முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமான இடைவெளிக்காகப் பின்பற்றப்பட்டு வந்த கருத்தடை முறைகள், தற்போது முதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவதற்கும் சில தம்பதிகளுக்குத் தேவைப்படுகின்றன.
கருத்தடைச் சாதனங்களின் வகைகள், பயன்கள், யாருக்கு எந்தக் கருத்தடை முறை பொருந்தும், பக்கவிளைவுகள் என்னென்ன ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர்.
இது அந்தக்கால வழிமுறை!
அந்தக்காலத்தில் கருத்தரிக்காமலிருக்க, பாதுகாப்பான நாள்களைத் தாம்பத்யத்துக்குக் கையாண்டார்கள். அதாவது, மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து 10-வது நாளை காலண்டரில் குறித்துவைத்துக்கொண்டு, அன்றிலிருந்து 18-வது நாள்வரை தாம்பத்யத்தைத் தவிர்த்தார்கள். ஏனென்றால், இவையே கருமுட்டை உருவாக வாய்ப்புள்ள நாள்கள்.
தற்போது பெண்கள் பலருக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பதால், கருமுட்டை எப்போது உருவாகும் என்பதே தெரிவதில்லை. அதனால், இந்த வழிமுறையை இன்று பல பெண்களால் கடைப்பிடிக்க முடிவதில்லை.
இந்தக்கால ‘ஆப்’பை நம்பலாமா?
எந்தெந்த நாள்களில் தாம்பத்ய உறவைத் தவிர்த்தால் கருத்தரிக்காது என்பதைத் தெரிந்துகொள்ள இன்றைக்கு ‘ஆப்’கள் வந்துவிட்டன.
ஆப்பில், உங்களுடைய மாதவிலக்கு நாள்களைப் பதிவுசெய்துவிட்டீர்கள் என்றால், அது சொல்லும் பாதுகாப்பான நாள்களில் மட்டும் உறவுகொள்ளலாம். ஆனால், இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய்கொண்ட பெண்களுக்கு உதவாது.
எத்தனை வகை கருத்தடை முறைகள் இருக்கின்றன?
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கருத்தடை முறைகள் என்று பார்த்தால் வாய் வழியாகச் சாப்பிடும் மாத்திரைகள், ஊசி, கர்ப்பப்பையில் பொருத்தும் காப்பர் டி என மூன்று முறைகள் இருக்கின்றன.
புதிதாகத் திருமணமானவர்களுக்குஸ
புதிதாகத் திருமணமானவர்களுக்கு, வீரியம் குறைவான கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். மாதவிடாய் வந்த 5-வது நாளிலிருந்து 21 நாள்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், மூன்று வருடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
அதிலும், வருடத்துக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிடாமல் இடைவெளி விட வேண்டியது அவசியம்.
கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும் காலகட்டத்தில் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஹார்மோனல் இம்பேலன்ஸ் வராமல் இருப்பதற்காக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இரண்டு மாதவிடாய்களின் இடையே லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம்; மாதவிடாய் ஒழுங்கற்றுப் போகலாம்; மாதவிடாய் வருகிற நாள்கள் குறைந்தும் போகலாம். உதாரணமாக, ஐந்து நாள்கள் மாதவிடாய் வந்துகொண்டிருந்தவர்களுக்கு மூன்று நாள்கள், மூன்று நாள்கள் வந்தவர்களுக்கு இரண்டு நாள்கள் அல்லது ஒன்றரை நாள் என்று குறைந்து போகலாம். மருத்துவரின் அறிவுரையை மீறி இந்த மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகளும் ஏற்படலாம்ஸ கவனம்.
அடுத்த குழந்தைக்கு இடைவெளிவிடும் அம்மாக்களேஸ
ஏற்கெனவே குழந்தை/குழந்தைகள் இருக்கும் நிலையில், அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள போதிய இடைவெளி விட வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களுக்கு, காப்பர் டி சரியான தேர்வு. இது காப்பரில் செய்த ‘T’ வடிவ கருத்தடைச் சாதனம்.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது, 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது என இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. எந்த வகை காப்பர் டி பொருத்திக்கொண்டாலும், அது நகராமல் இருக்கிறதா என்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
காப்பர் டி-யுடன் இணைந்திருக்கும் நைலான் நூல் தெரிகிறதா என்று வீட்டிலேயே நீங்களும் பரிசோதித்துக்கொள்ளலாம்.
