பத்து வயசுகூட முடியலை. அதுக்குள்ள வயசுக்கு வந்துட்டா. நாப்கின் மாத்துறதுலயிருந்து பர்சனல் ஹைஜீன்வரை இவளுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைக்கிறதுன்னே தெரியலை டாக்டர்ஸ” – ஒரு தாயின் புலம்பல்.
“எனக்கு பீரியட்ஸப்போ வயிறு வலிக்காது. ஆனா, இந்த மாசம் வலி தாங்க முடியலை. பிளீடிங்கும் அதிகமா இருந்துச்சு ஆன்ட்டிஸ’’ என்று சொன்ன ஒன்பது வயதுக் குழந்தை கருணாம்பிகாவிடம் தெரிவது இருபது வயதுக்கான பெண்ணின் உடல் மற்றும் மன முதிர்ச்சி.
பொதுவாகப் பெண்கள் பருவமடைவது 13, 14 வயதில் என்ற நிலை மாறி, பிரதீஷா, கருணாம்பிகாபோல ஒன்பது, பத்து வயதிலேயே பெரிய மனுஷியாகிவிடுவது இன்று உலகெங்கும் நடக்கிறது. இந்தச் சிறுமிகள் தங்களின் குழந்தைப் பருவத்தையும் அதன் சுவாரஸ்யங்களையும் இழக்க நேரிடுவது கொடுமையிலும் கொடுமை. இந்த அதிவிரைவான பருவமடைதலுக்கான காரணங்களை அறிவதற்கு முன்னர், பருவமடைதல் என்ற உடல் இயக்கத்தைப் பற்றிப் புரிந்துகொள்வோம்.
இப்படித்தான் நிகழ்கிறது முதல் மாதவிடாய்!
`மாதவிடாய் தொடங்குவதுதான் பருவமடைதலின் ஆரம்பம்’ என்று பலரும் நினைக்கலாம். உண்மையில் பருவமடைதல் என்பது அந்த ஒருநாளில் நிகழ்வதல்ல. ஒரு குழந்தை வளர்ந்து பெரியவள் ஆவதைப்போலவே, பருவம் அடைதலும் ஒரு நீண்டகாலப் பயணம்தான். பல்வேறு ஹார்மோன்களின் ஒன்றிணைந்த செயலாக்கத்தால் உடலின் அனைத்து உறுப்புகளிலும் தொடர்ந்து வருடக்கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுதான் முதல் மாதவிடாய்.
மூளையின் ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளிலிருந்து வெளிவரும் GnRH, FSH, LH ஆகிய ஊக்க ஹார்மோன்கள், சினைப்பைகளில் ஈஸ்ட்ரோஜெனை உற்பத்தி செய்கின்றன. ஈஸ்ட்ரோஜென், இரண்டாம்நிலை பாலியல் குணங்கள் (Secondary Sexual Characters) என்ற பருவ வயது மாறுதல்களை ஏற்படுத்துவதோடு முதல் மாதவிடாயையும் வரவழைக்கிறது. இந்த நேர்மறை விளைவுக்கு அட்ரீனல் மற்றும் தைராய்டு சுரப்பிகள் உதவுகின்றன.
பருவ வயது மாறுதல்களில், முதலில் மார்பக வளர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்குள் உட்பட்ட இடங்களில் ரோம வளர்ச்சி, இடை சிறுத்தல், உயரம் அதிகமாதல், குரல் மென்மையடைதல் போன்ற உடலியல் மாற்றங்களும், தங்கள் உடல்மீதான அக்கறை, எதிர்ப்பாலின ஈடுபாடு என எண்ண மாற்றங்களும் இயல்பாக ஏற்படும். மேலும், சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகிய இன உறுப்புகளின் வளர்ச்சி முழுமையடைந்து, மாதவிடாய் ஏற்படும்.
அதிவிரைவான பூப்படைதல்ஸ காரணங்கள்!
‘ரெண்டுங்கெட்டான் வயசு’ என்று பெரியவர்களால் அழைக்கப்படும் இந்த வயதில் நடக்கும் பருவமடைதல் என்ற உடல் மற்றும் உளரீதியான மாற்றங்கள், இப்போது குழந்தைப் பருவத்திலேயே நிகழ்ந்துவிடுவதுதான் பெற்றோர்களுக்கும் சிறுமிகளுக்கும் பெரும் துயரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போது உடல் பருமனை முதல் காரணமாகக் காட்டுகின்றன ஆய்வுகள். சத்தான உணவுகள் உண்ணாதது, மேற்கத்திய உணவு முறைகள், செயற்கை உணவு ஊட்டங்கள், அனைத்துக்கும் மேலாக உடற்பயிற்சியின்மை என இவையெல்லாம் 10 வயதிலேயே பெண் குழந்தைகளின் அதீதமான உடல் வளர்ச்சிக்கும், இயல்புக்கு மாறாக முன்பாகவே சுரக்கும் ஹார்மோன்களுக்கும் வழிவகுக்கின்றன. மேலும், கொழுப்புத் திசுக்களில் உள்ள லெப்டின் என்ற பெப்டைட் புரதங்கள் மூளையின் GnRH ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, ஈஸ்ட்ரோஜென் அளவைக் கூட்டுவதால், உடல் பருமனுள்ள சிறுமிகள் பருவமடைதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
அடுத்ததாக, இன்றைய குழந்தைப் பருவத்தின் மன அழுத்தத்தையும் தூக்கமின்மையையும் காரணங்களின் பட்டியலில் இணைக்கலாம். இந்த இரண்டுக்கும் முக்கியக் காரணங்களாக இருக்கும் தொலைக்காட்சி மற்றும் மொபைல்கள் உமிழும் நீல நிற ஒளியும், சிறு வயதில் பூப்படைவதற்கான மோசமான காரணியாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு சிறுமியின் தாய் அல்லது சகோதரி குறைந்த வயதில் பருவம் எய்தியிருந்தால், அந்தச் சிறுமிக்கும் அப்படி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.
