உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இளம் தலைமுறை மத்தியில் அதிகரித்துவருகிறது. நாளுக்கு நாள் புதிது புதிதாக உடற்பயிற்சி முறைகளும் வந்துகொண்டிருக்கின்றன. இளைஞர்களும் சளைக்காமல் அனைத்தையும் முயற்சி செய்து பார்த்துவிடுகிறார்கள். சமீபத்தில் இளைஞர்களை வசீகரித்திருக்கும் புதிய வரவு, ‘டான்ஸர்சைஸ்’ (Dancercise).
அதென்ன ‘டான்ஸர்சைஸ்’?
“உடற்பயிற்சி செய்ய முடியாதவங்க கொஞ்ச நேரம் நடனமாடினாலே உடற்பயிற்சி செய்த பலனைப் பெற்றுவிடலாம். முறையா டான்ஸ் தெரிஞ்சிக்கணும்னுகூட அவசியமில்லை. நடனம் ஆடணுங்கிற ஆசை இருந்தா போதும்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜெஃப்ரி வார்டன்.
சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக ஃபிட்னெஸ் ஸ்டூடியோ வைத்து ‘டான்ஸர்சைஸ்’ கற்றுத் தருகிறார் ஜெஃப்ரி. ‘டான்ஸர்சைஸ்’ பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.
“உடற்பயிற்சி செய்ய மனதளவில் தயங்குபவர்களுக்கும், உடல் சோர்வைக் காரணம் காட்டி உடற்பயிற்சியை ஒதுக்குபவர்களுக்கும் `டான்ஸர்சைஸ்’ ரொம்பவே உதவியாக இருக்கும். எந்த வேலையைச் செய்யும்போது உடலும் மனமும் சேர்ந்து செயல்படுகின்றனவோ, அதுதான் புத்துணர்ச்சியையும் வலிமையையும் தரும். அப்படியான ஒருவேலையைத்தான் உடற்பயிற்சியாகச் செய்யணும். அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் நடனம். இது, யாருக்கும் சலிப்பைத் தர்றதில்லை.
‘ஏன் நடனமாடணும்ஸ மனசுக்கு நெருக்கமான வேறு ஏதேனும் வேலையைச் செய்யலாமேஸ அதன் வழியாகப் புத்துணர்ச்சியைப் பெறலாமே’னு சிலர் கேட்கலாம். நடனத்தைத் தவிர வேறு எந்த வேலையும் உடற்பயிற்சியாக இருக்காது. நடனத்தை உடற்பயிற்சியாக்கும்போது அதைத் தவிர்க்க யாருக்கும் மனம் வராது.
`டான்ஸர்சைஸ்’ பயிற்சியை, தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்யணும். தொடக்கத்திலேயே வேகமாகச் செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கணும். இதுக்குன்னு விதிமுறைகள் எதுவும் இல்லை. மனசுக்குப் பிடிச்சதைச் செய்யும்போது ‘இதை இப்படித்தான் செய்யணும், இப்படி செஞ்சா தப்பு’னு விதிமுறைகளை வகுத்துக்கவேண்டிய அவசியமில்லை. இந்த நடனம்தான் ஆடணும்னு இல்லை. எது பிடிக்குதோ அதை ஆடலாம். சர்க்கரைநோய், இதயப் பிரச்னை இருக்கிறவங்க வேகத்தைக் குறைச்சு மெதுவா நடனமாடுறது நல்லது. `டான்ஸர்சைஸ்’ செய்யும்போது, உடலிலிருக்கும் அனைத்து தசைகளும் பயன்பெறும். குறிப்பாக, ரத்த ஓட்டம் சீராகும். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிலிருக்கும். உடல் எடை குறையும். இதயத்தையும் பாதுகாக்கும். உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்குதோ, அதே அளவுக்கு மனசுக்கும் நன்மை கிடைக்கும். மன அழுத்தம், குழப்பம், பதற்றம் குறையும்.
இந்தப் பயிற்சியை உற்சாகமான மனநிலையில ஆரம்பிப்பது நல்லது. தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் செய்யணும். நடனமாடி முடிச்சதும், உடல் சோர்வாக இருக்கும். ஆனா, மனசு உற்சாகமாக இருக்கும். தொடக்கத்துல மிகவும் மெதுவா ஆரம்பிக்கணும். போகப்போக வேகத்தை அதிகரிக்கலாம்.
