முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா?
26 Aug,2019
நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 முடி வரை உதிர்வது இயல்பானது. இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து குறைபாடுகள் காரணமாகவும் மனஅழுத்தம் (Stress) காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும்.
தலைக்கு மேல் ஒரு பிரச்னை இருக்கிறது என்றால் அது நிச்சயம் முடி உதிர்வு அல்லது வழுக்கைப் பிரச்னையாகத்தான் இருக்கும். முடி உதிர்வால் ஏற்படும் தர்மசங்கடங்களைப் பெண்களைவிட ஆண்களே அதிகம் சந்திக்கின்றனர். வழுக்கைத் தலை இருப்பதால் வேலை வாய்ப்பு, திருமணம் போன்றவைகூட பாதிக்கப்படுகிறது.
முடி உதிர்தலின் கடைநிலைதான் வழுக்கை. ஆனால், அதற்கும் நவீன மருத்துவ உலகம் பல வெற்றிகரமான சிகிச்சைகள் மூலம் தீர்வு கண்டுவருகிறது. அவற்றுள் ஒன்றுதான் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான முடி மாற்று அறுவைசிகிச்சை.
“முடி உதிர்வு பிரச்னை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆண்களைவிட பெண்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 முடி வரை உதிர்வது இயல்பானது. இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து குறைபாடுகள் காரணமாகவும் மனஅழுத்தம் (Stress) காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும்.
மரபணு காரணங்களால் பரம்பரையாகச் சிலருக்கு முடி உதிர்தல், வழுக்கை ஏற்படுகிறது. சத்தான உணவுகள், மாத்திரைகள், களிம்புகள் மூலம் இதற்குத் தீர்வு காணலாம். எனினும், அவை ஆரம்பகாலத்தில் ஏற்படும் முடி உதிர்வுக்கு மட்டுமே பயன்படும். சிகிச்சையை நிறுத்திவிட்டால் மீண்டும் முடி உதிர்வு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும்போது முடிமாற்று சிகிச்சையே தீர்வாகும். தீக்காயத்தால் தழும்புகள் ஏற்பட்டு, முடி வளராத நிலையில் இருப்பவர்களுக்கும் முடி மாற்று சிகிச்சையே தீர்வு. அனைத்து விதமான வழுக்கைத் தலைக்கும் முடிமாற்று சிகிச்சை செய்யலாம். நிரந்தரத் தீர்வாக இது அமைவதாலும் சிகிச்சையில் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளதாலும் இந்தச் சிகிச்சைக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது.
எஃப்.யூ.டி (Follicular Unit Transfer – FUT) மற்றும் எஃப்.யூ.இ (Follicular Unit Extraction – FUE) என இரண்டு விதமான முடி மாற்று சிகிச்சைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் ரே உட்ஸ் என்பவரால் 1989-ம் ஆண்டு எஃப்.யு.இ சிகிச்சை முதன்முதலில் செய்யப்பட்டது.
நவீன முறையான எஃப்.யு.இ சிகிச்சையே தற்போது அதிகமாகச் செய்யப்படுகிறது. தலையின் பின் பகுதியில் இருந்து தேவையான அளவு முடி எடுக்கப்பட்டு தலையின் முன் பகுதியில் (Implant) பதிக்கப்படும். தலை முழுவதும் வழுக்கையாக உள்ளவர்களுக்குத் தாடி மற்றும் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் முடியைக் கொண்டு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது.
மாற்று சிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளையும் கவனிப்பையும் சரியாகச் செய்தால் நோய்த்தோற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
தோல் சிகிச்சை நிபுணர் செல்வம்
ஒவ்வாமை பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் செயற்கை முடியை மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில்லை. சிகிச்சை பெறுபவருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர், கருவிகளின் துணையுடன் பின் தலையில் இருந்து முடி எடுக்கப்படுவதால் தோலை வெட்டுவதற்கான தேவை இருக்காது. இந்த முறையில் செய்யப்படும் சிகிச்சையினால் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும். தையல், வடுக்கள், அதிகப்படியான வலி, அதிக ரத்த இழப்பு போன்றவை இருக்காது. எனவே, சிகிச்சை பெற்ற அடுத்த நாளில் இருந்தே அன்றாட வேலைகளைச் செய்யலாம். முடி எடுக்கப்பட்ட இடங்களிலும் அதிக பாதிப்புகள் இருக்காது.
மூன்று முதல் ஏழு நாள்களில் காயங்கள் முழுமையாகக் குணமாகும். சிகிச்சை செய்த ஒரு மாதத்துக்குப் பிறகு 1.5 சென்டிமீட்டர் நீளம் வரை முடி வளர்ந்துகொண்டே வரும். சிகிச்சை செய்த ஆறாவது மாதத்தில் நல்ல முடி வளர்ச்சியைக் காணலாம்.
மிகவும் அரிதாகவே முடி மாற்று சிகிச்சை மேற்கொண்ட பிறகு, பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாற்று சிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளையும் கவனிப்பையும் சரியாகச் செய்தால் நோய்த்தோற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாது. இந்தச் சிகிச்சைக்கான செலவும் குறைவாக இருக்கும். வழுக்கையின் தன்மையைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும். 90 சதவிகிதம் நல்ல வெற்றி விகிதத்தைத் தருவதால் இந்தச் சிகிச்சையைத் தயக்கமின்றி செய்யலாம்” என்கிறார்