அடிக்கடி கனமான பொருள்கள் மற்றும் தண்ணீர்க் குடங்களைத் தூக்கினாலோ அல்லது முக்கி மலம் கழித்தாலோ காப்பர் டி வெளியே வந்துவிடலாம். இது கொஞ்சம் நகர்ந்தாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடினமல்லாத அலுவலக வேலை பார்க்கும் பெண்கள் என்றால், 10 வருடங்களுக்கான காப்பர் டி-யையே பொருத்திக்கொள்ளலாம். பக்கவிளைவுகளால் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
இது எல்லாப் பெண்களுக்குமானது!
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கருத்தடை ஊசி போட்டுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளிலும் இந்த ஊசி போடப்படுகிறது. இதன் பக்கவிளைவு என்று பார்த்தால், சில பெண்களுக்கு நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு மாதவிடாய் வராது.
அவர்களுக்கு மாத்திரை கொடுத்து மாதவிடாயை வரவழைத்து, உதிர நாள்கள் முடிந்த பின்னர் மீண்டும் கருத்தடை ஊசி போடப்படும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும்.
இது நிரந்தரக் கருத்தடை!
கருத்தடை அறுவை சிகிச்சையில் (Tubectomy), கருக்குழாய்களைக் கத்தரித்து தையல் போட்டுவிடுவோம். இதனால் சினைப்பையில் உருவாகும் கருமுட்டையால் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. பொதுவாக, `அடுத்து குழந்தை வேண்டாம்’ என்று முடிவெடுக்கும் பெண்கள் பலரும் பிரசவத்தின்போதே இந்த அறுவை சிகிச்சையையும் செய்துகொள்வார்கள்.
சுகப்பிரசவம் எனில் 10 நாள்களில் எல்லா வேலைகளையும் செய்ய முடிகிற அளவுக்கு உடம்பு நார்மலுக்குத் திரும்பிவிடும். சிசேரியன் பிரசவம் எனில், சிசேரியன் தையல்களுக்காக எடுத்துக்கொள்ளும் ஓய்வு நாள்களே போதுமானவை.
9கருத்தடை மாத்திரையை
நிறுத்திய பின்னர் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுமா?
கருத்தடை மாத்திரையைப் பொறுத்தவரை, நம் உடலிலிருக்கும் ஹார்மோன்களைத்தான் கூடுதலாக மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்கிறோம்.
அதனால், இந்த மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளிவருவதைத் தடை செய்யும், அவ்வளவுதான். மாத்திரை சாப்பிடுதை நிறுத்தியவுடன், கருமுட்டை வெளிவர ஆரம்பித்துவிடும். இதனால், கருத்தரிப்பதில் எந்தப் பிரச்னையும் வராது.
கருத்தடை மாத்திரையில் இருக்கும் ஹார்மோன் புற்றுநோயை ஏற்படுத்துமா?
பொதுவாக, 40 வயதுக்கு மேல் ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டால் புற்றுநோய் வரலாம் என்பதால் அந்த வயதுப் பெண்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்க மாட்டோம்.
கர்ப்பப்பையின் எண்டோமெட்ரியம் லேயர் தடிமனாக இருந்தால், அது புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிரச்னை இருக்கும் பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையைப் பரிந்துரை செய்ய மாட்டோம்.
யாரெல்லாம் கருத்தடை மாத்திரை சாப்பிடக் கூடாது?
சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்வதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், கர்ப்பப்பையில் நார்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு கருத்தடை மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.
