எச்.ஐ.வி. தொற்றிய நோயாளி உடலில் இருந்து கிருமிகள் முழுமையாக அகற்றம்
07 Mar,2019
எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்கு உள்ளான பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரது உடலில் இருந்த எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
எச்.ஐ.வி. நோய் எதிர்ப்புத் திறன் மிகுதியாக உள்ள ஒருவரது உடலில் இருந்து ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நோயாளிக்கு தரப்பட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த எச்.ஐ.வி. நோயாளி ஒருவருக்கு இதைப் போலவே எச்.ஐ.வி. எதிர்ப்புத் திறன் மிகுந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜை பொருத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் இருந்து எச்.ஐ.வி. கிருமிகள் ஒழிந்தது தெரியவந்தது.
தற்போது லண்டன் நோயாளி இவ்விதம் எச்.ஐ.வி. கிருமியிடம் இருந்து விடுதலை பெறும் இரண்டாவது நோயாளியாகிறார்.
எச்.ஐ.வி. நோய்த் தொற்றியவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் ஆன்டி ரெட்ரோவைரல் சிகிச்சையை நிறுத்தி 18 மாதங்கள் ஆன பிறகும் இந்த பிரிட்டன் நோயாளி உடலில் எச்.ஐ.வி. கிருமி இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.
எச்.ஐ.வி. நோய்த் தொற்றினை குணமாக்க முடியும் என்ற தமது நம்பிக்கையை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துவதாக சர்வதேச எய்ட்ஸ் சங்கம் கூறியுள்ளது.
தி டுவார்ட்ஸ் என்ற எச்.ஐ.வி. சிகிச்சை அமைப்பு ஒன்று இந்த ஆய்வு முடிவுகள் அற்புதமானவை, முக்கியமானவை என்று கூறியுள்ளது.
ஆனால், இந்த சிகிச்சையில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட நோயாளி நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டார் என்று இப்போதே சொல்ல முடியாது என்கிறார்கள்.
மேலும், எச்.ஐ.வி. தொற்றிய நோயாளிகளுக்கு இந்த முறையில் சிகிச்சை அளிப்பது நடைமுறை சாத்தியமானதல்ல என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யுனிவர்சிட்டி காலேஜ், லண்டன், இம்பீரியல் காலேஜ் லண்டன், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன.
இந்த ஆய்வு முடிவுகள் நற்செய்திதான். ஆனால், இந்த நோய் பரவுவதை தடுப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்கிறார் தென்னாப்பிரிக்காவின் தொற்றும் நோயியல் தேசிய கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அட்ரியன் பியூரன்.