முதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்குஸ
18 May,2019
உடற்பயிற்சி செய்யும்போது தொடக்கத்தில், உடலிலும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் எலும்பு மருத்துவர் சித்தரஞ்சன்.
* எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சிக்ஸ்-பேக் வைக்க வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சி செய்பவர்கள், ஓரே நாளில் பலன் கிடைத்து விடாது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும், இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். மூளை உற்சாகமாக இயங்கும்.
* தொடக்கத்திலேயே கடுமையான வொர்க்-அவுட்டுகளைச் செய்யக் கூடாது. தசைகளில் அழற்சியும், தசைநார்களில் பிரச்னையும் ஏற்படலாம். காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு பலவீனமாக உணர்வார்கள். உடற்பயிற்சி செய்து முடித்ததும், சுமார் ஐந்து நிமிடங்கள் ஃபோம் ரோலரைப் (Foam Roller) பயன்படுத்தி தசைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
* கடுமையான வொர்க்-அவுட் செய்பவர்களுக்கு, உடலில் `கிரெலின்’ (Ghrelin) எனப்படும் பசிக்கான ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலைக்குச் செல்லலாம். இதனால் பசியின்மை ஏற்படும். டீஹைட்ரேஷன் என்கிற நீர்வறட்சி நிலையும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* உடற்பயிற்சி மூலம் மாதம் இரண்டு முதல் மூன்று கிலோவரை எடை குறைப்பதுதான் ஆரோக்கியமானது. ‘நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஜிம் செல்வேன்’ என்பவர்களுக்கும் இது பொருந்தும். அதற்கு மேல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முறையான ஆலோசனை பெற்று அதற்குரிய பயிற்சிகளை எடுக்க வேண்டும்