கொரோனா வைரஸ் எந்தெந்தப் பொருட்களில் உயிர்வாழும்?- ஆராய்ச்சித் தகவல்!
20 Mar,2020
கொரோனா வைரஸ் (COVID-19) பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என New England என்ற மருத்துவ சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸால் நீடிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் சிறிய காற்றுத் துகள்கள் அல்லது வாயுத் துகள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சுத்திகரிக்கப்படாத உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றில் COVID 19 வைரஸ் ஒன்பது நாட்கள் இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணிகள் இலையுதிர் காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen கூறியுள்ளார்.
அந்த தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஜேர்மன் ஆய்வு நிறுவனத்திற்கு 80 மில்லியன் யூரோவை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான பூரண உரிமை மற்றும் கொள்வனவு செய்வதற்கான உரிமையை வேறு எவருக்கும் வழங்குவதில்லையென ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேர்மன் ஆய்வு நிறுவனத்திடம் இருந்து அதனைக் கொள்வனவு செய்வதற்கு தயாராவதாக தகவல்கள் வெளியான பின்புலத்திலேயே ஜேர்மன் வெளிவிகார அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அனைவரும் இணைந்து இந்த வைரஸை தோற்றகடிக்க வேண்டும் என்பதனால், இந்த தடுப்பூசியின் பிரதிபலனை வறிய நாடுகள் உள்ளிட்ட உலகின் அனைத்து மக்களுக்கும் வழங்குவதே தமது நோக்கம் என ஜேர்மன் தெரிவித்துள்ளது.