சாதாரணமாக இருமும்போதும் தும்மும்போதும்கூட சிலருக்கு சிறுநீர்க்கசிவு இருக்கும். இதனால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி, கடுமையான மன உளைச்சலுக்குத் தள்ளப்படுவார்கள். சிறுநீர்க்கசிவு என்பது வெறும் உடல்நலப் பிரச்னையல்ல; மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இம்சை. இது பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், ஆண்கள் மற்றும் பள்ளி செல்லும் பருவத்திலுள்ள குழந்தைகளையும்கூட இது பாதிக்கலாம்.
ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர்க்கசிவுக்கான காரணங்கள், அவற்றுக்கான சிகிச்சைகள், தவிர்க்கும் வழிகள் குறித்து விளக்குகிறார் சிறுநீரகவியல் மருத்துவர் சேகர்.
“சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலையை ‘சிறுநீர்க்கசிவு பிரச்னை’ அல்லது ‘சிறுநீரை அடக்க இயலாமை’ என்கிறோம். இதை ஆங்கிலத்தில் `யூரினரி இன்கான்டினென்ஸ்’ (Urinary Incontinence) என்பார்கள். இந்த பாதிப்புக்குள்ளான ஒருவர், தன்னை அறியாமலேயே சிறுநீர் கழித்துக்கொண்டிருப்பார்.
சொட்டு சொட்டாகப் பிரியும் சிறுநீர், சிறுநீர்ப் பாதை வழியாக சிறுநீர்ப்பையைச் சென்றடையும். ஒருவரின் சிறுநீர்ப்பையில் 400 முதல் 600 மி.லிவரை சிறுநீரைத் தேக்கிவைக்க முடியும். சிறுநீர்ப்பை சுருங்கி விரியும் தன்மைகொண்டது என்பதால், அதிகபட்சம் 850 மி.லிவரை சிறுநீரைத் தாங்கும். சிறுநீர், 400 மி.லியைத் தாண்டியதும், சிறுநீர்ப்பையின் தசைகள் சுருங்கி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தகவலை நரம்புகள் வழியாக மூளைக்குக் கடத்தும். இதனால், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தானாகவே ஏற்படும்.
சிறுநீர்ப்பைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால், மூளைக்குச் செல்லும் தகவல் தொடர்பு தடைப்படும். இதை `நியூரோஜெனிக் பிளாடர்’ (Neurogenic Bladder) என்பார்கள். அதேபோல, சிலருக்கு வயோதிகம், நோய் காரணமாக சிறுநீர் நிரம்பாமலேயே, சிறுநீர்ப்பையில் தசைச் சுருக்கம் ஏற்படும். இதை, `அதீத செயல்பாடுகொண்ட சிறுநீர்ப்பை’ (Overactive Bladder) என்பார்கள். இது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். இவர்களுக்கு சிறுநீர்க்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பொதுவான காரணிகள்
ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கம், பிறப்பிலேயே சிறுநீரகப் பாதை உள்ளிட்ட சிறுநீரக மண்டலம் வளர்ச்சியடையாமலிருப்பது, புராஸ்டேட் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு போன்ற காரணங்களால் சிறுநீர்க்கசிவு பிரச்னை ஏற்படலாம். நாள்பட்ட இருமல், மன அழுத்தம், உடல் பருமன், `அல்சைமர்’ எனும் ஞாபகமறதிநோய் உள்ளவர்களுக்கும் சிறுநீர்க்கசிவு ஏற்படலாம். இவை தவிர கனமான பொருள்களைத் தூக்கும்போது, அடிவயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பை அழுத்தப்பட்டு சிறுநீர்க்கசிவு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிறுநீரை அடக்குவார்கள். அப்போது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியேற்ற அனுமதிக்கும் வால்வு அழுத்தப்பட்டு வலுவிழந்துவிடும். இதனால், சிறுநீர்க்கசிவு பிரச்னை ஏற்படும்.
தீர்வு என்ன?
சிறுநீர்க்கசிவு பிரச்னை, சிறுநீரகத் தொற்று அல்லது பிற நோய்கள் காரணமாக ஏற்பட்டதா என்பதை சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். ஆரம்பநிலையிலிருந்தால் மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றியநிலையில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஒருவேளை உளவியல் காரணங்கள் இருந்தால், மன அழுத்தத்தைத் தவிர்க்க, மனதை எப்போதும் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம், நடைப்பயிற்சி செய்வது நல்லது.
பொதுவாக, குழந்தைகளுக்குப் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருக்கும். இது ஐந்து வயதில் நின்றுவிட வேண்டும். ஆனால், சில குழந்தைகளுக்கு எட்டு வயதுவரைகூட நீடிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வயதைத் தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும். அதிக உடல் எடை சிறுநீர்ப்பையை அழுத்தும் என்பதால், உயரத்துக்கேற்ப எடையைப் பராமரிக்க வேண்டும். தொடர் இருமல், சைனஸ், அடுக்குத் தும்மல் பிரச்னை உள்ளவர்கள், அதற்கான சிகிச்சைகளை ஆரம்பத்திலேயே எடுத்துக்கொண்டால் சிறுநீர்க்கசிவுப் பிரச்னையைத் தடுத்துவிடலாம். மன அழுத்தம், அல்சைமர் போன்ற மூளை, நரம்பியல் நோய்களால் ஏற்படும் சிறுநீர்க்கசிவுக்கு சிகிச்சை கிடையாது. இவர்கள், டயாப்பர் பயன்படுத்தலாம்.
சிறுநீர்ப்பை தசை வலுவிழப்பு, தசைச் சுருக்கம் ஆகியவற்றால் ஏற்படும் சிறுநீர்க்கசிவுக்கு `கீகல்’ (Kegel) உடற்பயிற்சி நல்ல பலன் தரும். உடற்பயிற்சியால் பிரச்னையைச் சரிசெய்ய முடியாதவர்களுக்கும், பிற பிரச்னைகளால் ஏற்படும் சிறுநீர்க்கசிவுக்கும் அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வாக அமையும்.
இந்தப் பிரச்னை இருப்பவர்கள் புகைபிடித்தல், மதுப்பழக்கம், காபி அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டியதும் அவசியம்.’’