‘‘குழந்தைகளுக்கு ஏற்படுகிற வளர்ச்சிக் கோளாறுகளில் ஆட்டிசம்(Autism) என்கிற மன இறுக்கப் பிரச்னை ஒரு பொதுவான மூளைக் கோளாறு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் குழந்தைகளில் 20 லட்சம் பேர் வரை ஆட்டிசம் கோளாறு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஆட்டிசத்திற்கான இந்திய அளவிலான மதிப்பீடு. ஆண் குழந்தைகளில் 60-ல் ஒரு குழந்தைக்கும், பெண் குழந்தைகளில் 150-ல் ஒரு குழந்தைக்கும் இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை பிறந்த 12 முதல் 18 மாதங்களுக்குள் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கும் சிக்கலான வளர்ச்சிக் குறைபாடு என்று ஆட்டிசத்தை வரையறை செய்கிறது Autism Society of America (ASA) என்கிற அமைப்பு. எனவே, ஆட்டிசம் பற்றி எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் வெங்கடேஷ்.
ஆட்டிசம் கோளாறு பல்வேறு தோற்றங்களையும், பிரச்னைகளையும் உடையது. ஒரே வகை ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தோற்றமும், பிரச்னைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதையே Autism spectrum disorder என்று சொல்கிறோம்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் மீதிருக்கும் தவறான பார்வையும், மனநிலையும் அந்தப் பிரச்னையை மேலும் கடினமானதாக மாற்றிவிடுகிறது. இந்த பாதிப்புடைய குழந்தைகளை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பதால் பெற்றோர்களே இந்தக் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து பழக விடுவதில்லை. இப்படி இக்குழந்தைகளை விலக்கி வைப்பதால் ஏற்படும் சமூக விலக்கத்தால் இப்பிரச்னை குழந்தை மற்றும் பெற்றோருக்கு மிகவும்
சவாலானதாக மாறிவிடுகிறது.
ஆட்டிசம் கோளாறு உள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சிகிச்சை அளிப்பவர்களுக்கு இடையே உள்ள குழந்தை குறித்தான எதிர்பார்ப்புகளில் ஏற்படும் வேறுபாடுகள் ஒரு முக்கிய சவாலாக உள்ளது. இதுபோன்ற கோளாறு உள்ள இரண்டு குழந்தைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதால், அவர்களின் பிரச்னைகளில் ஏற்படும் முன்னேற்றத்திலும் வேறுபாடுகள் இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விரைவான சிகிச்சை இல்லை என்பதால் பெற்றோர் சரியான எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நிலையான மற்றும் தொடர் சிகிச்சையே குழந்தைக்கு உதவியாக இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசத்தை 18 மாதங்கள் வரை கண்டறிவது கடினமானதாக இருக்கிறது. இதற்கான சிகிச்சையைத் தொடங்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளே சரியான நேரம். ஏனெனில் குழந்தை பிறந்த முதல் 36 மாதங்களில்தான் (3 ஆண்டுகளில்) கிட்டத்தட்ட 80 சதவீத மூளை உருப்பெறுகிறது.
அதன் மீதமுள்ள பகுதி அதன்பிறகு உருவாகிறது. மூளையின் பெரும்பகுதி உருவாகிற இந்த 3 வயதுக்குள் மொழி, சமூகம் மற்றும் உடல், மனம் சார்ந்த அனைத்து விதமான வளர்ச்சிகளும் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். இந்த காலமே அந்த குழந்தையின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.
ஆட்டிசம் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ள 100-ல் 98 குழந்தைகளின் பிரச்னைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் குணப்படுத்திவிட முடியும். மீதமுள்ள 2 பேருக்குதான் குணப்படுத்த முடியாத அளவிலான ஆட்டிசம் பாதிப்பு இருக்கும். ஆட்டிசம் பற்றிய புரிதலும், அதன் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வும் குறைவாக இருப்பதால், பெற்றோர்கள் ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்து உரிய சிகிச்சையைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த காலதாமதம் இந்தக் கோளாறினை மேலும் கடினமாக்கிவிடும் என்பதால் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமே பிரச்னைகளை விரைவாக குறைக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே இப்பிரச்னையை கண்டுபிடித்த பிறகு மருத்துவர்களைப் போன்ற Paediatrician, Occupational therapist, Speech therapist ஆகியோரைக் கொண்ட Child development clinic அழைத்துச் சென்று இப்பிரச்னைகளை சரிசெய்யலாம்.
Autism spectrum disorder (ASD)-ன் அறிகுறிகள்
ஒரு குழந்தை வளர்ச்சியின் மூன்று முக்கிய பகுதிகளில் ASD-ன் அறிகுறிகள் வெளிப்படும். Social interaction என்கிற சமூக தொடர்பு, Communication (Verbal & Nonverbal) என்கிற வாய்மொழி தொடர்பு மற்றும் வாய்மொழி அல்லாத சைகைகள், உடல்மொழி, Thinking and behavioral skills என்கிற சிந்தனை மற்றும் நடத்தை திறன் போன்ற இந்த மூன்று வகைகளில் ASD-ன் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. ASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும்.
*ஏதாவது ஒரு செயலை செய்யும்போது அவர்களின் கண்கள் எந்தவொரு தொடர்புமின்றி இருப்பது அல்லது புன்னகை இல்லாமல் இருப்பது.
*அவர்களின் பெயர் சொல்லி அழைக்கும்போது எதிர்வினையாற்றாமல் இருப்பது அல்லது சீரற்ற முறையில் செயல்படுவது.
*சிறிய சத்தத்திற்கு அதிகளவிலான உணர்வினை வெளிப்படுத்துதல்.