மீறிச் சாப்பிட்டால் நார்க்கட்டியானது மேலும் வளர ஆரம்பித்துவிடும். அதனால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல், உங்கள் உடலைப் பற்றி அறிந்துகொள்ளாமல், யாரும் தாங்களாகவே கருத்தடை மாத்திரையைச் சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. மருத்துவரைச் சந்தித்து, முறையான பரிசோதனைகள் செய்த பிறகுதான் கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடைசெய்யப்பட்ட கருத்தடை முறைகள்!
சில வருடங்களுக்கு முன்னர், வாரத்துக்கு ஒரு முறை சாப்பிடக்கூடிய கருத்தடை மாத்திரை இருந்தது.
தற்போது அது தடைசெய்யப்பட்டுவிட்டது. இதேபோல, பிறப்புறுப்பில் வைக்கும் கருத்தடை மாத்திரை, தடவும் கருத்தடை க்ரீம் ஆகியவையும் தற்போது தடைசெய்யப்பட்டுவிட்டன.
மருத்துவர்கள் தவிர்க்கும் கருத்தடை முறைகள்
செர்விகல் கேப்
இதைச் சரியாகப் பொருத்தினால்தான் கரு உருவாவதைத் தடைசெய்யும். வேலைப்பளுவில் மாத்திரை சாப்பிடுவதற்கே மறந்துபோகும் பெண்களுக்கு இந்த முறை சரியாக வராது என்பது என் கருத்து. டிஷ்யூ பேப்பர்போலிருக்கும் செர்விகல் கேப்பை உறவுக்கு 10 நிமிடங்களுக்கு முன்னர், சுத்தமான கையால் எடுத்து, வஜைனாவின் உள்ளே வைக்க வேண்டும்.
இது வஜைனாவின் மேற்பகுதியை அப்படியே மறைத்துக்கொள்ளும். உறவின்போது இது உள்ளே போய்விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. உறவு முடிந்ததும் செர்விகல் கேப்பை வெளியே எடுத்து, சுத்தமாகக் கழுவிவிடவும். இதை மாதவிடாய் நாள்கள் தவிர, மற்ற எல்லா நாள்களிலும் பயன்படுத்தலாம். இதைச் சுத்தமாகப் பராமரிக்கும்பட்சத்தில் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
பெண்களுக்கான காண்டம்
பார்ப்பதற்கு ஆண்கள் பயன்படுத்தும் காண்டம் போலவேதான் இருக்கும்.
அதைப்போலவே கிழிந்துவிடும் ஆபத்தும் இதில் அதிகம். ஒவ்வொரு முறையும் புது காண்டம் பயன்படுத்த வேண்டும். இதைப் பயன்படுத்தும்போது கணவனுக்கோ மனைவிக்கோ பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டால், காண்டம் சரியாக பொருத்தப்படவில்லை என்று அர்த்தம். ஒருவேளை அரிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
செர்விகல் ரிங் அல்லது ஹார்மோனல் வஜைனல் ரிங்
மாதவிடாய் முடிந்த 5 அல்லது 6-வது நாள் இந்த ரிங்கை வஜைனாவுக்குள் வைத்துவிட்டு, அதிலிருந்து 21-வது நாள் இந்த ரிங்கை எடுத்துவிடலாம். தோராயமாக
2 அல்லது 3 நாள்களில் மாதவிடாய் வந்துவிடும். மீண்டும் மாதவிடாய் முடிந்த 5 அல்லது 6-வது நாள் இந்த ரிங்கை பிறப்புறுக்குள் வைக்க வேண்டும். `குழந்தை வேண்டும்’ என்று முடிவெடுக்கும்வரை இப்படியே தொடர்ந்து செய்யலாம்.
