கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களும், மருத்துவமும்!
03 Apr,2019
கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும்.
ஒரு பெண் தாய்மை அடைந்த முதல் மாதம் தொடங்கி பத்தாவது மாதம் வரையில், கருவுற்ற பெண்ணின் சிசுவுக்கு கருப்பையிலேயே நோய் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. எனவே கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்தால் கருச்சிதைவுக்கு வாய்ப்பு இன்றி சுகப்பிரசவத்திற்கு கூடுதல் வாய்ப்பு உண்டு.
முதல் மாதம்
சூல்கண்ட முதல் மாதம் பித்தம் அதிகரித்து அடிவயிறு நமநமவென்று வலிகண்டு வேதனையாகும். பித்தவாயு காரணமாக ஏற்படும் இந்த வயிற்றுவலியால் கரு கரைந்து கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. எனவே இதைத் தடுக்க தாமரைப்பூ, குட்டி விளா இலை இரண்டையும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, சந்தனத் தூள் 15 கிராம் சேர்த்து நீர் விட்டு அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பசும்பாலில் கலந்து கொடுக்கவும். இப்படி காலையில் மட்டும் 3 நாள் கொடுக்க கருச்சிதைவு இல்லாமல் மேற்படி வயிற்றுவலி நீங்கி விடும்.
இரண்டாம் மாதம்
உடல் முழுவதும் வாயு சம்பந்தப்பட்டு உடல் வலியும், வயிற்றில் வேதனையும் தோன்றும். இதனால் கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வெற்றிலை 10, தாமரை இதழ் 10, இரண்டும் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காலையில் மூன்று நாள் கொடுக்க வலி நீங்கும்.
மூன்றாம் மாதம்
கருப்பை பலவீனத்தால் திடீரென்று வயிறு வீங்கி கவ்விப் பிடிப்பது போன்ற வலி தாளாமல் துடிப்பார்கள். இதற்கு மருத்துவமுறை – வெள்ளைத் தாமரை பூ இதழ் 15 கிராம், செங்கழுநீர் 15 கிராம் சேர்த்து அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து காலையில் மட்டும் 6 நாள் கொடுக்க கருச்சிதைவு ஆகாமல் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பிக்கும்.
நான்காம் மாதம்
இந்த மாதத்தில் கருவுற்ற பெண்களுக்கு கருப்பையிலிருந்து ரத்தம் வெளிப்படுவதுடன் வலி கண்டால் கரு அழிவதற்கும் அறிகுறியாகும். எனவே கோரைக்கிழங்கு 15 கிராம், நொச்சியிலை 15 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து 200 மில்லி பாலுடன் கலந்து, காலை மட்டும் 3 நாள் கொடுக்க சிசு அழியாமல் காத்து வளரச் செய்யும்.
ஐந்தாம் மாதம்
ஐந்தாம் மாதம் கருப்பை தொடர்பான வயிற்றுக் கோளாறுகள் வந்து எந்தவிதமாக ஆரம்பித்தாலும் அல்லித் தாமரைப்பூ, விலாயிச்சை வேர் இவற்றை 15 கிராம் வீதம் அரைத்து, பசும்பாலில் கலந்து காலை வேளை 3 நாள் கொடுக்க ஐந்தாம் மாதம் கருவில் உள்ள சிசு காப்பாற்றப்படும்.
ஆறாம் மாதம்
ஆறாம் மாத கர்ப்பிணிக்கு குடல்வால், நீர் சுளுக்கு, கருப்பை அழற்சி, உணர்வு போன்றவைகள் தோன்றி வேதனை தரும். இதற்கு கோரைக்
கிழங்கு, முந்திரிப்பருப்பு, பச்சைத் திப்பிலி வகைக்கு 15 கிராம் எடுத்து அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து கொடுத்து வர வலி நீங்கி சுகம் பெறும்.
ஏழாம் மாதம்
ஏழாம் மாதம் வயிற்றுவலி காணுமேயாகில் வெற்றிலை, சந்தனம், குட்டி விளாஇலை வகைக்கு 15 கிராம் சேர்த்து அரைத்து காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து, 3 நாட்கள் காலையில் மட்டும் கொடுக்க வயிற்றுவலி தீரும்.
எட்டாம் மாதம்
இந்த மாதத்தில் கர்ப்பிணியின் கை கால் அசதியும், பலவீனமும் காணும். பசியெடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டார்கள். இது நீங்க கோரைக்கிழங்கும், தாமரைப்பூவும் 15 கிராம் வீதம் அரைத்து, 3 நாள் காலை வேளை தர கருச்சிதைவு ஏற்படாமல் காக்கும்.
ஒன்பதாம் மாதம்
கருவுற்ற பெண்களுக்கு நோய் அணுகாமல் இருக்க அரசம் பட்டை, மருதம் பட்டை வகைக்கு 15 கிராம் அரைத்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து அத்துடன் குங்குமப்பூவும் சேர்த்து காலையில் 3 நாள் குடித்து வரவேண்டும்.
பத்தாம் மாதம்
பத்தாம் மாதம் பூரணமாக கரு வளர்ச்சியடைந்து இருக்கும். அடிவயிறு தளர்ந்து இறங்கவில்லையானால் நாட்டுச் சர்க்கரை, இலுப்பைப்பூவும் வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து, காலை வேளை மட்டும் 3 நாட்கள் கொடுக்க சிக்கல் இன்றி 300 நாட்கள் கழித்த பின்னர் சுகப்பிரசவம் உண்டாகும்.