`டான்ஸர்சைஸ்’ செய்யறதால, உடற்பயிற்சி வேண்டாம்னு சொல்ல மாட்டேன். உடலுழைப்பு பெரிதாக இல்லாத பயிற்சிகளைச் செய்யலாம். ‘வார்ம்-அப்’, டிரெட் மில்லில் நடப்பது போன்ற பயிற்சிகளைச் செஞ்சுட்டு `டான்ஸர்சைஸ்’ பயிற்சியைத் தொடங்குறது நல்லது. வாரத்தில் மூன்று நாள்கள் `டான்ஸர்சைஸ்’, மூன்று நாள்கள் முறையான உடற்பயிற்சிகள்னுகூட வகுத்துக்கலாம். டான்ஸர்சைஸின் நோக்கமே உடற்பயிற்சியை விருப்பத்துக்குரியதா மாத்துறதுதான். தனியா ஆடுறதைவிட நண்பர்களோடு சேர்ந்து ஆடுறது நல்லது. நடனமாடுறப்போ பின்னணியில பாடல் ஒலிக்கணும். பாடல்கள் வெவ்வேறு ட்யூன்களைக்கொண்டதா இருக்குறது நல்லது. மெலடி, கானா, ராப், ஹிப் ஹாப்னு எல்லா இசையும் கலந்திருக்கலாம். கவனச்சிதறல், மன அழுத்தம் இருக்கிறவங்க பழக்கப்பட்ட, பிடித்த பாடல்களுக்கு ஆடலாம். அப்போதான், பாடலோடு மனசு ஒன்றும்.
நடனமாடணுங்கிற ஆசை நிறைய பேருக்கு இருக்கும். ஆடத் தொடங்கும்போது, சில ஸ்டெப்ஸ் அவங்களுக்கு வராது. அதனால துவண்டுபோய் நடனமாடாம இருப்பாங்க. `டான்ஸர்சைஸ்’ பயிற்சியை முதன்முறையாகச் செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை உண்டாகலாம். தயக்கத்தை ஒதுக்கிவெச்சுட்டு, பிடிச்ச பாடலுக்கு தெரிஞ்ச ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடத் தொடங்குங்கள். காலப்போக்குல, நீங்களாகவே பழகிக்குவீங்க. நடனம், உங்கள் மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி. எந்தக் காரணத்துக்காகவும், அதை ஒதுக்கிவைக்காதீங்க” என்கிறார் ஜெஃப்ரி!
நடனம் தரும் நன்மைகள்
* நடனமாடும்போது உடலின் அனைத்து தசைகளும் இயங்கும். உடலின் மொத்த எடையையும் உபயோகித்து ஆடுவீர்கள். இதனால், தசைகள் அனைத்தும் வலுப்பெறும்.
* வேகமாக நடனமாடும்போது, எலும்புகள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும். இதனால் அவற்றின் வலிமை அதிகரிக்கும். இளம் வயதில் இந்தப் பயிற்சியைத் தொடங்குபவர்களை, வயது முதிர்ந்த பிறகு ஏற்படும் எலும்புப்புரை பிரச்னை அண்டாது.
* நடனமாடும்போது தொடை மற்றும் மூட்டுத் தசைகள் ஒருங்கிணைந்து செயல்படும். இதனால் கால்களின் தசைகள் வலிமைபெறும்.
* தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தினமும் நடனப் பயிற்சி மேற்கொண்டால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
* ஃபிட்னெஸ் பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று ஆடும்போது, வித்தியாசமான பல நடன அசைவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படும் நடனத்தை ஆடும்போது தசைகளின் நெகிழ்வுத்தன்மை (Flexibility) அதிகரிக்கும்.
* சில நடனங்களில் ஒரு காலை ஊன்றி ஆடும் அடவுகள் உண்டு. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை இப்படிக் கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதால், உடலின் சமச்சீர் நிலை (Static and Dynamic Balance) அதிகரிக்கும்.
* குழுவாக இணைந்து நடனமாடுபவர்களுக்கு மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* நடப்பது, ஓடுவது என நம் ஒவ்வொரு செயலுக்கும் இதயத்தின் ஆற்றல்திறன் வேறுபடும். நடனமாடும்போது, இதயத்துடிப்பு சீராகும்.
* நடனமாடும்போது, இதயம் மற்றும் நுரையீரல் அதிகமாக வேலை செய்யும். அதனால், உடலில் ஆக்ஸிஜன் தேவை (Oxygen Demand) அதிகமாகும். அதை ஈடுகட்ட உடலிலுள்ள கொழுப்புப் படிமங்கள் வேகமாகக் கரைந்து, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவது தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும்.
* நடனமாடும்போது தசைகள் நன்கு சுருங்கி விரியும் என்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.
* புத்துணர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்பு உடலில் அதிகரிக்கும். இதனால் கவனச்சிதறல் பிரச்னைகள் சரியாகும். மன அழுத்தம் நீங்கும்.
* இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள் இந்தப் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.