மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இன்று யாருக்கும் சாத்தியமில்லை. பதற்றம், தூக்கமின்மை, தலைவலி, கோபம், கவனச்சிதறல் என மனரீதியான பிரச்னைகளும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளும் தீவிர மன அழுத்தத்தின் பிரதிபலிப்புகளே! நோய் எதிர்ப்பு அமைப்பையே பலவீனமடையச் செய்கிற மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி எதிர்கொள்வதுஸ விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த். “வீடு, வேலையிடம் என எல்லா சூழல்களிலும் மன அழுத்தம் ஏற்படுகிறது. காரணங்களை அறிந்தால் அவற்றைக் கையாள்வதும் சுலபமாகும்.
பணியிடம்
பிடிக்காத வேலை, நெருக்கடியான பணிச்சூழல், பணி இலக்கு, அலுவலக அரசியல் என மன அழுத்தத்துக்குள் தள்ளும் காரணங்கள் ஏராளம்.
எப்படி எதிர்கொள்வது?
வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்காவிட்டால் மன அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க, நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலையைத் தொடங்குவதற்கு முன் எப்போது, எப்படி முடிக்கப்போகிறோம் எனத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். சிலர், ‘அதிக சம்பளம் கிடைக்கிறது’, ‘எளிமையாக இருக்கிறது’ என்கிற காரணங்களுக்காக விருப்பமில்லாத வேலையில் சேர்வார்கள். பிடிக்காத வேலையைச் செய்தால், அது நம்மை நிரந்தர மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும். பிடித்த வேலையில் சேர வேண்டும் அல்லது சேர்ந்த வேலையை விரும்ப வேண்டும். அது மட்டும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.
`நான் இப்படித்தான் இருப்பேன்’ என்ற வறட்டுப் பிடிவாதம் முன்னேற்றப் பாதைக்கு தடைக்கல்லாக மாறிவிடும். நம் வேலையைச் செய்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம்காட்ட வேண்டும். டீ பிரேக், உணவு இடைவேளை எனக் கிடைக்கும் நேரங்களில் அலுவலக வேலை பற்றிப் பேசாமல், பிடித்த விஷயங்களை நண்பர்களுடன் பேசலாம். வீட்டில் அலுவலகம் பற்றிப் பேசுவதையும், அலுவலகத்தில் வீடு தொடர்பான விஷயங்களைப் பேசுவதையும் நினைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சமூகம்
எல்லோரும் சமூகப் பிணைப்போடுதான் வாழ்ந்தாக வேண்டும். இல்லம், அலுவலகம் தாண்டி சமூகம் ஏற்படுத்தும் மன அழுத்தம் பாதிப்பின் தீவிரத்தை அதிகமாக்கலாம்.
எப்படி எதிர்கொள்வது?
எதைப் பார்ப்பது, எதைக் கேட்பது, எதைப் பேசுவது என்று சிந்தித்து முடிவெடுத்து உங்களுக்கு நீங்களே கடிவாளம் போட்டுக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் இப்போது தனிமனிதர்களின் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தை உருவாக்குவதிலும் முன்னணியில் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்துக்குமேல் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்துக்கான சில காரணிகளைத் தவிர்க்க முடியாது. நெருக்கமானவர்களின் மரணம், மிக மோசமான நோய்கள், நாடுதழுவிய பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை நம்மால் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. இத்தகைய சூழல்களை ஏற்றுக்கொள்வதுதான் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஒரே வழி.
அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, பணம் எடுக்கச் செல்லும்போது வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதற்கேற்பத் திட்டமிட்டுக் கிளம்புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம். நம் வாழ்வில் பல்வேறு விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறுபவை. குறிப்பாக, மற்றவர்களின் நடவடிக்கைகள். எனவே, கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். சத்தம், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம் தவிர்க்க முடியாதது. அந்தச் சூழல்களை எதிர்கொள்ளப் பழகுவதே சிறந்த வழி.
வீடு
நாம் அதிக நேரம் செலவிடுவது வீட்டில்தான். அங்கு மகிழ்ச்சி இல்லையென்றால், அது எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கும். அன்றாட வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, பண நெருக்கடி எனப் பொருளாதாரப் பிரச்னைகள் ஒருபக்கமிருக்க, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலை, குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்கு ஆகியவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.
எப்படி எதிர்கொள்வது?
ஒரே குடும்பமாக இருந்தாலும் நம்பிக்கை, விருப்பு, வெறுப்பு, ஆளுமைப் பண்பு என ஒவ்வொருவரின் குணநலன்களும் மாறுபடும். இவற்றில் எல்லோருமே ஒன்றிப்போவார்கள் என்று சொல்ல முடியாது. இந்த வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொண்டால் பிரச்னை ஏற்படாது. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். இது, உறவுகளுக்கு மத்தியில் தவறான எண்ணம் உருவாவதைத் தவிர்க்க உதவும். மற்றவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிலர் ‘விட்டுக் கொடுக்கிறேன்’ என்ற பெயரில் விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவார்கள். ஒரு கட்டத்துக்குமேல் அதுவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். ஆரம்பத்திலேயே பிடிக்காதவற்றை வெளிப்படுத்திவிட வேண்டும். வாரம் ஒருநாள் நண்பர்களைச் சந்தித்து பொழுதுபோக்குவது, பிடித்த இடத்துக்குச் செல்வது, இசை கேட்பது என மனதை ரிலாக்ஸ் செய்யவும் நேரம் ஒதுக்குங்கள்.
தினமும் வாக்கிங் செல்வது, தியானம், திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வது போன்ற ஆரோக்கியமான விஷயங்களைச் செய்யலாம். வருமானத்துக்கேற்பத் திட்டமிட்டுச் செலவிட வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு, ‘அவர்களைப்போல் நமக்கு வசதி இல்லையே’ என்று எண்ணக் கூடாது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எது சாத்தியமோ அதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். நம்மிடம் உள்ளவற்றைக்கொண்டு நலமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் மறையும்!
* உங்கள்மீது அக்கறை கொண்டவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.
* உங்கள் உணர்வுகளை வெளியே கொட்டாவிட்டால், அது மனதை அழுத்திக்கொண்டேயிருக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால் மனதிலுள்ள சுமை குறையும்.
* மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது, மூச்சை ஆழமாக இழுத்துவிட வேண்டும். இது மன அழுத்தம் குறைய உதவும்.
* உடற்பயிற்சி, மன அழுத்தத்துக்கு சிறந்த மருந்து. தினமும் உடற்பயிற்சி செய்துவந்தாலே மன அழுத்தத்தைத் தூண்டும் காரணிகள் கட்டுக்குள் வந்துவிடும்.
* ஒரு நாளைக்குக் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். தினமும் குறித்த நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
* அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், அதிகமாகச் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவு வகைகளைச் சாப்பிடுவது, புகைப்பழக்கம் அல்லது போதைப்பொருள், மதுவுக்கு அடிமையாதல் போன்ற ஆரோக்கியமற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவார். இவற்றால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. அவற்றைக் கைவிட வேண்டும்.
* மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். ஒருவரின் இயல்பு, ஆளுமை, செயலாற்றும் திறனைப் பொறுத்து மன அழுத்தம் தரும் விஷயங்கள் மாறுபடும். தீர்க்க முடியாத மன அழுத்தம் தொடர்ந்தால், உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.