இது உடலுக்குள் வெளியிடும் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியேறுவதைத் தடுக்கும். மேலும் இது செர்விகல் மியூக்கஸை கெட்டிப்படுத்துவதால் விந்தணு, முட்டையைச் சேர்வது தடுக்கப்படும். மாத்திரை சாப்பிட முடியாதவர்களும், சீரான மாதவிடாய் சுழற்சி இல்லாதவர்களும் இதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று முறைகளிலுமே கருத்தடைச் சாதனங்கள் பிறப்புறுக்குள் செல்வதால், சுகாதாரக் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால்தான், இந்த முறைகளைக் கூடியவரை பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
‘சுகாதாரமாகப் பயன்படுத்த முடியும்’ என்பவர்கள் பயன்படுத்தலாம். எப்படிப் பொருத்திக்கொள்வது என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
நம்பத்தகுந்த கருத்தடை முறைகள்
கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி சாப்பிட்டுவந்தால், நிச்சயம் கருத்தரிக்காது. இதேபோல, கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கும் கருத்தரிக்காது. கருத்தடை ஊசியை மூன்று மாதகால இடைவெளியில் சரியாகப் போட்டு வந்தாலும் கருத்தரிக்காது.
தேதியை மறந்து மூன்று மாதங்களுக்கு மேல் விட்டுவிட்டீர்களென்றால், கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மற்ற கருத்தடைச் சாதனங்கள், வழிமுறைகளைவிட மேலே சொன்ன மூன்றும் நம்பத்தகுந்த கருத்தடை வழிமுறைகள்.
ஆண்களுக்கான கருத்தடை முறைகள்!
பெண்களுக்கான பல கருத்தடை முறைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் அசௌகர்யங்கள், பக்கவிளைவுகள், நோய்கள் பற்றியெல்லாம் பார்த்தோம். மாறாக, ஆண்களுக்கான கருத்தடை முறைகள் மிக மிக எளிமையானவை. ஆனாலும் அதற்கு ஆண்கள் முன்வராதது, ‘உனக்கு என்ன ஆனாலும் சரி, நீதான் கருத்தடைக்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். இது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் என்னால் முடியாது’ என்ற அவர்களின் மனோபாவத்தையே காட்டுகிறது. குழந்தை வளர்ப்பிலிருந்து வீட்டு வேலைகள்வரை எத்தனையோ விஷயங்களில் பெண்களின் பாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள் பலரை இன்று பார்க்கிறோம்.
அதேபோல, கருத்தடை முறைகளிலும் பங்களிக்க அவர்கள் முன்வர வேண்டும்.
காண்டம்!
ஆண்களுக்கான காண்டம் பயன்படுத்த எளிமையானது.
இது 98% நம்பகத்தன்மைகொண்ட சாதனம். மேலும், இது பால்வினை நோய்த்தொற்றிலிருந்தும் பாதுகாப்பு தரும்.
வாசெக்டமி (Vasectomy) அறுவை சிகிச்சை!
இது மிகவும் சிறிய அறுவை சிகிச்சை. குறிப்பாக, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையைவிட மிக மிக எளிமையானது. இதில், விந்து வெளியேறுவதைத் தடுக்க விந்துநாளத்தை துண்டித்துக் கட்டி, அல்லது அடைப்பு ஏற்படுத்தப்பட்டு சிசிக்சை மேற்கொள்ளப்படும். அன்றே வீட்டுக்குச் சென்றுவிடலாம்.
இதனால் ஆணுக்கோ, பெண்ணுக்கோ தாம்பத்ய சுகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. பெண்களுக்கான அறுவை சிகிச்சையைவிட செலவு குறைவானது; கருத்தடைக்கு உத்தரவாதம் தரக்கூடியது. பிற்காலத்தில் தேவை ஏற்பட்டால், இந்த அறுவை சிகிச்சையை ரத்துசெய்ய மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டால் போதும்.
சித்த மருத்துவமும் கருத்தடையும்!
சித்த மருத்துவத்தில் தனியாக கருத்தடை மாத்திரை கிடையாது. ஆனால், கருத்தடை முறைகள் இருக்கின்றன.
மற்ற மருத்துவ முறைகள்போலவே, இவற்றையும் 100% நிச்சயமானவை என்று சொல்ல முடியாது. ஆனால், 100% பாதுகாப்பானவை.
செம்பரத்தை என்கிற செம்பருத்தி மலர்!
`செம்பரத்தை’ எனப்படும் மலர் பார்ப்பதற்கு பருத்திப் பூபோலவே வெடித்துப் பூத்திருக்கும். அதனாலேயே இந்த மலரை, `செம்பருத்தி’ என்றும் அழைப்பார்கள்.
