மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்!
13 Mar,2019
இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு.
இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. மாதவிடாய்க் காலத்தில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படுகிறது, எத்தனை நாள்களுக்கு ரத்தப்போக்குத் தொடர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். 28 முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் சுழற்சியும், மூன்று முதல் ஏழு நாள்கள் வரை ரத்தப்போக்கு ஏற்படுவதும் ஆரோக்கியம். ஆனால், உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சுழற்சிக்கான காலமும் ரத்தப்போக்கின் அளவும் மாறுபடும்.
எது அதிக ரத்தப்போக்கு?
மாதவிடாய் நாள்களில்,
* ஒரு நாளில் ஆறு நாப்கின் வரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது
* தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்படுவது
* ரத்தம் கட்டியாக வெளியேறுவது
* ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பது
* அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் சிரமப்பட்டுச் செய்வது
* மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வது; மூச்சுவிடுவதில் சிரமம்
சிலருக்கு, மூன்று நாள்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும். ஆனாலும், அந்தக் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களே. மாதவிடாயின்போது வெளியேறுவது அனைத்தும் கெட்ட ரத்தம் என்று நினைத்து பலர் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்துவதுண்டு. அது நல்லதல்லஸ மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதிக ரத்தப்போக்குப் பிரச்சனையை `மாதவிடாய் மிகைப்பு’ (Menorrhagia) என்று சொல்வார்கள்.
அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்ஸ
* ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance): கர்ப்பப்பையின் சீரான செயல்பாட்டுக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரொஜெஸ்ட்ரோன் (Progestrone) ஆகிய ஹார்மோன்களே காரணம். இவை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும். ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை ஏற்பட உடல்பருமன், நீர்க்கட்டி, தைராய்டு போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும்.
* கர்ப்பப்பை செயல்பாட்டில் சிக்கல்: கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை சரியாக வெளியேறாவிட்டால், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். புரொஜெஸ்ட்ரோன் சீரான அளவு சுரக்காவிட்டால், ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகும்.
* கர்ப்பப்பையில் கட்டி: கர்ப்பப்பையின் சுவரிலோ, சுற்றுப்புறத்திலோ கட்டி ஏற்பட்டால் மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.
* கருச்சிதைவு: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, தொடர் ரத்தப்போக்கு போன்றவை கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும்.
* புற்றுநோய்: கர்ப்பப்பையில் ஏற்படும் சில கட்டிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டுக்குமான முக்கியமான அறிகுறி, அதிக ரத்தப்போக்குதான்.
* மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்படுவது, புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
* மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஊட்டச்சத்துக்குறைபாடு காரணமாக சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அதிக ரத்தப்போக்கு, ஒருகட்டத்தில் ரத்தச்சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தோல் வெளிறிக்காணப்படுதல், மிகவும் சோர்வாக உணர்தல், வலுவிழந்து காணப்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும்.