மூளையின் பின்பகுதியில் இருந்து வால் போல் நீண்டு இருக்கும் ஒரு நரம்பு மண்டல பகுதி. தண்டுவடமும் மூளையும் சேர்ந்துதான் மையநரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. தண்டுவடம் மண்டை ஓட்டின் பின்புறத்தில் இருக்கும் துவாரம் (Foramen magnum) வழியாக முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் ஊடே கீழ்நோக்கி நீண்டு செல்கிறது. தண்டுவடம் ஆண்களுக்கு கிட்டத்தட்ட 45 சென்டிமீட்டர் நீளமாகவும், பெண்களுக்கு 43 சென்டிமீட்டர் நீளமாகவும் இருக்கும். தண்டு வடத்தை சுற்றி இருக்கும் முள்ளெலும்புகள் அதனை ஓர் அரண் போல் காத்து நிற்கிறது.
மூளைக்கும் உடம்பின் பிற பாகங்களுக்கும் இடையே நரம்பு சமிக்ஞைகளை கடத்துவதே தண்டுவடத்தின் முதன்மையான செயல்பாடாகும். மூளையிலிருந்து தண்டுவடம் வாயிலாக கீழ்நோக்கிச் செல்லும் இயக்க(Motor) தகவல்களுக்கான வழியாகச் செயல்படுவது, கை கால்களிலிருந்து தண்டுவடம் வாயிலாக மூளைக்கு மேல்நோக்கிச் செல்லும் உணர்ச்சித்(Sensory) தகவல்களுக்கான வழியாகச் செயல்படுவது என இரண்டுவிதமான தண்டுவடத்தின் முக்கிய செயல்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக நாம் ஒரு பேனாவை பிடிக்க வேண்டுமானால், மூளையிலிருந்து கைவிரல்களுக்கான இயக்க சமிக்ஞைகள் தண்டுவடம் வழியாக கீழே இறங்கி, கழுத்தில் இருந்து வெளிவரும் நரம்புகள் மூலமாக, விரல் வரை சென்றடைந்து பேனாவை பிடிக்க உதவுகிறது.
இதனை இயக்கத் தகவல் பாதை (Motor pathway) என்று கூறுவோம். அதுபோல் கால் பாதத்தில் முள் குத்தினால் அந்த வலி உணர்வு, கால்களின் உணர்ச்சி நரம்புகள் வாயிலாக மேலெழும்பி, தண்டுவடம் வழியாக மேலே சென்று, மூளையில் உள்ள மத்திய உணர்ச்சிப்பகுதிக்கு சென்றடைகிறது. இதனை உணர்ச்சித் தகவல் பாதை (Sensory pathway) என்று கூறுவோம். இவை அனைத்தும் மைக்ரோ வினாடிகளில் நடக்கிறது. உடனே மூளை சுதாரித்துக்கொண்டு காலை முள்ளில் இருந்து எடுக்க உத்தரவிடுகிறது. மூளையின் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் தண்டுவடம் வாயிலாகவே நடைபெறுகிறது.
தண்டுவடம் பாதித்தால் என்ன நடக்கும்?
என் கண்முன்னால் நடந்த ஒரு நிகழ்வை சொல்கிறேன். தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு வரும் பேருந்துகளில் 6-ம் நம்பர், 3-ம் நம்பர் பேருந்துகள் பிரபலமானவை. மாநில அரசே மாணவர்களுக்கென தனி பேருந்து கொடுத்திருக்கிறார்களோ என்று என்னும் அளவுக்கு பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர் கூட்டம் நிரம்பி வழியும். ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு தெரியும் கருமார்கள்(போருக்கான ஆயுதங்கள் செய்பவர்கள்) வாழ்ந்த இடம் பழைய தஞ்சையில் இருக்கும் கருந்தட்டாங்குடி. கரந்தையிலிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி வரை செல்லும் பேருந்துகள் அவை. எப்பொழுதும் புன்முறுவலுடன் வளையவரும் ஒடிசலான, சுருட்டை முடி கொண்ட அந்த நடத்துநர் பஸ்ஸில் இருந்தால்
அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி.
பேருந்துகளில் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையோடு செல்வதற்கு நடத்துனர்களுக்கு முக்கிய பங்குண்டு. காலப்போக்கில் எனக்கு நண்பரானார். நேர்மறையான எண்ணங்கள் உடையவர். நமது வாழ்வில் ஒரு வினாடியில் ஏற்படும் மாற்றங்கள் நம் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் என்பதற்கு இவர் வாழ்வில் நடந்த விபத்தே சாட்சி. கோவிலுக்கு நண்பர்களோடு செல்லும் வழியில் டிரைவரின் கவனக்குறைவால் விபத்துக்குள்ளாகி முதுகுத்தண்டுவடத்தில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. இடுப்புக்கு கீழே எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. சிறுநீர் கழிக்க முடியவில்லை, மலம் கழிப்பதற்கான உணர்ச்சிகளும் செயலிழந்து போனது.
