அலட்சியம் வேண்டாம்!
06 Mar,2019
: பார்வையில் சிறு புழுக்கள் நெளிவது போலவும், பூச்சிகள் பறப்பது போலவும் உணர்ந்த அனுபவம், பலருக்கு நேர்ந்திருக்கும். கண் மிதவைகள் எனப்படுகிற, இவை பெரும்பாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அடிக்கடி மிதவைகள் கண்களில் தெரிந்தால், கண் மருத்துவரை அணுக வேண்டும்.உட்புறக் கண்களின், 80 சதவீத அமைப்பு, 'ஜெல்' போன்ற பொருளால் ஆனது. அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை எப்போதாவது உடையும்போது, அந்த காலியிடத்தில் ஒளிபட்டு, நிழலைப் பிரதிபலிக்கும். அந்த நிழல் தான், மிதவைகளாகத் தெரியும். இப்பிரச்னை, 10-ல், ஏழு பேருக்கு இருக்கலாம். வெள்ளை நிற காகிதம், வானம் போன்ற பிரகாசமான பொருட்களைப் பார்க்கும் போது, கண்களில் மிதவைகள் தெரியும்.கண்களின் வட்டமான வடிவத்தை, ஜெல் போன்ற இந்த அமைப்பு பராமரிக்கிறது. மேலும், வெளிச்சமானது, கண்களின் பின்புறத்தில் இருக்கும் விழித்திரையை அடைய, இதன் வழியாகத் தான் ஊடுருவிச் செல்ல வேண்டும். பெரும்பாலான அளவு, நீரால் நிறைந்திருக்கும். இதில், புரதம் உள்ளிட்ட பிற பொருட்களும் உள்ளன.இந்த ஜெல்லில் உள்ள புரதங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வது; வயது மூப்படையும்போது, இவை தானாகவே சுருங்குவது, சிறிய மாசுகள் அந்தப் பகுதியில் நுழைவது. கண்களில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு இருந்தால், அந்த ரத்தத் துளிகள் உறைந்து, இப்பகுதியில் படிவது; விழித்திரையில் சிறிய துளைகள் ஏற்படுவது ஆகியவை, கண் மிதவைகள் உருவாக காரணங்கள்.கறுப்பு அல்லது சாம்பல் நிறப்புள்ளிகள், நெளிவான கோடுகள், வளையங்கள், நுால் போன்ற இழை, சிலந்தி வலை வடிவங்களில் இவை தோன்றும். இவ்வாறு தோன்றும் மிதவைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. எப்போதாவது தோன்றி மறையும் மிதவைகளால் பிரச்னை இல்லை. இவற்றால் பார்வையில் பிரச்னைகள் ஏற்பட்டால், மருத்துவரை அணுகி, காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை எடுப்பது அவசியம்; ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையும் அவசியம்.