து வருகின்றனர்.அதன் அதிகாரிகள் நேரடியாக மேம்பட்ட சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை இவர்கள் கண்டறிந்து உள்ளனர்
கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பலவிதமான அறிகுறிகள் தென்படும். லேசான அறிகுறிகள் முதல் கடுமையான நோய் வரை. இந்த அறிகுறிகள் வைரஸை வெளிப்படுத்திய 2-14 நாட்களுக்குப் பிறகு தோன்றக்கூடும். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் என்று சிடிசி தனது இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறிகளை தனது இணையதளத்தில் சிடிசி சேர்த்து உள்ளது. அது குளிருடன் மீண்டும் மீண்டும் நடுங்குதல், தசை வலி, தலைவலி மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை அடங்கும்.
சிடிசி அதன் இணையதளத்தில் கொரோனா அறிகுறிகளின் பட்டியல் அனைத்தையும் உள்ளடக்கியது அல்ல என்றும், கடுமையான அல்லது அவற்றைப் பற்றிய வேறு எந்த அறிகுறிகளும் மக்களுக்கு தென்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.