மெர்ஸ், சார்ஸ் என்ற கொரோனா வகை வைரஸ்களைவிட கோவிட் 19 என்ற கொரோனா வகை வைரஸின் இறப்பு சதவிகிதம் குறைவு. அதனால் கொரோனா கோவிட் 19-க்கு யாரும் பயப்பட வேண்டாம் என்கிறார் காஞ்சிபுரம் டாக்டர் சத்தியநாராயணன்.
இன்று உலகளவில் அதிகமாக உச்சரிக்கப்படும் சொல் கொரோனா. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவும் இந்தக் கொரோனா வைரஸிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 298 பேருக்குக் கொரோனா உறுதியாகி, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 3 பேருக்குக் கொரோனா உறுதியானது. அதில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார். இப்படி கொரோனா புள்ளி விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ள சூழலில் கொரோனாவைப் பரப்பும் கோவிட் 19 வைரஸ் குறித்தும் கொரோனா வகை வைரஸ்களைப்பற்றியும் விரிவாக நம்மிடம் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏழைகளின் மருத்துவர் சத்தியநாராயணன்.
கொரோனா வைரஸ்
“மனிதனுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகிய கிருமி தொற்று காரணமாக உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் கொரோனா வைரஸ் வகைகளைச் சேர்ந்த 229 -இ, என்எல் 63, ஓசி 43, ஹெச் கே யூ 1 , மெர்ஸ், சார்ஸ், கோவிட் 19 ஆகியவைதான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக வைரஸ் கிருமிகளுக்கு ஆன்டி வைரல் மருந்துகளைக் கொடுக்கும்போது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதனால், வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய மருந்து, மாத்திரைகளைக் கவனமாக மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள்.
ஆனால் பாக்டீயாக்களுக்கு ஆன்டி பயோட்டிக் மருந்துகள் கொடுக்கப்படும்போது அவை விரைவில் அழிக்கப்படுவதோடு உடல் உறுப்புகளுக்குப் பெரியளவில் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இன்றைய சூழலில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வகை வைரஸான கோவிட் 19-வைப் பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை.
இது கொரோனா வைரஸின் 7வது வகை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 கொரோனா வகை வைரஸ்களால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைரஸ்களால் உயிர் வாழ முடியாது. ஆனால், கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் எந்த வெப்பச் சூழலிலும் அதற்கெற்ப வாழும் தன்மையை அமைத்துக்கொள்கிறது. இதனால் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கொரோனா
2002-ம் ஆண்டில் சார்ஸ் (SARS VIRUS) என்ற கொரோனா வகை வைரஸ் கிருமிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 8098 பேர் பாதிக்கப்பட்டதில் 774 பேர் உயிரிழந்தனர்.
2012-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த மெர்ஸ் (MERS VIRUS) என்ற வைரஸால் 2,494 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 912 பேர் உயிரிழந்தனர்.
சார்ஸ் வைரஸ் இறப்பு எண்ணிக்கை 10 சதவிகிதம் என்றும் மெர்ஸ் வைரஸ் இறப்பு எண்ணிக்கை 36 சதவிகிதமும் என்றும் கணக்கீடப்பட்டுள்ளது.
அதாவது 100 பேர் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டால் சார்ஸ் வைரஸிக்கு (case fatality rate) 10 பேரும் மெர்ஸ் வைரஸிக்கு 36 பேரும் உயிரிழப்பார்கள். ஆனால், கோவிட் 19 என்ற வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 2 சதவிகிதம் பேருக்குதான் மரணம் ஏற்படும்.
ஏராளமானவர்கள் கோவிட் 19 என்ற வைரஸால் பாதிக்கப்பட்டாலும் 2 சதவிகிம் பேர்தான் உயிரிழப்பார்கள். மற்றவர்கள் குணமடைந்துவிடுவார்கள்.
மேலும், கோவிட் 19 என்ற கொரோனா வைரஸிக்கு கீரிடம் என்று பெயர். ஏனெனில் கீரிடம் போல வடிவமைப்பைக் கொண்டது இந்த வைரஸ்.
இந்த வைரஸ் கிருமிகள் மனிதனின் நுரையீரலின் கீழ்ப்பகுதியிலும் குடல் பகுதியிலும் சுவாசப் பாதைகளிலும்தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், தும்மல், காய்ச்சல் மற்றும் வாந்தி வயிற்றோட்டமும் ஏற்படும்.
டாக்டர் சத்தியநாராயணன்
இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவுகிறது. இதனால்தான் கொரோனா கோவிட் 19 என்ற வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 2 மீட்டர் தூரம் இடைவெளியை விட்டு இருக்க வேண்டும்.
கோவிட் 19 வைரஸ், திடப் பொருள்கள் மீது நீண்ட காலம் உயிர்வாழும். அதனால் வைரஸ் கிருமி உள்ள இடத்தைத் தொட்டுவிட்டு அதை வாய், மூக்கு, கண்கள் பகுதிகளில் தொடும்போது இந்த வைரஸ் சுவாச மண்டலத்துக்குள் சென்றுவிடுகிறது. அதனால்தான் அடிக்கடி கைகளைக் கழுவ சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
கோவிட் 19 வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிமனிதக் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்தில் பொது மக்கள் கவனம் செலுத்த சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. கோவிட் 19 வைரஸ் பரவுவதை விட இன்றைய காலகட்டத்தில் உள்ள சமூகவலைதளங்கள் மூலம் பீதி அதிகளவில் பரவுகிறது. எனவே. அரசு அறிவிக்கும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும். மேலும் கோவிட் 19 வைரஸிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
”இதுவரை 6 கொரோனா வகை வைரஸ்களால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைரஸ்களால் உயிர் வாழ முடியாது.
ஆனால் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் எந்த வெப்பச் சூழலிலும் அதற்கெற்ப வாழும் தன்மையைக் அமைத்துக்கொள்கிறது. இதனால் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. -டாக்டர் சத்தியநாராயணன்
கோவிட் 19 வகை வைரஸின் எடை அதிகம் என்பதால் காற்றின் மூலம் பரவாது. பிளாஸ்டிக், இரும்பு, துணி எனத் திட பொருள்களின் மீது ஒட்டிக்கொள்ளும்.
பிளாஸ்டிக், இரும்புப் பொருள்கள் மீது கோவிட் 19 வைரஸ் 3 நாள்கள் வரை ஒட்டியிருக்கும் என லண்டன் ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.
துணியில் 3 மணி முதல் 6 மணி வரை உயிரோடு இருக்கும். வயதானவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து, மாத்திரைகளை கொரோனாவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸுக்குப் பயப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன” என்றார்.