நாகப்பழ நிறத்தில் இருக்கும் இந்த மலர்கள் ஈரோடு மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன. தவிர, மூலிகைத் தோட்டங்களிலும் கிடைக்கும். 5 அல்லது 6 எண்ணிக்கையில் இந்தப் பூக்களை மாதவிடாய் நேரத்தில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால், கருத்தரிக்காது.
கருஞ்சீரகமும் எள்ளும்!
பெண்களில் சிலர் அதிக உணர்வுநிலை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களால், தாம்பத்யம் முடிந்தவுடனேயே ‘இந்த உறவு கருவுறுதலில் முடியும்’ என்பதை முன்கூட்டியே உணர முடியும். இது எல்லாப் பெண்களுக்கும் நிகழும் என்று சொல்ல முடியாது. இவர்கள், `குழந்தை வேண்டாம்’ என நினைத்தால், உறவுக்கு அடுத்த நாள் காலையில், தலா ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் எள் இரண்டையும் லேசாக வறுத்து, பொடி செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக வற்றியதும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடித்துவிடவும்.
‘இப்படிப்பட்ட உணர்வெல்லாம் வரவில்லை, ஆனால் கருத்தரித்துவிட்டால் என்ன செய்வது?’ என்று பயப்படும் பெண்கள், மாதவிடாய் வருவதற்கு 5 முதல் 7 நாள்களுக்கு முன்னதாக, இதே பொடியை தினமும் காலையிலும் மாலையிலும் கஷாயம் வைத்துக் குடிக்கலாம் அல்லது அப்படியே வெந்நீரில் கலந்தும் குடித்துவிடலாம். மாதவிடாய் வந்ததும் நிறுத்திவிட வேண்டும்.
இதுவும் கருத்தரிப்பைத் தடுக்கும். அளவு மேலே சொன்னதுதான்.
உடம்பின் சூடும் கருத்தடைதான்!
உடலில் ஓர் அளவுக்கு மேல் சூடு அதிகமானால் கர்ப்பம் தங்காது. எனவே, உடல் சூட்டை அதிகரிக்கும் பப்பாளி, அன்னாசி போன்ற பழங்கள், சிக்கன் சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
பால் கொடுக்கும்போது கருத்தரிக்க மாட்டார்கள் என்பது உண்மையா?
குழந்தைக்குப் பாலூட்டும்போது `புரோலாக்டின்’ என்ற ஹார்மோன், பெண்களின் உடம்பில் சுரந்துகொண்டிருக்கும். அப்போது, கருமுட்டை உருவாதல் தடைப்பட்டிருக்கும். அதனால்தான், ‘குழந்தைக்குப் பால் கொடுக்கிற காலத்துல கருத்தரிக்காது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்போது உடலின் இந்தச் செயல்பாடு முன்போல இல்லை. தவிர, ஒருவருக்கொருவர் மாறுபடவும் செய்கிறது. சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு 10 மாதங்களுக்கு மாதவிடாய் வராது. சிலருக்கு அடுத்த மாதமே வந்துவிடும். அதனால், ‘பால் கொடுக்கும்போது கருத்தரிப்பு நிகழாது’ என்பதை நம்பாதீர்கள்.
பெரி மெனோபாஸா, கர்ப்பமாஸ
இந்தக் குழப்பம் ஏன் நிகழ்கிறது?
சில பெண்கள் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார்கள். ஒன்றிரண்டு மாதங்கள் மாதவிடாய் வரவில்லையென்றால், ‘பெரி மெனோபாஸ்’ என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். ஆனால், பிறகுதான் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அவர்கள் உடம்பில் மாதவிடாய் வரும் அளவுக்கு ஹார்மோன் சுரப்பு இருக்காது; ஆனால், கருமுட்டை உருவாகும் அளவுக்கு ஹார்மோன் சுரப்பு இருப்பதுதான் இதற்குக் காரணம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், சில பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்றெல்லாம் ஒழுங்கற்று மாதவிடாய் வரும். ஆனால், திருமணம் முடிந்தவுடன் கருத்தரித்துவிடுவார்கள். இதற்குக் காரணமும் மேலே சொன்ன ஹார்மோன் சுரப்புதான்.
