சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்?
01 May,2019
காபி, டீ மட்டுமின்றி நீங்கள் சாப்பிடும், அருந்தும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களிலும் சர்க்கரை மிகுந்து காணப்படுகிறது.
சர்க்கரையை பொறுத்தவரை இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று பால், பழம், தேன் போன்றவற்றிலிருந்து இயற்கையாக கிடைப்பது; மற்றொன்று கரும்பு சாறு போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சர்க்கரை.
இதில் இரண்டாவது வகை சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நீண்டகால அடிப்படையில் உடலின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.
ஒருவரது உடலுக்கு தேவையான சர்க்கரை இயற்கையாகவே கிடைக்கும்போது, அது செரிக்கப்பட்டு தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சக்தியை அளித்து அவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது. ஆனால், செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சனையை உண்டாக்குகிறது.
அதாவது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவும் உயர்ந்து, உடலுக்கு சோர்வை உண்டாக்குவதுடன், எரிச்சலை ஏற்படுத்தி, மென்மேலும் சர்க்கரை கலந்த உணவை/ பானத்தை உட்கொள்வதற்கு தூண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரின் உடல் எடை அதிகரிப்பதுடன், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.