மூளையிலிருந்து வரும் கை மற்றும் கால்களுக்கான நரம்புகள் தண்டுவடத்தின் வழியாகவே கீழிறங்கி வருகின்றன. கழுத்தில் உள்ள தண்டுவடத்தில் அடிபட்டால் இரண்டு கைகளும், இரண்டு கால்களும் செயலற்றுப் போய்விடும். இதனை மருத்துவத்தில், குவாட்ரிப்பிலிஜியா(Quadriplegia) என்று கூறுவோம். செயல்திறன் மட்டுமல்லாது அனைத்து விதமான உணர்வுகளும் (தொடுதல், வலி, வெப்பம், குளிர், அதிர்வு) அற்றுப் போய்விடும். சிறுநீர், மலம் கழிப்பதற்கான நரம்புகளும் தண்டுவடத்தின் வழியாகவே கீழிறங்குவதால் இந்நரம்புகளிலும் பாதிப்பு ஏற்படும்.
இடுப்புக்கு மேலே உள்ள முதுகுத்தண்டுவடத்தில் அடிபட்டால், கால்கள் இரண்டும் செயலிழந்து போகும். இதனை பாராபிலிஜியா(Paraplegia) என்று கூறுவோம். அந்த நடத்துனருக்கு முதுகுத்தண்டுவடத்தில் அடிபட்டதால் கால்கள் செயலிழந்துபோய் வீல் சேரின் உதவியுடனேயே இருக்க வேண்டியதாயிற்று. யூரினரி கதிடர் என்று சொல்லக்கூடிய சிலிக்கானால் செய்யப்பட்ட சிறுநீர் வடிகுழாய் மூலமாகவே சிறுநீர் கழிக்க வேண்டியதாயிற்று. 10 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மலம் கழிக்கும் உணர்ச்சி தெரியவில்லை. ‘ஸ்டெம்செல் தெரபி’ என்று சொல்லக்கூடிய நவீன மருத்துவம் வரை செய்து பார்த்தாகிவிட்டது, ஒன்றும் பலனில்லை. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
அறிவியல் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும் சில நோய்களுக்கு வைத்தியங்கள் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்பிக்கைதான் நம் வாழ்வின் அச்சாணி. கால்கள் செயலிழந்தால் என்ன, கைகள்தான் இருக்கின்றனவேஸ பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தன் மனவலிமையால் தற்போது இலக்கிய உலகில் தனக்கென்று ஓர் இடம்பிடித்து பெரிய எழுத்தாளராக உள்ளார். முதுகு தண்டுவடத்தில் வலி என்று முன்பெல்லாம் வயதானவர்கள் தான் கூறுவர். ஆனால், இன்று இளம் வயதினரும் அவ்வாறு கூறக் கேட்கிறோம். கழுத்து, நடுமுதுகு, இடுப்பு என்று ஏதேனும் ஒரு இடத்தில் சிறுவர்கள் கூட வலி இருப்பதாக கூறுகின்றனர்.
இதற்கு என்ன காரணம்?
முள்ளெலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக ஒரு அடுக்கு போல் ஆங்கிலத்தின் S வடிவ தோற்றத்துடன் அமைந்திருக்கும். கரும்பின் கணுவைப் போல் எலும்புகளுக்கிடையே ஜவ்வு போன்ற டிஸ்க் என்று சொல்லக்கூடிய அமைப்பு இருப்பதால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருக்கின்றன. நாம் நிமிர்ந்து நிற்கும்போது முள்ளெலும்பின் கீழ் பகுதி, புவியீர்ப்பு விசையின் காரணமாக, உடம்பின் மேல் பகுதியில் உள்ள எடையை தாங்கிக் கொள்ளும். இந்த முள்ளெலும்புகளுக்கு இடையில் இருந்து தண்டுவடத்திலிருந்து வெளிவரும் நரம்புகள்தான், கை, கால்களுக்கு செல்கின்றன.
