டான்சில் பாதிப்புக்குரிய சிகிச்சை
21 Aug,2019
அடிநா சதை எனப்படும் டான்சில் ஒவ்வொருவருக்கும் தொண்டையின் இரண்டு பகுதிகளிலும் அமைந்திருக்கும். இந்த சதையை வயிற்றின் காவலாளி என்றும், உடலின் காவலாளி என்றும் மருத்துவத் துறையினர் குறிப்பிடுவார்கள்.
ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவு, திரவம் என எதுவாக இருந்தாலும் முதலில் அதன் சுவையை இந்த டான்சில் எனப்படும் அடிநாச் சதை அறிந்து கொண்டு, அதை பற்றிய தகவலை மூளைக்கு தெரிவித்து, மூளையின் சமிக்ஞை கிடைத்த பிறகே, அதனைத் தொண்டை வழியாக இரைப்பைக்கு அனுப்புகிறது.
உங்கள் தொண்டை பகுதியில் அமைந்திருக்கும் டான்சில் எனப்படும் இந்த உறுப்பு, பாக்டீரியாக்களை இனம் கண்டு, அதனை அழிப்பதற்கான தூண்டுதல் பணியையும் செய்கிறது. அத்துடன் உங்களுக்கு தேவையான நோயெதிர்ப்பு ஆற்றலை உற்பத்திச் செய்யும் உறுப்பாகவும் இவை திகழ்கின்றன.
நாம் சுவாசிக்க கூடிய அசுத்த காற்று. நாம் சாப்பிடும் ஒவ்வாத உணவுகள், காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல் போன்றவற்றால் தொண்டை பகுதியில் உள்ள டான்சில் பகுதி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் இந்தப் பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால், உடலில் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பாதிப்பும் உருவாகிறது.
டான்சிலிட்டீஸ் என்ற இத்தகைய பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு கேடு உருவாகும். சிலருக்கு அவர்களின் சிறுநீரகமும் பாதிக்கப்படக்கூடும். டான்சிலிட்டீஸ் பாதிப்பு அதிகமாக இருந்தால், அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள். இதற்காக நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுமோ என கவலைக்கொள்ளவேண்டம். அந்த பணியை அடினாய்டு எனப்படும் மாற்று உறுப்பு மேற்கொள்ளும்.