பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்!
26 Jun,2019
பிரசவம் என்பது பெண்களுக்குப் பரசவமான, சிலிர்ப்பூட்டும் அனுபவம். அரிதாகச் சில பெண்களுக்கு அது திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு
ஆமாம்ஸ 70 சதவிகிதப் பெண்கள் ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்றழைக்கப்படும் பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
‘
`குழந்தைபெற்ற பெண்களும், அவரைச் சார்ந்தவர்களும் இதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால் அது தீவிரமான மனநோயாக மாறக்கூடும். சில பெண்கள் தற்கொலை முடிவுக்கும் செல்லலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் பிரச்னையின் அறிகுறிகள் முதல் சிகிச்சைகள்வரை விரிவாகப் பேசுகிறார் அவர்.
‘`பிறக்கப்போகிற குழந்தையை எப்போது பார்ப்போம், குழந்தை எப்படியிருக்கும், யாரின் சாயலில் இருக்கும்ஸ இப்படியெல்லாம் ஏங்கித் தவிக்கும் தாய்மனது. பிரசவமானதும் இந்த மனநிலை அப்படியே தலைகீழாக மாறிவிடும். பிரசவ வலி தந்த பயம், சிசேரியனாக இருந்தால் அந்தக் காயமும் வலியும் ஏற்படுத்திய வேதனை என எல்லாம் சேர்ந்துகொள்ளும். ‘இனிமே நமக்கு பழைய, சாதாரண வாழ்க்கை சாத்தியமே இல்லையோ’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். `குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம்’ என்கிற மிரட்சி தலைதூக்கும்.
பிறந்த குழந்தையைத் தூக்கவோ, கையாளவோ தெரியாமல் தவிப்பார்கள். பிரசவமான அடுத்தடுத்த நாள்களில் ஆரம்பிக்கும் இந்தக் கலக்கம், இரண்டு வாரங்கள்வரை நீடிக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் காரணம், குழந்தைபெற்ற பெண்ணின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள். பெரும்பாலும் பிரசவமான இரண்டு வாரங்களுக்குள் இந்த மனநிலை மாறிவிடும். அப்படி மாறாமல் தொடர்ந்தால்தான் பிரச்னை.
சில பெண்களுக்கு இந்த பாதிப்பு சில மாதங்கள்கூட நீடிக்கலாம். அதற்குப் பிறகும் தொடர்ந்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ என்று சொல்வோம். அதாவது இந்த நிலையில் இந்த அறிகுறிகளுடன் தன்னையோ, தன் குழந்தையையோ துன்புறுத்திப் பார்க்கிற குரூர மனநிலையும் சேர்ந்துகொள்ளும். இது அரிதான பாதிப்பு என்றாலும், அலட்சியம் கூடாது.
போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்ஸ யாருக்கு ஏற்படும்?
கூட்டுக்குடும்பங்களில் வாழ்கிற பெண்களுக்கு இந்த பாதிப்பு வருவதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலில், இப்போதெல்லாம் பல பெண்கள் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போவதைக்கூடத் தவிர்த்து, தாமே சமாளித்துக்கொள்ள நினைக்கிறார்கள். உறவுகள் இல்லாத, உதவிக்கு ஆட்கள் இல்லாத குடும்பச் சூழலே, பிரசவத்துக்குப் பிறகான மனக்கலக்கத்துக்கு முக்கியக் காரணம்.
ஒற்றைக் குழந்தையாக வளர்ந்த பெண்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம்.
மனதளவில் திருமணத்துக்குத் தயாராகாத இளவயதிலோ, திருமண வயதைக் கடந்தோ இல்லற வாழ்வில் இணைகிறவர்களுக்கும் வரலாம்.
முதல் பிரசவத்தில் போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, அடுத்த பிரசவத்திலும் அந்த பாதிப்பு தொடரலாம்.
அறிகுறிகள்
தீவிர மன அழுத்தம், காரணம் புரியாத கவலை.
தோல்வி மனப்பான்மை
எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்றநிலை.
குற்ற உணர்வு, தான் எதற்கும் லாயக்கற்றவள் என்கிற எண்ணம்.
எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பது.
தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம். தூக்கத்தில் மிரண்டு எழுந்திருப்பது.
குழந்தையைப் பற்றி அளவுக்கதிகமாகக் கவலைப்படுதல். குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியுமா என்கிற பயம்.
வீட்டில் தனியே இருக்கவும் வெளியே செல்லவும் பயப்படுதல்.
அழுகை, கோபம், யாரைப் பார்த்தாலும் எரிச்சல், தலைவலி, டென்ஷன், பசியின்மை.
எந்த வேலையிலும் ஆர்வமின்மை.
எப்படிக் கண்டுபிடிப்பது?
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில் புது அம்மாக்கள் அலர்ட் ஆக வேண்டியது அவசியம். உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம். மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச் சரியாக இனம்காண முடியும். அவர்களிடம் இந்தப் பிரச்னையைக் கண்டறிவதற் கென கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு புது அம்மாக்கள் எப்படி பதிலளிக்கிறார்கள் என்பதை வைத்து பிரச்னையை உறுதி செய்வார்கள்.
சிகிச்சைகள்
முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமன்றி, அவளின் குடும்பத்தாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
‘உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். பயப்படாதே’ என மன தைரியம் கொடுப்பதுதான் முக்கியமான சிகிச்சை. இதில் கணவரின் பங்கு மிக முக்கியமானது.
சில குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். உதவிக்கு ஆட்கள் இல்லாதநிலையில் தூக்கம் தவிர்த்து, குழந்தையைப் பார்த்துக்கொள்வது இளம் அம்மாக்களுக்குக் கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கும். இது அதிகரித்தால், `போஸ்ட் நேட்டல் டிப்ரெஷன்’ பிரச்னையாக உருவெடுக்கலாம். எனவே, மனைவியைச் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கணவர் அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். இது அம்மாவின் பயம் போக்கும்.
மன அழுத்தத்தில் இருக்கும் புது அம்மாக்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பாசிட்டிவ் மனப்பான்மைகொண்ட நபர்களைத் தன் அருகில் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தை தூங்கும்போது குட்டித்தூக்கம் போடலாம். தூக்கம் வரவில்லையென்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என எதையாவது செய்யலாம்.
இவற்றையும்மீறி மன அழுத்தம் தொடர்ந்தால் மனதை அமைதிப்படுத்தி, தூக்கத்துக்கு உதவும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்
போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷனின் தீவிரநிலை இது. இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் ‘ஹாலுசினேஷன்’ பாதிப்பு இருக்கும். குழப்பம் அதிகரிக்கும். கவனிக்காமல் விட்டால் அந்தத் தாயால் குழந்தைக்கும் ஆபத்து நேரலாம். தாய் நிரந்தர மன நோயாளியாகலாம். கவனம் தேவை!