நீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.
16 Jun,2019
தெற்காசியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் முதல் உறுப்பாக கண் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், அதன் பாதிப்பை வெளிப்படுத்தும் முதல் உறுப்பாக கண் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு முதலில் காடராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் போது விழித்திரை முழுவதும் வெண்மையாகிவிடும். நீரிழிவு நோய் இரத்தக்குழாய்களைப் பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் முதல் சாட்சியாகவும் கண் இருக்கிறது. இதனை கண்களில் தெரியும் நரம்புகளின் வழியாக கண்டறியலாம்.
அதே போல் நீரிழிவு நோயால் உங்களது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதையும் கண்களில் தெரியும் நுட்பமான மாற்றங்களினால் கண்டறியலாம். மருத்துவ மொழியில் சொல்ல வேண்டு மென்றால் நீரிழிவு நோய், முதலில் இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரில் உள்ள செல்களில் தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் உடலிலுள்ள அனைத்து இரத்த குழாய்களில் குழாய்களின் சங்கமம் சிறுநீரகம் என்றே குறிப்பிடலாம். அத்துடன் இங்கு தான் இரத்தக் குழாய்களிலுள்ள அசுத்தங்கள் சுத்திகரிக்கப் படுகின்றன.
கண் வைத்தியர்கள் உங்களது கண்களின் உட்புற பகுதியான ரெட்டினல் எனப்படும் பகுதியில், ஒரு பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
இத்தகைய பரிசோதனையில் இரத்தக் குழாயில் ஏதேனும் வெடிப்பு ஏற்படுவதற்கு கூடிய சாத்தியம் உண்டா? என்பதையும் அதன் காரணமாக பார்வை திடீரென்று பார்வை இழப்பு ஏற்படுவதற்குரிய சாத்தியம் இருக்கிறதா? என்பது குறித்தும் பரிசோதனை செய்வார்கள்.
அதே தருணத்தில் இரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட போவது உறுதி என்று வைத்தியர்கள் தீர்மானித்தால், அங்கு அதனை லேசர் சிகிச்சை கொண்டு சீராக்கி, பார்வை இழப்பை தடுப்பார்கள். இதன் காரணமாகத்தான் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் அல்லது வைத்திய பரிந்துரைக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியாக கண்களை பரிசோதிக்க வேண்டும்.