*சொந்த எண்ணங்களை இழத்தல்.
*தன்னைத் தானே அடித்தல் அல்லது கடித்தல்.
*நாம் தொடர்பு கொள்ளும்போது அதற்கு அவர்கள் எந்தவொரு சைகையும் செய்யாமல் இருப்பது.
*பார்க்கும் பொருட்களை கண்களால் பின்தொடர இயலாமை.
*நண்பர்களை உருவாக்க இயலாமை.
*ஏதாவதொரு வார்த்தையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது அல்லது ஏதாவதொரு உடல் அசைவினை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது போன்றவை.
ஆட்டிசத்திற்கான காரணங்கள்
தற்போது வரை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் அதைத் தூண்டும் காரணிகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில அரிய மரபணு மாற்றங்கள், சுற்றுச்சூழல் அழுத்தங்கள், கருத்தரிக்கும்போது பெற்றோரின் வயது, கர்ப்ப காலத்தில் தாய்வழி நோய்கள், பிறக்கும்போது ஏற்படும் சிரமங்கள், குழந்தையின் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணிகளும் நோயின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது, நகர்ப்புற வாழ்க்கையில் குழந்தைகளை சரியாக பராமரிக்க பெற்றோர் நேரம் ஒதுக்காதது, செல்போன், டிவி, வீடியோகேம், லேப்டாப் போன்ற காட்சித்திரை சார்ந்த பொருட்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளிலோ, நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆட்டிசத்தைத் தடுக்க சில ஆலோசனைகள்
குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை தவறாமல் பார்வையிடுவதோடு உங்கள் மருந்துகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்கள் உடலிலும் குழந்தையின் உடலிலும் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் கண்காணிக்க உதவும். கர்ப்ப காலத்தில் நீங்கள் உருவாக்கும் பழக்கங்கள், இறுதியில் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பதால் இது ஒரு முக்கியமான நேரம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Harvard School of Public Health நடத்திய ஆய்வில் தாயின் மூன்றாவது மூன்று (Third trimester) மாதங்களில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உருவாகும் ஆபத்து இரட்டிப்பாகிறது. அவர் அந்த நேரத்தில் அதிக மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறார். ஆனால் இதற்கு காரணமான குறிப்பிட்ட மாசுபடுத்தி எது என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனவே மாசுபாட்டின் அளவு அதிகமாக இருக்கும்போது வீட்டுக்குள் இருப்பது அல்லது உட்புற பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுவது நிச்சயமாக உதவும்.
கர்ப்பிணிப் பெண் தினமும் 500 முதல் 800 மி.கி. வரை ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை பரிந்துரைக்கிறது. கர்ப்ப காலத்தில் குறைந்த அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வது, குழந்தைக்கு ஆட்டிசம் உருவாக வழிவகுக்கும் என்கிறது ஆராய்ச்சி. எனவே மருத்துவர் பரிந்துரைப்படி சரியான அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு முதல் ஐந்து வருட இடைவெளியில் அடுத்த கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஆட்டிசம் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு. முதல் கர்ப்பத்திற்குப் பிறகு அடுத்த 12 மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். அதிக வயதில் கருத்தரிக்கும் பெற்றோரின் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் தாயின் உணவுமுறை, பழக்கவழக்கம், உடல்நிலை மற்றும் மனநிலை போன்ற அனைத்தும் சரியாக இருப்பது அவசியம். துரிதவகை உணவுகள், உடல் நலத்திற்கு தீங்கு உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதும் குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது அவசியம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதற்குரிய வேகத்தில் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுகின்றன. ஆனால் சில குழந்தைகளின் வளர்ச்சி அதற்குரிய கால இடைவெளிகளில் சரியாக நடைபெறுவதில்லை. ஆட்டிசம் கோளாறு உள்ள குழந்தைகள் பொதுவாக முதல் வருடத்திற்குள் தாமதமாக வளர்ச்சியின் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள்.
உங்கள் குழந்தைக்கு ASD கோளாறு இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். ASD உடன் தொடர்புடைய அறிகுறிகள் பிற வளர்ச்சிக் கோளாறுகளுடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். சிகிச்சை தொடங்கும் முன்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு அறிவாற்றல், மொழி மற்றும் சமூக திறன்களில் தாமதங்கள் உள்ளதா என்பதை அடையாளம் காண்பதற்கான மேம்பாட்டு பரிசோதனைகளை பரிந்துரைக்க அது உதவியாக இருக்கும்.
உங்கள் குழந்தை 6 மாதங்களுக்குள் புன்னகையுடன் அல்லது மகிழ்ச்சியான வெளிப்பாட்டுடன் பதிலளிக்கவில்லை. 9 மாதங்களுக்குள் ஒலிகள் அல்லது முகபாவனைகளுக்கு ஏற்ப எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை. 12 மாதங்களுக்குள் மழலை மொழி பேசுவதில்லை. 14 மாதங்களுக்குள் சைகைகள் ஏதும் செய்வதில்லை. 16 மாதங்களுக்குள் ஒற்றை வார்த்தைகளை சொல்வதில்லை.
18 மாதங்களுக்குள் பிறரைப் பார்த்து பாசாங்கு செய்வதோ பிறரைப் போன்ற பாவனைகள் செய்வதோ இல்லை. 24 மாதங்களுக்குள் இரட்டை சொற்றொடர் வார்த்தைகளை சொல்வதில்லை. எந்த வயதிலும் முன்னர் பெற்ற மொழி அல்லது சமூக திறன்களை இழத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை ஆலோசித்து உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சையளிக்க வேண்டும்.