சத்தம்
அதனால் சிலருக்கு செவிட்டுத்தன்மை ஏற்படா விட்டாலும் கூட, உரக்கப் பேசினால் மட்டும் தான் காது சரியாகக் கேட்கும். குடும்பத்தில் அவர்களுடைய பரம்பரையில் யாரேனும் பிறவிச் செவிடர்கள் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ரத்த உறவு திருமணங்கள்
பொதுவாக உங்களுடைய பரம்பரையில் அல்லது நெருங்கிய உறவுகளில் யாருக்கேனும் செவிட்டுத் தன்மை இருந்தால், அவர்கள் ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குக் காது கேளாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
காதுவலிக்கு காரணம் என்ன?
பொதுவாக காது வலி உண்டாவதற்கான சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. அதாவது நம்முடைய மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுப் பகுதிக்குச் செல்லுகின்ற குழாயில் அடைப்புகள் ஏற்பட்டு, நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்த் தொற்றுக்களினால் தான் காது வலி ஏற்படுகிறது.
அதேபோல தொண்டையில் ஏற்படுகின்ற அழற்சி காரணமாகவும் காதுவலி ஏற்படலாம். நோய்க்கிருமிகளின் தாக்கத்தினால் காது வலி உண்டாகிறது. இதற்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது தான் நல்லது.
சுவாசத் தொற்றுகள்
சிலருக்கு சைனஸ் பிரச்சினை இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அவர்களுக்கும் காதுவலி எளிமையாக வந்துவிடும். அதாவது சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சினை வெளியேற்றுவதும் கூட காதுவலி ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம். மூச்சு உறுப்புகளில் ஏற்படுகின்ற தொற்றுநோய் காதுவலிக்குக் காரணியாகவும் அமையும்.
சைனஸ், டான்சில், தாடைப் பகுதியில் உள்ள எலும்புகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் காதுவலி வரும்.
நீர்நிலை குளியல்
பொதுவாக, ஆறு, குளங்களில் அடிக்கடி குதித்துக் குளிப்பவர்களுக்கும் கடல் நீரில் குளிப்பவர்களுக்கும் நடு செவிக்குழலில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனாலும் மிகக் கடுமையான காது வலியால் பாதிக்கப்படுவார்கள்.
சளி, மூக்கடைப்பு
பொதுவாக சளி பிடித்தல், மூக்கடைப்பு இயல்பாக எல்லோருக்கும் ஏற்படுகிற பிரச்சினை தான். ஆனால் இதுவே சளியும் மூக்கடைப்பும் அதிகமாகிற பொழுது அதனால் அதிகமாகக் கஷ்டப்பட்டு நீங்கள் மூக்கு சிந்தினாலும் காதில் உங்களுக்கு வலி உண்டாகும்.
பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
பற்களில் உண்டாகிற சொத்தைப்பல், கடைவாய்ப்பல் வெளிவராமல் இருப்பது, நாக்கு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படுவது, டான்சில் சதை வளர்ச்சி உண்டாவது, கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மற்ற உறுப்புகளை அவை பாதிப்பதனாலும் கூட காது வலி ஏற்படும்.
என்ன செய்யக்கூடாது?
நம்முடைய காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. அப்படி சுரப்பதனால் காதுக்குள் சேருகின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேல் தானாக வெளியே வந்துவிடும். அதனால் காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருள்களையும் உள்ளு விட்டு சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்யக்கூடாது.
ஜவ்வு கிழியும்
நம்முடைய காதுகள் 80 தல் 85 டெசிபல் வரையிலும் இருக்கின்ற சத்தத்தைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் சத்தம் நம்முடைய செவிப்பறைகளை எட்டுகிற போது, அந்த அதிக சத்ததத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சவ்வு கிழிந்துவிடும்.
இயர்போன்
சிலர் காதில் இயர்போளை எப்போதும் மாட்டிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ பாட்டு கேட்டுக் கொண்டே அப்படியே இயர்போனோடு தூங்கிவிடுவார்கள். அதிக சத்தம் வெளிவரும் விடியோ கேம், படம் பார்ப்பது, செல்போன் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை காதுகளில் பெரும் வலியை ஏற்படுத்தும். அதனால் ஒரே காதில் வைத்துப் பேசக்கூடாது. அவ்வப்போது காதுகளை மாற்றி மாற்றி பேச வேண்டும்.
காதில் எண்ணெய்
சிலர் காதுவலி வந்தால் தேங்காய் எண்ணெய் இல்லையென்றால் நல்லெண்ணெயைக் காய்ச்சி வெதுவெதுப்பான இருக்கும்போது காதுக்குள் விடுவார்கள். இதை செய்யவே கூடாது. முதலில் காதுவலி எதனால் வந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளாமல் எண்ணெயை ஊற்றினால் அது வீண் விபரீதமாகிவிடும்.
காதில் பூச்சி
இதுவே காதில் ஏதேனும் பூச்சி நுழைந்துவிட்டால் சில சொட்டு தேங்காய் எண்ணெயையோ அல்லது நல்லெண்ணெயையோ விட்டால் பூச்சி இறந்துவிடும். ஆனால் எண்ணெயை சூடுபடுத்தி ஊற்றக்கூடாது.
தலையை லேசாக சாய்த்து வைத்திருந்தாலே பூச்சி தானாக வெளியே வந்துவிடும்.
இந்த விஷயங்களையெல்லாம் முதலில் கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுவது மிக முக்கியம்.