கையில் இம்ப்ளான்ட் செய்யும் கருத்தடை முறை பற்றித் தெரியுமா?
தீக்குச்சி அளவில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருக்கும் கருத்தடைச் சாதனம் இது. முழங்கைக்குச் சிறிது மேலே, தசையில், வலி தெரியாமல் இருக்க மரத்துப்போகும் ஊசி போட்டு, இதைச் சொருகிவிடுவார்கள். இந்தக் கருத்தடைச் சாதனம், கருத்தடை மருந்தை, தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்களின் உடலில் வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அதனால், கரு உருவாவதையும் தடுக்கும்.
3 வருடங்கள் கழித்து, வேறு மாற்றிவிடலாம். ஆனால், தற்போது இது உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்தும் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறதா?
இருக்கிறது. ரொம்பவும் நுணுக்கமான அறுவை சிகிச்சை இது. அந்த இடம் மிகவும் மென்மையான திசுக்கள்கொண்ட பகுதி. மருத்துவர்கள் என்னதான் கருக்குழாயைத் துண்டித்து, தையல்போட்டு வைத்தாலும்கூட, சிறிதளவு ரத்த ஓட்டம் கிடைத்தாலும் அந்தக் குழாய்கள் இணைந்துவிடலாம். ஆனாலும், இதற்கான வாய்ப்பு வெறும் ஒரு சதவிகிதம்தான்.
கருத்தடை செய்த கருக்குழாய்களை மீண்டும் இணைக்க முடியுமா?
தாராளமாக இணைக்க முடியும். கருத்தடையை ஆரம்பத்தில் லேப்ராஸ்கோப்பி முறையில்தான் செய்துவந்தார்கள். இந்த முறையில், கருக்குழாயை மடித்து ஒரு வளையத்தை மாட்டிவிட்டிருப்பார்கள். இதன் பிறகுதான், கருக்குழாயைத் துண்டித்து தையல்போட ஆரம்பித்தார்கள். லேப்ராஸ்கோப்பி முறையில் கருத்தடை செய்யப்பட்டிருந்தால், அந்த வளையத்தை எடுத்துவிட்டு, ரத்த ஓட்டத்தைத் தூண்டிவிட்டாலே போதும்.
கருமுட்டை மறுபடியும் கர்ப்பப்பைக்குச் செல்ல ஆரம்பித்துவிடும். இதேபோல, கருக்குழாயைத் துண்டித்து தையல்போட்ட கருத்தடை முறையையும், மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் சரிசெய்ய வாய்ப்பிருக்கிறது.
இனப்பெருக்க உறுப்பு வழியாகவும் செய்தார்கள்!
கருத்தடை சிகிச்சையை முன்பெல்லாம் இனப்பெருக்க உறுப்புவழியாகவும் செய்திருக்கிறார்கள். இந்த முறையில் வயிற்றில் தழும்பு வராது என்பதுதான் சிறப்பு.
ஆனால், அதில் சுகாதாரக் குறைவு காரணமாக நோய்த்தொற்று பிரச்னை அதிகம் ஏற்பட்டதால், இந்திய அரசு அந்த முறையைத் தடை செய்துவிட்டது.
வேப்பிலையும் வெற்றிலையும்ஸ
அந்தக்காலத்தில், `மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து கணக்கெடுத்து 10-வது நாளிலிருந்து தொடர்ந்து 8 முதல் 10 நாள்களுக்கு இரண்டு வெற்றிலை சாப்பிட்டாலே கருத்தரிக்காது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
வெற்றிலை மட்டுமல்ல, வேப்பிலையும் இயற்கைக் கருத்தடை முறைதான். மேலே சொன்ன நாள்களில், இரண்டு வெற்றிலை அல்லது 5 வேப்பிலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். இவற்றைக் காலையில் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.