இதய செயலிழப்பு பாதிப்பிற்கான அறிகுறிகள்
12 Oct,2019
பலருக்கும் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பிற்கும், ஹார்ட் ஃபெயிலியர் எனப்படும் இதய செயலிழப்பிற்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு பாதிப்புகள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் இதய செயலிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
தரையில் மல்லாந்து படுக்கும்போது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுவது, கை கால்களில் குறிப்பாக மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டிருப்பது, காலை அல்லது மாலை வேளைகளில் வீடு அல்லது அலுவலகங்களில் சிறிது தொலைவு நடந்தாலும் மூச்சு விட சிரமப்படுவது, திடீரென்று எடை அதிகரிப்பது, இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரிப்பது இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், உங்களது இதயம் செயலிழந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இதய செயலிழப்பு என்பது எம்முடைய இதயம், அதனுடைய இயக்கத்தை மெதுவாக குறைத்துக் கொள்வதாகும். இதன்காரணமாக எம்முடைய உடலுக்கு தேவையான அளவிற்கு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போகக்கூடும். இதற்கு உடனடியாக சிகிச்சை பெறவில்லையென்றால், நாளடைவில் இதயம் தன்னுடைய இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிடும்.
அண்மைய வைத்திய ஆய்வறிக்கையின் படி, இதய செயலிழப்பு பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டு, இதய செயலிழப்பு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் ஓராண்டிற்குள் மரணத்தை எட்டி விடுவார்கள் என்கிறது. அதனால் அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை பெற்று, வைத்தியரின் ஆலோசனை பெற்று, உங்களது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.