மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து - ஆய்வு
04 Oct,2019
மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு, பிற்காலத்தில் புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் எனும் சஞ்சையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக கடந்த இருபது ஆண்டுகளில் ஸ்வீடனில் பதிவாகிய 1.2 மில்லியன் கர்ப்பம் குறித்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
ஆண் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஐ.சி.எஸ்.ஐ எனும் சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு ஒப்பீட்டளவில் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்ற கருத்தை நிறுவுருவதற்கு இன்னும் வெவ்வேறு வயது உடையவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று 'புரோஸ்டேட் கேன்சர் யூகே' ஆராய்ச்சியாளர்களை வலியுறுத்தியுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அந்நாட்டின் குழந்தை பிறப்பு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தரவை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
1994 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையிலான பத்து லட்சத்துக்கும் அதிகமான குழந்தை பிறப்புகளை, புற்றுநோய் சார்ந்த தரவுகளுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்தனர்.
அதில் 1.7 சதவீத குழந்தைகள் செயற்கை கருத்தரிப்பு முறையின் (ஐவிஎஃப்) மூலம் பிறந்துள்ளன. ஆனால், மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை பெற்றது ஆணா, பெண்ணா என்பது குறித்த தரவுகள் இல்லை.
அடுத்ததாக, 1.3 சதவீத குழந்தைகள் ஐ.சி.எஸ்.ஐ எனும் நல்ல நிலையில் உள்ள ஒரு விந்தணு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தும் சிகிச்சை முறையின் மூலம் பிறந்துள்ளன.
ஐ.சி.எஸ்.ஐ முறையின் மூலம் ஸ்வீடனில் 1992ஆம் ஆண்டு முதல் கருத்தரிப்பு செய்யப்படுகிறது.
கண்காணிப்பு அவசியம்
ஸ்வீடனில் 2014ஆம் ஆண்டு வரையிலான இருபது ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஆண்களில் 0.28 சதவீதம் பேருக்கும், ஐ.வி.எஃப் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஆண்களுக்கு 0.37 சதவீதமும், ஐ.சி.எஸ்.ஐ முறையின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 0.42 சதவீதத்தினருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஐ.சி.எஸ்.ஐ குழுவில் உள்ள ஆண்களுக்கு 55 வயதிற்கு முன்பே, ஆரம்பகால புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் யுவோன் லண்ட்பெர்க் கிவேர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, "புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவானது. ஆனால், இந்த ஆண்கள் மிகவும் வயது குறைவானவர்கள். அதிக ஆபத்து கொண்ட அவர்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்," என்று அவர் கூறுகிறார்.
மலட்டுத்தன்மை சிகிச்சைக்கும், புரோஸ்டேட் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மேலதிக ஆய்வுகள் நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"மலட்டுத்தன்மைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையே புரோஸ்டேட் புற்றுநோய்க்கு காரணமா அல்லது மலட்டுத்தன்மைக்கு இந்த வகை புற்றுநோய்க்கும் பொதுவான காரணம் உள்ளதா என்பதில் தெளிவு வேண்டும்" என்று கூறுகிறார் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண் உறுப்பு நோயியல் பேராசிரியர் ஆலன் பேசி.
"தங்களது 20 மற்றும் 30களில் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்ட ஆண்களுக்கு, அவர்களது 50 மற்றும் 60களில் எவ்விதமான பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்ட இடைவேளையில் மருத்துமனையை பார்வையிடுவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்."
மேலதிக ஆய்வுகள்
பிரிட்டனின் தேசிய புரோஸ்டேட் புற்றுநோய் ஆய்வு அமைப்பை சேர்ந்த சைமன் க்ரீவ்ஸன், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து எவ்விதமான முடிவுகளுக்கும் வந்துவிடக் கூடாது என்று கூறுகிறார்புற்றுநோய் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடையே ஓப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள் சராசரியாக குறைந்த வயதுப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது."
"இந்த ஆய்வு முடிவுகள் மற்ற வயதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இதற்கான காரணம் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்."
"அனைத்து ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு திட்டமிடும் இணையர்கள் இந்த ஆய்வு முடிவுகளால் அச்சமடைய வேண்டாம்," என்று சைமன் க்ரீவ்ஸன் கூறுகிறார்.