புகை பிடிப்பதை விட உடல் பருமனே சில புற்றுநோய்களுக்கு முக்கிய காரணி - ஆய்வில் தகவல்
06 Jul,2019
பிரிட்டனில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் புகை பிடித்தலைவிட சில வகை புற்று நோய்கள் உண்டாவதற்கு உடல் பருமன் முக்கிய காரணியாக உள்ளது தெரியவந்துள்ளது.
பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது புகைப்பழக்கத்தை விடவும் உடல் பருமன் குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் போன்றவற்றுக்கு முக்கிய காரணியாக அமைகிறது என்கிறது.
மில்லியன் கணக்கிலான மக்கள் உடல் பருமன் காரணமாக புற்றுநோய் அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
ஆனால் உடல்பருமன் - புற்றுநோய் தொடர்பாக இந்த நிறுவனம் வைத்திருந்த பிரசார பதாகை பருமனாக இருப்பவர்களை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாக விமர்சனத்துக்குள்ளானது.
ஆனால் இந்த தொண்டு நிறுவனம் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு. ஆளாவது முதல்முறையல்ல. பிப்ரவரி மாதம், நகைச்சுவை நடிகர் சோஃபி ஹகென் ட்விட்டரில் இத்தொண்டு நிறுவனத்தின் பிரசாரம் குறித்து விமர்சித்தார்.
ஒரு ட்விட்டர் பயனர் உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றை இணைத்து பிரசாரம் செய்வது புதிய மலிவை எட்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு என்பது அதிக உடற்பருமன் கொண்டவர்களை குறை கூறுவதல்ல என பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகைப்பிடித்தல், உடல் பருமன் இரண்டுமே புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதைச் சொல்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்கிறது .
ஆனால் பிரிட்டனில் உடல் பருமன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 22,800 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அதே சமயம் புகைப்பிடித்தல் காரணமாக 54,300 பேர் பாதிப்படைகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
நான்கு விதமான புற்றுநோய்கள் ஆய்வில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
குடல் புற்றுநோய்
சிறுநீரக புற்றுநோய்
கல்லீரல் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்
புகை பிடித்தல் விகிதம் குறைந்து வருவதும், உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருவதும் கவலைப்படக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்ட நிலையிலும் இதன் பின்னணியில் இருக்கும் உயிரியியல் ரீதியிலான நுட்பங்கள் குறித்து இன்னும் முழுமையாக அறிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை.
கொழுப்பு செல்கள் கூடுதல் ஹார்மோன்களை உண்டாக்குகின்றன. இதையடுத்து வளர்ச்சிக் காரணிகள் உடலில் உள்ள அணுக்களை மேலும் பிரியச் செய்கின்றன. இதனால் புற்றுநோய் அணுக்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
உடற் பயிற்சி, விளையாட்டு முதலான உடல் செயல்பாடுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடல் பருமனோடு இருப்பதால் ஒருவருக்கு நிச்சயம் புற்றுநோய் வரும் என்பது அர்த்தமல்ல. ஆனால் புற்றுநோய் அபாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே இந்த ஆய்வின் பொருள்.
எவ்வளவு அதிகம் உடல் எடை கூடுகிறதோ அல்லது எவ்வளவு நாள்களாக உடல் பருமனோடு இருக்கிறார்களோடு அதற்கேற்ப அபாய அளவு அதிகரிக்கும்.
பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சொல்வதன்படி 13 வெவ்வேறு புற்றுநோய்கள் உடல்பருமனோடு தொடர்பில் உள்ளன.
அவை,
1. மார்பக புற்றுநோய் (மாதவிடாய் நின்ற பெண்களுக்கு)
2. குடல் புற்றுநோய்
3. கணைய புற்றுநோய்
4. உணவுக்குழாய் புற்றுநோய்
5. கல்லீரல் புற்றுநோய்
6. சிறுநீரக புற்றுநோய்
7. மேல் வயிறு புற்றுநோய்
8. பித்தப்பை புற்றுநோய்
9. கருப்பை புற்றுநோய்
10. சினைப்பை புற்றுநோய்
11. தைராய்டு புற்றுநோய்
12. இரத்தப் புற்றுநோய்
13. மூளை புற்றுநோய்
ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானம் குறித்து குறித்த விளம்பரங்களை கட்டுப்படுத்துவதில் அரசு மெத்தனமாக செயல்பட்டதாக பிரிட்டன் மருத்துவ அமைப்பு கூறுகிறது.
''புகை பிடித்தல் குறித்து விழிப்புணர்வு உள்ள நிலையில் உடல்பருமனை கட்டுப்படுத்துவதில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறிவிட்டோம்,'' என அந்த அமைப்பு கூறியுள்ளது.