இந்த முள்ளெலும்புகளின் தேய்மானம் அல்லது முள்ளெலும்புகளின் இடையே உள்ள ஜவ்வு வெளியே பிதுங்கி வந்து நரம்புகளை அழுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டு, கழுத்து வலி மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. நரம்புகளில் அழுத்தம் அதிகமானால் வலி கழுத்தோடு நின்றுவிடாமல் கைவிரல்கள் வரை செல்லக் கூடும். விரல்கள் சமயத்தில் மரத்தும் போகும். இருமினால், தும்மினால் கழுத்திலிருந்து விரல் வரை ஷாக் அடிப்பதைப் போன்ற உணர்வும் ஏற்படும். இதனை செர்விகல் ராடிக்யூலோபதி(Cervical Radiculopathy) என்று கூறுவோம்.
அதுபோல் முதுகில் இருந்து வெளிவரும் நரம்புகளில் ஜவ்வு பிதுங்கி அழுத்தம் ஏற்பட்டால், வலி இடுப்பிலிருந்து கால் வரை செல்லும். கால்கள் மரத்துப் போகும். சிறிது தூரம் நடந்தாலே கால்களில் வலி, மரத்துப் போகுதல் ஏற்படும். இதனை லம்பார் ராடிக்யூலோபதி(Lumbar
radiculopathy) என்று சொல்வோம்.
சரிஸ இன்றைய கால கட்டத்தில் சிறு வயதினருக்கும் இந்த வலி ஏன் ஏற்படுகிறது?
அதிகமான பைக் பயணம், அலுவலகத்தில் கம்ப்யூட்டருக்கு எதிராக உட்காரும் முறையில் மாறுபாடு ஆகிய காரணங்களால் இவ்வலி ஏற்படலாம். பள்ளிக்குழந்தைகள், புத்தகம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன், பையை தோளில் மாட்டிக் கொண்டு நடக்கும்போது, உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாறுபாடு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. வகுப்பில் பெஞ்சுகள் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் அமையாமல், முதுகுப்பகுதிக்கு சரியான சாய்மானம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வலி ஏற்படலாம். வீட்டுப் பாடத்தை தரையில் அமர்ந்து எழுதுவது, முதுகை வளைத்தபடி சோஃபாவில் அமர்ந்து எழுதுவது ஆகியவையும் முதுகுவலியை அதிகரிக்க செய்யும்.
ஆண்களை விட பெண்கள் முதுகுவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். ஹீல்ஸ் செருப்புகள் அணிவது, மகப்பேறு அடையும் போது புவியீர்ப்பு விசையினால் முதுகுத்தண்டுவடத்தின் S வடிவ அமைப்பில் தாக்கம் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் எடை அதிகரித்து வயிற்றுப்பகுதியில் தொப்பை ஏற்படுவது என பல்வேறு காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது. உடல் உழைப்புக்கு பழக்கப்படாதோர், திடீரென குனிந்து, நிமிர்ந்து பணி செய்யும்போதோ, எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்கும்போதோ, தசைகள் ஒத்துழைக்காமல் முதுகு வலி ஏற்பட வாய்ப்புண்டு.
வயது ஏற ஏற முள்ளெலும்புக்கு இடையில் உள்ள ஜவ்வில் நீர் வற்றி, தசைகள் சுருங்கி வலுவிழந்து விடுவதால், பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையை எட்டி விடுகிறது. இதனை டிஸ்க் டிஜெனரேஷன்(Disc Degeneration) என்று கூறுவோம். எலும்புகளில் சுண்ணாம்பு சத்து குறைவதால் வலுவிழக்கின்றன. இதனை ஸ்பாண்டிலோஸிஸ் (Spondylosis) என்று கூறுவோம். நாம் எவ்வளவு செ.மீ உயரமோ அதிலிருந்து 100 கழித்தால் வருவதே நமது சரியான உடல் எடை. பாடி மாஸ் இன்டெக்ஸ்(BMI) அளவும் 25-க்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுநேரம் நின்றபடி பணி செய்ய வேண்டியிருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி, பணி செய்தால் அதிக வலி ஏற்படாது.
பெண்கள் ஹைஹீல்ஸ் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும்போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும். கைப்பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றி, மாட்டிக் கொள்ள வேண்டும். உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம். இரு கைகளையும் பயன்படுத்தியே பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
முதலில் கடினமாக தோன்றினாலும், பழகி கொண்டால், முதுகுத் தண்டுவடத்தில் தொந்தரவு ஏற்படாமல் இயங்க இந்த பழக்கங்கள் உதவும். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்னை ஏற்படாது. உடலும், முதுகுத் தண்டுவடமும் ஏற்கனவே இருந்த வடிவமைப்புக்கு திரும்ப உதவும். யோகா, ஏரோபிக்ஸ் ஆகியன தண்டுவடத்திற்கான சிறந்த பயிற்சிகள். தினமும் சில நிமிடங்களாவது முதுகுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால் திடமான ஆரோக்கியத்தை பெறலாம்.