பாதிப்புகள்!
குழந்தைத்தனம் மாறாத வயதில் பூப்படைவதால் உடல்ரீதியாக, மனரீதியாக மட்டுமன்றி சமுதாயரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் அசௌகர்யங்களைக் கையாள முடியாத உடல்நிலை, உதிரப்போக்கினால் ஏற்படும் ரத்தச்சோகை, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களால் எலும்புகளின் வளர்ச்சி மட்டுப்பட்டு உயரம் நின்றுபோதல், பெண் உறுப்பில் நோய்த்தொற்று, மார்பகக் கட்டிகள், பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல் ஆகிய உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனரீதியாக, கோபம், குழப்பம், கவனச் சிதறல், அமைதியின்மை, வன்முறையில் ஈடுபடுதல் போன்ற பாதிப்புகளும் அதிகம். இவற்றுடன், பதின்பருவத் திருமணங்கள் மற்றும் குழந்தைப்பேறு, பால்வினை நோய்கள் எனச் சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது அதிவிரைவு பருவமடைதல்.
எட்டு வயதில் என்றால் எச்சரிக்கை!
இப்போதெல்லாம் பல வீடுகளிலும் 10, 11 வயதுகளில் பூப்பெய்துவிடும் சிறுமிகளைப் பார்க்கிறோம். கொஞ்சம் புலம்பலுடன் இதை இயல்பாக எடுத்துக்கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய நிலை – Precocious Puberty. அதாவது, எட்டு வயதுக்கு முன்னரே பூப்படைதல். உடல் வளர்ச்சி தவிர்த்து, மூளைக்குள்ளும், மற்ற நாளமில்லா சுரப்பிகளிலும் ஏற்படும் வீக்கம், கட்டிகள் மற்றும் கிருமித் தொற்றினால் அல்லது பிற மருந்துகளின் காரணத்தாலும் இது நிகழலாம். எனவே, இந்த வகைப் பருவமடைதலில் எதுவும் வித்தியாசமாகவோ, சந்தேகமாகவோ பெற்றோர்கள் உணர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தீர்வுகள்!
இதற்கான தீர்வுகள் நம் வாழ்க்கை முறையில்தாம் இருக்கின்றன. `பெண் குழந்தைகள் அன்றாடம் உபயோகிக்கும் டூத் பேஸ்ட், சோப், ஷாம்பூ, வாசனை திரவியங்கள், லிப்ஸ்டிக், பவுடர் மற்றும் அழகுசாதனப் பொருள்களில் நிறைந்திருக்கும் Endocrine Disrupting Chemicals என்ற ரசாயனக் கலவைகள், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைப்போலவே செயல்படுவதால், உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதோடு, குறைந்த வயதில் பருவமடைய வைக்கின்றன’ என்கிறது கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு. கூடவே, அதே பல்கலைக்கழகத்தின் கர்ப்பிணிகளுக்கான ஆய்வு ஒன்று, `நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருள்களிலும், செயற்கை ஊட்டச்சத்துகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் Methyl Paraben, Triclosan, Phthalic Acid, Dichlorophenol ஆகிய பதனப் பொருள்களை (Preservatives) பயன்படுத்துவதால், இதன் பயனாளர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, இளம் வயதில் பருவமடைதல் ஏற்படுகிறது’ என்பதையும் உறுதிசெய்கிறது. ரசாயனப் பொருள்கள் நிறைந்த இந்த உலகில் இயற்கையிடமிருந்து மனிதன் விலகிப்போவதால் ஏற்படுவது சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், புற்றுநோய், மன அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் மட்டுமல்லஸ இந்த ‘காணாமல் போகும் குழந்தைப் பருவம்’ பிரச்னையும்தான்.
`வருமுன் காப்பது இருக்கட்டும்ஸ இருக்கும் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?’ என்றால், அவர்களுக்கு உடல் பருமனைக் குறைக்கும் உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்த வேண்டும். அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் நிகழும் மாற்றங்களைப் பற்றி அவர்களுக்குப் புரியவைத்து, குட் டச், பேட் டச் பற்றி எடுத்துக்கூறி அடுத்த கட்டத்துக்கு தயார்செய்யும் பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உள்ளது.
ஆக, எந்தப் பிரச்னையிலிருந்தும் விடுபட ஒரே வழிஸ இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதையே எல்லா ஆய்வுகளும் சொல்கின்றன!