40 வயதைத் தாண்டியவர்களுக்கு
03 Jul,2019
நீண்டநேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, மூலக்கோளாறு என பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன. அதிலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கு இவை அல்லாமல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் என நோய்கள் வரிசைகட்டி நின்று பாடாய்ப்படுத்தும். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, `40 வயதானவர்களை என்னென்ன நோய்கள் வந்து பாதிப்பை ஏற்படுத்தும், நடைப்பயிற்சி செய்யும்போது திடீரென்று மயக்கமடைந்தால் என்ன செய்வது, கண்ணாடி அணியச் சொல்லியும் அணியாவிட்டால் என்னாகும்’ என்பது போன்ற கேள்விகளை சர்க்கரைநோய் நிபுணர் ஆர்.கருணாநிதியின் முன்வைத்தோம். விரிவாகப் பேசினார் அவர்.
40 வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் முக்கிய நோய்கள் எவை, அவற்றைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் என்ன?
“40 வயதைத் தாண்டினாலே சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்வது அவசியம். முடிந்தால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது. இதுநாள்வரை நாம் உண்ட உணவுகளால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. மேலும், குறிப்பாக கண் மருத்துவர், பல் மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக்கொள்வது நல்லது.”
இன்சுலின் போடும் சர்க்கரை நோயாளிகளுக்கு நலக்குறைவு ஏற்பட்டால், இன்சுலின் போடுவதை நிறுத்திவிடுவார்கள். அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலை ஏற்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
“சர்க்கரை நோயாளிகளுக்கு நாங்கள் சொல்வது இதுதான். உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் வழக்கமாகச் செய்யும் செயல்களிலிருந்து மாறாமல் வழக்கம்போல் பின்பற்ற வேண்டும். இதை `சிக் டே ரூல்’ (Sick Day Rule) என்போம். குறிப்பாக, இன்சுலின் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் திடீரென இன்சுலின் போடுவதை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால் அவர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ, சரியான அளவு உணவு உண்ணவில்லை என்றாலோ இன்சுலின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். மாறாக, இன்சுலின் போடுவதை முற்றிலும் நிறுத்திவிடக் கூடாது. இல்லையென்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.”
40 வயதைக் கடந்தவரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ, மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டாலோ அது மாரடைப்பு என்று பயப்படுவார்கள். இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?
“என்றைக்குமே வருமுன் காப்பதுதான் நல்லது. மாரடைப்பைத் தடுக்க வேண்டுமென்றால் அளவாக உணவு உட்கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவற்றையும் மீறி சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு மாரடைப்பு இருந்ததென்றால் குடும்ப மருத்துவர் அல்லது இதய நோய் மருத்துவரிடம் சென்று எக்கோ, டிஎம்டி பரிசோதனை செய்ய வேண்டும். டிஎம்டி பரிசோதனை செய்து கொண்டால் மாரடைப்புக்கான அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். அத்துடன் அளவான முறையான உணவை உட்கொண்டால் மாரடைப்பு ஏற்படுவது குறையும். இவற்றையும் மீறி சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால் இருந்தாலோ, உடல் பருமனாக இருந்தாலோ வருடத்துக்கு ஒரு தடவையாவது இதயநோய் தொடர்பான பரிசோதனைகளை செய்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.’
நீண்டநேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும்போது முதுகு வலி ஏற்படுகிறது. இதேபோல் மூலம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்ப்பது எப்படி?
“அதிகநேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் வளைந்து, நெளிந்துகொண்டு உட்காராமல் நிமிர்ந்த நிலையில் உட்கார்வதே நல்லது. அத்துடன் நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அன்றாடம் உண்ணும் உணவில் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினால் மூலநோய் வருவதைத் தவிர்க்கலாம்.”
நடைப்பயிற்சியின்போது திடீரென மயக்கம் அடைந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
“சர்க்கரை நோய் பாதித்தவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் நடைப்பயிற்சியின்போது மயங்கி விழ அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் ஐ.டி கார்டு வைத்திருப்பதுபோல இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் `ஹெல்த் கார்டு’ வைத்திருக்க வேண்டும். அதில், `எனக்குச் சர்க்கரைநோய் இருக்கிறது. நான் மயங்கி கீழே விழுந்தால் என்னுடைய மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அதேநேரத்தில் அவருடன் செல்பவர்கள், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.”
40 வயதைத் தாண்டினாலே பார்வைக் கோளாறுகள் வருகின்றன. கண் மருத்துவர் கண்ணாடி அணியச் சொல்லி அறிவுறுத்திய பிறகும் கண்ணாடி போடாவிட்டால் அவர்கள் எத்தகைய பிரச்னைகளைச் சந்திப்பார்கள்.
“இதில் ஆண்களைவிடப் பெண்கள்தாம் அதிகம். கண்ணாடி போட்டால் அழகு போய்விடும் என்று பல பெண்கள் நினைத்துக்கொண்டு அதைத் தவிர்க்கிறார்கள். குறைந்த பவர்தானே கண்ணாடி போடாவிட்டால் ஒன்றும் ஆகாது என்று அலட்சியமாக இருந்தால், பிற்காலத்தில் அது பெரிய பவராக மாறிவிடும். பார்வை நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் கண்ணாடி போடச் சொல்கிறோம். அப்படிக் கண்ணாடி போடுவதைத் தவிர்த்தால் பார்வைக் குறைபாடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.”
நடைப்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்று பலர் நினைக்கிறார்கள். மூன்று மாதம் நடைப்பயிற்சி செய்தும் தொப்பை குறையவில்லை என்பதால், திடீரென நடைப்பயிற்சியை நிறுத்தினால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா?
“ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் உடற்பயிற்சி செய்தாலும்கூட எடை குறையாது, தொப்பையும் குறையாது. ஆனால் உள்ளுக்குள்ளே நமக்குத் தெரியாமலே மாற்றங்கள் ஏற்படும். சர்க்கரைநோய் பாதிப்பு குறையும் அல்லது அந்நோய் பாதிக்காதவர்களுக்கு அது வராமல் தடுக்கும். கொலஸ்ட்ரால் குறையும். நீண்டநாள் உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். `கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்பதுபோல் உடற்பயிற்சி ஒரு சேவிங்ஸ்தான். உடற்பயிற்சியை நிறுத்துவது உடலுக்கு நல்லதல்ல. தொடர்ந்து செய்வதுதான் நல்லது” என்கிறார்.