மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே!
சிறுநீரகவியல் துறையில், உயர் மருத்துவப் பயிற்சிக்காக, என் கணவர், இங்கிலாந்தில், இரண்டு ஆண்டுகள் இருந்த போது, அங்கிருந்த, ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பில், தன்னார்வலராகப் பணி செய்தேன்.
முதியவர்களுக்கான, சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான, ‘டே கேர்’ மையத்தில் வேலை செய்தேன்.
மன அழுத்தம்
‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று முதியவர்களை இவர்கள் ஒதுக்கி வைப்பதில்லை. மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவதால் ஏற்படும், மனநல குறைபாடு என்பது புரிந்து, அவர்களுக்கென்று இருக்கும் பிரத்யேக மையங்களில் பராமரிக்கின்றனர்.
எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, நம் ஊரிலும் இது போன்ற மையம் துவக்க வேண்டும் என்று விரும்பினேன்.
தமிழ் அறிஞரான என் கணவரின் பாட்டிக்கு, டிமென்ஷியா பிரச்னை வந்தபோது, இந்த எண்ணம் தீவிரமானது.
காரணம், மறதி நோய் இருந்த முதியவர்களை பராமரிப்பதில் நேரடியான அனுபவம் பெற்றிருந்த எனக்கு, பாட்டியை அருகிலிருந்து கவனிக்கும் பொறுப்பு வந்தது. பாட்டியின் தமிழ் புலமை, எவரையும் பிரமிக்க வைக்கும். இலக்கியத்தில் எந்தப் பகுதியைக் கேட்டாலும், புத்தகத்தைப் பார்க்காமல், அருவி போல தடையில்லாமல் சொல்லுவார்.
மொழி மீது அவருக்கிருந்த ஆளுமை, மறதி நோய் வந்தபின், குறைந்தது. குழந்தையைப் போல, மலங்க மலங்க விழித்தார்; இதை ஏற்றுக் கொள்ளவே கஷ்டமாக இருந்தது.
பகல் நேரத்தில், வேலை, கல்லுாரி, பள்ளி என்று வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்று விடுவதால், பாட்டியைப் போல பாதிக்கப்பட்ட முதியவர்களை, கவனித்துக் கொள்வது சிரமமான காரியம் என்பது புரிந்தது.
எனவே, பகல் நேர பராமரிப்பு மையத்தை, என் கணவரின் மருத்துவமனை வளாகத்திலேயே, தன்னார்வத் தொண்டு நிறுவனமாக துவக்கி விட்டேன். இதன் நோக்கம், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே.
நோய் பாதித்தவருக்கு எதுவுமே தெரியாது. இவர்களை பராமரிக்கும் குடும்பத்தினருக்கு, பல விதங்களிலும், அதீத மன அழுத்தம் ஏற்படுகிறது.
எங்களிடம் பதிவு செய்து கொண்டால், பாதித்தவரை, தினமும் காலையில் நாங்களே அழைத்து வந்து, பகல் முழுக்க பராமரித்து, மாலையில் வீட்டில் விட்டு விடுவோம்.
மூளையில் உள்ள நரம்பு செல்களின் செயல்பாடு, மெதுவாக அழிவதால் ஏற்படும் பிரச்னை இது என்பதால், அவர்களால் எதையும் நினைவில் வைக்க முடியாது.
எல்லா நேரமும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால், பிரச்னையின் தாக்கம் மிக மெதுவாக இருக்கும். எங்கள் மையத்தில், தனிமையை உணரவிடாமல், பேசுவது, எழுதுவது என்று சுறுசுறுப்பாக இவர்களை வைத்திருக்கிறோம்.
பரிசோதனை
மருத்துவமனை வளாகத்திலேயே இருப்பதால், தினமும் தேவையான மருத்துவ கண்காணிப்பை செய்கிறோம். நரம்பியல், மனநலம், பிசியோதெரபி என்று, தேவையான மருத்துவ நிபுணர்கள் குழு இருக்கின்றனர்.
பேசுவதையே திரும்ப திரும்ப பேசுவது, எதிர்பாராமல் மாறும் மனநிலை, கோபம், பழைய நினைவுகள் நினைவில் இருப்பது, நிகழ்கால சம்பவங்களை மறந்து விடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ய வேண்டும்.
துவக்கத்திலேயே கண்டறிந்தால், பிரச்னை தீவிரமாகாமல் கட்டுப்படுத்துவது எளிது.
அறுபது வயதிற்கு மேல், மூளைக்கு முறையான பயிற்சிகள் கொடுத்தால், மறதி நோய்வராமலேயே தடுக்கலாம்.