சைபர்காண்டிரியா குறித்து மனநல மருத்துவர்
26 Jul,2019
முன்பெல்லாம் மக்கள் உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு பெரியவர்களிடமோ, மருத்துவர்களிடமோ ஆலோசனை கேட்பார்கள். இன்று கைவைத்தியம் காணாமல் போய் கணினி வைத்தியம் பிரபலமாகிவிட்டது. உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு இணையத்தில் தீர்வு தேடுவது வழக்கமாகிவருகிறது. `இது ‘சைபர்காண்டிரியா’ (Cyberchondria) எனப்படும் மனநலப் பிரச்னையாக இருக்கலாம்’ என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
‘‘சிலருக்குத் தங்கள் ஆரோக்கியம் குறித்த பயம் எப்போதும் இருக்கும். எதையாவது படித்தாலோ அல்லது யாராவது தனக்கு ஏதோ பிரச்னை இருப்பதாகச் சொன்னாலோ உடனே தனக்கும் அந்த பாதிப்பு இருக்குமோ என்று பயப்படுவார்கள். இது ஒரு வகையான பதற்றக் குறைபாடு (Anxiety Disorder). அடுத்த கட்டமாக சிலர் மருத்துவரை நாடுவார்கள். மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றுவார்கள். இன்னும் சிலர் மருத்துவரின் அறிவுரையில் திருப்தியடையாமல், அவர் சொன்னது சரியாக இருக்குமோ என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள். மருத்துவர்களை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள். அடிப்படையில் இதற்கு `ஹைப்போகாண்டிரியா’
(Hypochondria) என்று பெயர். அதாவது நோய்களைப் பற்றி அடிக்கடி நினைப்பது.
ஹைப்போகாண்டிரியாவிலிருந்து வந்ததுதான் சைபர்காண்டிரியா. ஹைப்போகாண்டிரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி ஆரோக்கியம் சார்ந்த தகவல்களைப் படிப்பார்கள் அல்லது மருத்துவரை அணுகுவார்கள். ஆனால், சைபர்காண்டிரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இணையத்தில் தேடுவார்கள். இன்றைக்கு மருத்துவரைவிட இணையத்தை மக்கள் அதிகம் நம்புகிறார்கள். ஒருவர் இணையத்தில் தனக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாகப் பதிவுசெய்தால் போதும், `உங்களுக்கு இன்னின்ன நோய்களெல்லாம் இருக்கலாம்’ என்ற தகவல்கள் கொட்டும். உதாரணமாக, ஒருவருக்குக் காலையில் தலைவலி ஏற்பட்டிருக்கலாம். முதல்நாள் இரவு அவர் சரியாக உறங்காததே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர், `தலைவலி’ என்று இணையத்தில் தேடும்போது அது மூளைக்கட்டிக்கான அறிகுறி என்பதை முதலில் காட்டும். உடனே பயந்து போய் ஸ்கேனும் எடுப்பார். உடம்பு சரியில்லை என்ற எண்ணத்திலேயே இருப்பார். இந்த பயத்திலிருந்து அவரால் மீளவே முடியாது. இங்கு நோயே அந்த `பயம்’தான்.
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை என நம்பக் கூடாது. மேலும், இவர்களின் பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு இணையத்திலேயே பொய்யான தகவல்களைப் பரப்பி, தேவையற்ற பரிசோதனைகளைச் செய்யவைத்து பணம் பறிக்கும் ஏமாற்றுவித்தைகளும் நடக்கின்றன. அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முடிந்தவரை இணையத்தில் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தேடாமல் மருத்துவரை அணுகுங்கள். அந்த மருத்துவர் சொன்ன தகவல்கள் சரியா, தவறா என மீண்டும் இணையத்தில் தேடாதீர்கள். அந்த எண்ணத்திலிருந்து மீள முடியாவிட்டால் மனநல ஆலோசகரை அணுகுங்கள்’’ என்கிறார் ரங்கராஜன்.