பெண்களைப் பெரிதும் பாதிக்கும் அழகியல்
28 Jun,2019
பெண்களைப் பெரிதும் பாதிக்கும் அழகியல் பிரச்னைகளில் முக்கியமானது மங்கு. இந்த பாதிப்பு ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம். அதாவது 9:1 என்கிற விகிதத்திலேயே பாதிக்கிறது. இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்றாலும், சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்குதலால் ஏற்படுவதாகத் தெரிகிறது. புறஊதாக் கதிர்கள், மெலனின் என்கிற நிறமிகளின் உற்பத்தியைத் தூண்டுபவை. மெலனின்தான் மங்கு ஏற்பட முக்கியக் காரணம்.
யாருக்கெல்லாம் வரலாம்?
ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரான் ஹார்மோன்கள் அதிகரிப்பது இன்னொரு காரணம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த இரண்டு ஹார்மோன்களின் அளவுகளும் அதிகரிக்கும். இந்த இரண்டு ஹார்மோன்களையும் உள்ளடக்கிய கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கும், மெனோபாஸ் காலத்தில் ஹெச்.ஆர்.டி எனப்படும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’ சிகிச்சை எடுத்துக்கொள்வோருக்கும் அத்தனை நாள்களாக இல்லாத மங்கு திடீரென வருவதைப் பார்க்கலாம்.
தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும், உச்சக் கட்ட மன உளைச்சலில் இருப்போருக்கும்கூட இது வரலாம். பரம்பரையாகவும் சிலருக்கு மங்கு பாதிப்பு தொடரலாம். ஒவ்வாத கெமிக்கல்கள் கலந்த அழகுசாதனப் பொருள்களாலும் இது ஏற்படலாம். வலி நிவாரண மாத்திரைகள், ஆன்டி ஃபங்கல் மருந்துகள், வலிப்புநோய்க்கான மருந்துகளாலும் மங்கு வரலாம்.
மங்கை எப்படி அடையாளம் காண்பது?
முகத்தின் நடுப்பகுதி, கன்னங்கள், தாடைகளில் எங்கு வேண்டுமானாலும் மங்கு வரலாம். கருமைநிறத் திட்டுகள் தென்படும். மங்கின் ஓரங்கள் முறையற்ற வடிவத்தில் இருக்கும்.
என்ன சிகிச்சை?
ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களின் அளவுகளை அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகளை நிறுத்த வேண்டும். வலி நிவாரணிகள், வலிப்புக்கான மருந்துகள், பூஞ்சைத் தொற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால் மருத்துவரிடம் பேசி அவற்றையும் நிறுத்த வேண்டும்.
மங்கின் பாதிப்பு மேலோட்டமாக இருக்கிறதா, ஆழமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்தே சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதை சரும மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார். மேலோட்டமான மங்கு என்றால் ‘கெமிக்கல் பீல்’ சிகிச்சை அல்லது க்ரீம்களின் மூலமே சரிசெய்து விடலாம். இவர்கள் தவறாமல் சன் ஸ்கிரீன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். ஆழமான பாதிப்புக்கு லேட்டஸ்ட் லேசர் சிகிச்சைகள் உதவும்.