கர்ப்பகால வாந்தி
28 May,2019
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ‘மார்னிங் சிக்னெஸ்’ தொந்தரவை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.
வாந்தி
கர்ப்பிணிகளின் உடலில் HCG (Human Chorionic Gonadotropin) ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். அதிலும் முதல் மூன்றரை மாதங்கள் அதன் சுரப்பு வேகமாக இருக்கும். அதற்குப் பின்னான மாதங்களில் வேகம் சற்று குறையும். அதனால், கர்ப்பம் தரித்த முதல் 12 வாரங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகமிருக்கும். குறிப்பாக, காலையில் அதிகமாக இருக்கும். சிலருக்கு மாலையிலும் வாந்தி ஏற்படுவதுண்டு. ‘குழந்தைக்குத் தலைமுடி அதிகமாக இருந்தால், அதிகமாக வாந்தி வரும்’ என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. ஒருவேளை இரட்டைக் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் வாந்தி அதிகம் வரலாம். வாந்தியில் சிலருக்கு ரத்தம் கலந்துவரக்கூடும். அது சிவப்பு நிறத்தில் இருந்தால், கவலைப்பட வேண்டியதில்லை. தொண்டை பாதிப்பால் அப்படி வரலாம். வாந்தி கறுப்பு நிறத்தில் வரும்பட்சத்தில் அவசியம் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
ஸ்பெஷல் பேக்
கர்ப்பிணிகள் ஸ்பெஷலான ஒரு பேக் வைத்திருக்கவேண்டியது அவசியம். அதில் ஃபிரஷ் ஜூஸ், தண்ணீர் பாட்டில், பழங்கள், ஆரஞ்சு மிட்டாய், இஞ்சி மிட்டாய், எலுமிச்சைப் பழம் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம்.
சிறுநீரில் கவனம்
காலை நேர சிறுநீர், அடர்த்தியான நிறத்திலோ, குறைவான அளவிலோ இருந்தால் ஹைட்ரஜன் போதவில்லை என்று அர்த்தம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
வாசனை
உலை கொதிக்கும் வாசம், குக்கர் வாசம், தாளிக்கும் வாசம் போன்றவையெல்லாம்கூட சிலருக்கு வாந்தியை ஏற்படுத்துவதாக இருக்கும். சிலருக்கு ரூம் ஸ்பிரே பிடிக்காது. அதனால், முடிந்தவரை புத்துணர்வு அளிக்கும் இயற்கை நறுமணம் சூழ இருப்பது நல்லது. அறையில் வாசனை அதிகமுள்ள பூக்களைவைக்கலாம்; எலுமிச்சைப் பழங்களை நறுக்கிவைக்கலாம். இவை வாந்தி உணர்வைத் தவிர்க்கச் செய்யும்.
தண்ணீர்
தினமும் குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். வாக்கிங் செல்லும்போது தவறாமல் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். வாந்தியால் உடலில் நீர்ச்சத்து மட்டுமல்லாமல் சோடியம், எலெக்ட்ரான் ஆகியவற்றின் அளவும் குறைந்துவிடும். அதனால்தான் ஊறுகாய் சாப்பிடத் தோன்றும். இதைச் சரிசெய்ய ஃபிரெஷ் ஜூஸ், குறிப்பாக சர்க்கரை, உப்பு சேர்த்த லெமன் ஜூஸ் சாப்பிடலாம்.
பிடித்த உணவு
வாந்தி அதிகமாகும்போது பிடித்த உணவுகளே பிடிக்காமல் போகலாம். இந்த நிலையில் அவர்கள் நாக்குக்கு எந்தெந்த உணவுகள் பிடிக்கின்றனவோ அவற்றையே சாப்பிடக் கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்