இதயம்ஸ உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு மிகச் சிறிய உறுப்பு. ஆனால், அதன் அமைப்பும் செயல்பாடுகளும் அதிசயிக்கவைப்பவை. “இதயத்தை ஒரு வீட்டுடன் ஒப்பிடலாம்’’
இதயத்தின் அமைப்பு
ஒரு வீட்டில் எப்படி வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை என பல்வேறு அறைகள் இருக்கின்றனவோ, அதுபோல இதயத்திலும் மேலே இரண்டு அறைகள், கீழே இரண்டு அறைகள் என தனித்தனியாக நான்கு அறைகள் இருக்கின்றன. இதயத்தின் மேல் அறைகளுக்கு, `வலது ஏட்ரியம்’, `இடது ஏட்ரியம்’, கீழ் அறைகளுக்கு `வலது வென்ட்ரிக்கிள்’, `இடது வென்ட்ரிக்கிள்’ என்று பெயர்.
சுவர்
வீட்டில் ஓர் அறையிலிருந்து மற்றோர் அறையைப் பிரிக்க சுவர்கள் இருப்பதுபோல, இதயத்திலும் சுவர்கள் இருக்கின்றன. அதாவது, இரண்டு ஏட்ரியங்களுக்கு இடையே, இரண்டு வென்ட்ரிக்கிள்களுக்கு இடையே தடுப்புச்சுவர் உண்டு. மேல் அறைகளைவிடக் கீழ் அறைகளின் சுவர் கொஞ்சம் தடிமனாக இருக்கும். இந்தச் சுவர்களும் தசைகள் மற்றும் திசுக்களால் ஆனவை.
இதயத்தின் ஆர்கிடெக்ட்
வீட்டின் கட்டட அமைப்பை `ஆர்கிடெக்ட்’ (Architect) என்னும் வடிவமைப்பாளர் மூலம், நம் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வோம். மின்சாரம் பழுதானால், ஒரு எலெக்ட்ரீஷியன் சரிசெய்வார். தண்ணீர்க்குழாய் அடைத்துக்கொண்டால், பிளம்பர் சரிசெய்வார். அதுபோல இதயத்துக்கும் எலெக்ட்ரீஷியன், பிளம்பர், ஆர்கிடெக்ட் என தனித்தனி நிபுணர்கள் இருக்கிறார்கள். இதயத்தில் முக்கியமாக இரண்டுவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். ஒன்று, பிறப்பிலேயே வரும் இதயநோய்கள் (Congenital Heart Diseases). பிறக்கும் குழந்தையின் இதயத்தில் துளையோ அல்லது போதிய வளர்ச்சியில்லாமல் வடிவத்தில் குறைபாடோ இருக்கலாம். மற்றொன்று, இதயவால்வுநோய் (Valvular Heart Disease). இந்தப் பிரச்னையில் இதயத்தின் சுவரான வால்வுகளில் கோளாறு இருக்கும். இதயத்தில் ஏற்படும் இந்தக் குறைபாட்டை இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணர் (Heart Surgeon) சரிசெய்வார். இவரை ‘இதயத்தின் ஆர்கிடெக்ட்’ எனலாம்.
கதவுகள்
இதயத்திலும் கதவுகள் இருக்கின்றன. அவற்றை ‘வால்வுகள்’ என்போம். வென்ட்ரிக்கிள், ஏட்ரியங்களுக்கு இடையே இருக்கும் இவை, ஒரு பக்கமாகத் திறக்கும் அதிசயக் கதவுகள்.
இதயத்தின் எலெக்ட்ரீஷியன்
மின்சாரம் பாயும்போது எப்படி மின்சாதனங்கள் இயங்குகின்றனவோ அதுபோல, இதயம் துடிக்கும்போது ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்கு ரத்தம் பாயும். இதயம் துடிக்க மின்சாரம் தேவை. அதாவது, இதயம் ஒரு மோட்டார் என்றால், அதை இயங்கவைக்க மின்சாரம் தேவை. இதயத்தில் ‘சைனஸ் நோடு’ (Sinus Node) எனும் பகுதி உள்ளது. அங்குதான் மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்வொயர்களைப்போல இதயத்தில் மின் சமிக்ஞைக் கடத்திகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகத்தான் மின்சாரம் பாய்கிறது. இவை, இதயத்தைச் சுருங்கி விரியவைக்கும். இதயம் ஒரு முறை சுருங்கி விரிவதை ‘இதயத்துடிப்பு’ (Heart Beat) என்கிறோம். இதில் குறைபாடு இருந்தால், இதயத்துடிப்பில் மாற்றம் இருக்கும். இதை `எலெக்ட்ரோ பிசியாலாஜிஸ்ட்’ (Electro Physiologist) என்னும் இதயநோய் நிபுணர், ‘பேஸ்மேக்கர்’ கருவியைக்கொண்டு சரிசெய்வார். அவரை ‘இதயத்தின் எலெக்ட்ரீஷியன்’ என்று சொல்லலாம்.
இதயத்தின் பிளம்பர்
வீட்டில் ஒவ்வோர் அறைக்கும் தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைப்பு இருக்கும். அதுபோல இதயத்தில் ஒவ்வோர் அறைக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்ல ‘ரத்தநாளங்கள்’ என்னும் ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இந்த ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த ஓட்டம் தடைப்படும். இந்த அடைப்பை, இதய ஊடுருவல் அறுவை சிகிச்சை நிபுணர் (Interventional Cardiologist) ஸ்டென்ட் பலூனை உள்ளே செலுத்திச் சரிசெய்வார். அவரை ‘இதயத்தின் பிளம்பர்’ என்று சொல்லலாம்.