பாதத்தை சீரமைப்பதற்கான சத்திர சிகிச்சை
18 Jul,2019
பெண்களில் பலரும் ஹைஹீல்ஸ் எனப்படும் கால் குதியுயர் காலணியை அணிந்து வணிக வளாகங்களிலும், கல்லூரிகளிலும், விழா மேடைகளிலும் வலம் வர விரும்புகிறார்கள்.
ஆனால் அவர்களின் பாத அமைப்பு தட்டையாக இருப்பதால் அவர்களால் இந்த கால் குதியுயர் காலணியை அணிந்து நடக்க முடிவதில்லை. இதனால் அவர்கள் மனதளவில் சோர்வடைந்து விடுகிறார்கள். அத்துடன் இத்தகைய தட்டையான பாத அமைப்பை கொண்டவர்கள், அதனை சீராக்குவதற்குரிய சத்திர சிகிச்சையை செய்து கொள்ளாவிடில், அவர்களின் நாளாந்த பணிகளுக்காக நடப்பதே சிரமமாகிவிடும்.
ஆகவே தட்டையான பாத அமைப்பைக் கொண்டவர்கள், உரிய காலத்தில் சத்திரசிகிச்சை செய்து அதனை சீரமைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு தட்டையான பாத அமைப்பு இருந்தால், அவர்கள் வளர வளர அந்த அமைப்பு மாறக்கூடும் என்று பெற்றோர்களும், மருத்துவர்களும் காத்திருக்கக் கூடும். ஆனால் சில காரணங்களால் ஏற்படும் தட்டையான பாத அமைப்பை அதற்குரிய சத்திர சிகிச்சை செய்துதான் சீரமைக்க வேண்டும்.
இந்த சத்திரசிகிச்சையை உரிய காலகட்டத்தில் செய்து கொள்ளாமல், தவிர்த்தால், அவர்கள் நாளடைவில் குதிகால் வலியால் தவிப்பார்கள். குறிப்பாக achilles tendon எனப்படும் தசைநார், இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால், அதனால் ஏற்படும் தட்டையான பாத அமைப்பு சத்திர சிகிச்சை செய்துதான் சீரமைக்க முடியும். இத்தகைய சத்திரசிகிச்சையின் போது அந்த தசை நாரை இயல்பான நிலைக்கு மாற்றி அமைப்பார்கள்.
இது மட்டுமின்றி Congenital Vertical Talus, Accessory Navicular, Tarsal Coalition போன்ற சில காரணங்களாலும் தட்டையான பாத அமைப்பு ஏற்படக்கூடும், அதே தருணத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணுக்காலின் பின்பகுதியின் அமைந்திருக்கும் Tibialis Posterior Tendon என்ற தசைநார் பாதிக்கப்பட்டாலும் அல்லது அதனுடைய செயற்பாட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும் தட்டையான காத அமைப்பு உருவாகலாம்.
இத்தகைய தருணங்களில் மருத்துவர்கள் தலை முதல் கால் வரை அனைத்து வகையான தசைநார்களையும் பரிசோதித்து, எதன் காரணமாக தட்டையான பாத அமைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக கண்டறிந்து, அதற்குரிய சத்திரசிகிச்சை செய்து,அதனை சீரமைப்பார்கள்.