பேறுகாலத்தில் சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும்
09 Jun,2019
பெண்கள் கருத்தரிக்கும் காலத்தில் அவர்களுடைய ரத்த சீனியின் அளவை கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும், பிரசவத்தின் போது சில பெண்களுக்கு இதன் காரணமாக சிக்கல்கள் எழக்கூடும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள் என வைத்தியர் நல்ல பெருமாள் தெரிவித்துள்ளார்.
மகப்பேறின்மை பிரச்சினையை எதிர்கொள்ளும் தம்பதிகளின் சதவிகிதம் 15 லிருந்து 20 ஆக உயர்ந்திருப்பதால், அவர்கள் கருத்தரிக்கும் காலகட்டத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பேறுகாலத்தின் போது ஒவ்வொரு பெண்ணுக்கும் இரத்த சீனியின் அளவு உயரும். இது இயல்பானதுதான் என்றாலும், பிரசவத்திற்குப் பின்னர் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றாலும், இதனை வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில், பரிசோதனை செய்துகொண்டு கண்காணிக்க வேண்டும்.
பேறு காலத்தின் போது சுரக்கும் அதிகளவிலான ஹோர்மோன்களின் சுரப்பினால் இன்சுலீன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, இதன் காரணமாக அப்பெண்களின் இரத்த சீனியின் அளவு உயரக்கூடும். சில பெண்களுக்கு கணையத்தில் சுரக்கும் ஹோர்மோன்கள், இரத்தத்தில் கொழுப்பும், கொர்ப்பஹைட்ரேட்டும் இருக்கவேண்டிய அளலில் மாற்றத்தை ஏற்படுத்தி இரத்ததில் சீனியின் அளவை உயர்த்திவிடும். இவ்விரண்டு காரணங்களால் பெண்கள் கருத்தரிக்கும் காலத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு உயரும்.
சில பெண்கள் பேறுகாலத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்தவர்களின் சமூக உளவியல் விதியின்படி உணவு கொள்கையை பின்பற்றுவர். அவர்களில் பலருக்கு பேறுகாலத்தின் போது இரத்த சீனியின் அளவு உயர்ந்து, அவர்களின் உடல் எடை சீரான அளவிற்கு பதிலாக உடற்பருமன் அளவிற்கு எடை உயர்ந்துவிடும். இவர்களுக்கு பிரசவ தருணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் .இதன் காரணமாக பேறுகாலத்தின் போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
துரித உணவுகள், பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகள் ஆகியவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பேறு காலத்தின் போது உங்களது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் கலோரிகளை கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
அத்துடன் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தை குறைப்பதற்கான யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மகப்பேறு வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் பேறுகாலத்தின் போது சீனியின் அளவு சீராக உயர்ந்து, பிரசவத்திற்குப் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். எதிர்காலத்தில் தாய்க்கும் சேய்க்கும் டைப் 2 நீரழிவு நோய் வரக்கூடிய வாய்ப்பும் மிக மிக குறைவாக இருக்கும்