வயதுக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். ஆனால், எல்லா நேரத்திலும் அப்படியிருக்காது. சில பிரச்னைகளுக்கு, நீண்டகாலமாக நாம் கடைப்பிடித்துவரும் சில பழக்கங்களும் காரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பிரச்னைதான் கழுத்துவலி.
கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகுவரை பாதிக்கும் `செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் (Cervical Spondylosis) பிரச்னை, வயது வித்தியாசமின்றி யாருக்கு
வேண்டுமானாலும் ஏற்படலாம். இது குறித்து, எலும்பு மூட்டு மருத்துவர் நாவலடி சங்கரிடம் கேட்டோம்.
“முதுகுத்தண்டுவடத்தில் ஏற்படும் தொய்வு காரணமாக ஏற்படுவதுதான் ‘செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்.’ பெரும்பாலும் வயதானவர்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது என்றாலும், மாறிவரும் வாழ்க்கைமுறை காரணமாக இளைய தலைமுறையைச் சேர்ந்த பலரும்கூட இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு இது நாள்பட்ட நோயாகவும், தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் நோயாகவும் இருக்கிறது. கழுத்தின் தண்டுவடம், அந்தப் பகுதியிலிருக்கும் டிஸ்க் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள், கழுத்து மூட்டுப் பகுதி தன் நெகிழ்வுத் தன்மையை இழப்பது போன்றவைதான் இதற்கான அடிப்படைக் காரணங்கள்.
டிஸ்க் மற்றும் மூட்டுகளில் தொய்வு ஏற்படவும், அந்தப் பகுதி அதன் நெகிழ்வுத் தன்மையை இழக்கவும், வயது முதிர்வு முக்கியமான காரணம். அந்த பாதிப்பு 80 சதவிகிதம். ஆனால், ‘இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனரேஸ’ என்று நீங்கள் கேட்கலாம். வயது வித்தியாசமின்றி ஏற்படும் இந்த செர்விகல் ஸ்பாண்டிலோசிஸுக்கான மற்ற காரணங்கள் இங்கேஸ
* கழுத்துப் பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்கும்போது, அதிலிருக்கும் டிஸ்க் தேய்மானம் அடையத் தொடங்கும். அந்தத் தேய்மானம், ஸ்பாண்டிலோசிஸை ஏற்படுத்தும். சிறு வயதிலேயே அதீத உடலுழைப்புக்கான வேலையைச் செய்பவர்களுக்கு, 25 வயதைத் தாண்டும்போதே பிரச்னை தொடங்கிவிடுகிறது.
* ஸ்பாண்டிலோசிஸ், ஒரு வகை தொழில் சார்ந்த பிரச்னை. ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், கட்டடத் தொழில் செய்பவர்கள், பேருந்து நடத்துநர்கள், வாகன ஓட்டுநர்கள், தொலைதூரத்துக்கு இருசக்கர வாகனத்தில் அடிக்கடி செல்பவர்கள், கணினியில் அமர்ந்து பல ஆண்டுகளாக வேலை பார்ப்பவர்கள், பணி நேரத்தில் கழுத்தை அசௌகர்யமான பொசிஷனில் வைத்திருப்பவர்களுக்கு இது ஏற்படுவது இயல்பு. ஒரே பொசிஷனில், ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் நிற்பதும் இதற்குக் காரணம். பணி நிமித்தமாக ஸ்பாண்டிலோசிஸ் ஏற்பட்டிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பணியைத் தொடர வேண்டாம். மீறித் தொடர்ந்தால், பிரச்னை இன்னும் அதிகமாகும்.
* எலும்பின் வளர்ச்சி ஏதாவதோர் இடத்தில் அதிகமாக இருந்தால், அந்தப் பகுதியில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
* மரபியல்ரீதியாகவும் ஏற்படலாம்.
அறிகுறிகள்
* பெரும்பாலும், முதல் கட்டத்தில் அறிகுறிகள் தெரியாமலிருக்கலாம். நாளாக ஆக, தீவிரமான கழுத்துவலி ஏற்படும். அதிகாலையில் கழுத்தில் வலி உணர்வு மிக அதிகமாக இருக்கும். கூடவே, அந்தப் பகுதி முழுக்க இறுக்கமான உணர்வு ஏற்படலாம். கவனிக்காமல்விடும் பட்சத்தில், தலைச்சுற்றலும் ஏற்படும். தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, சிகிச்சையைத் தொடங்கவும்.
* தோள்பட்டையைச் சுற்றி வலி உணர்வு ஏற்படுவதுஸ இந்த நிலையில், தோள்பட்டையை மிக வேகமாகவோ, கனமான பொருள்களைத் தூக்குவதற்கோ பயன்படுத்துவது கடினம்.
* எழுந்து நிற்கும்போது, சம்மணமிட்டு உட்காரும்போது, இருமல் அல்லது தும்மல் வரும்போது கழுத்தில் வலி உணர்வு அதிகமாக இருக்கும். பின்னோக்கித் திரும்பவேண்டிய சூழலில் மிகவும் சிரமப்பட்டுத் திரும்ப நேரிடும்.
* தசைப் பகுதிகளில் பலவீனமான உணர்வு ஏற்படுவதுஸ இந்த அறிகுறி பெரும்பாலும் ஏதேனும் சிரமமான வேலையைச் செய்யும்போதுதான் ஏற்படும். இதோடு தலையின் பின்பகுதியில் தீவிரமான வலி உணர்வு இருக்கும்.
கவனம்!
* ஒவ்வொரு முறை உடலின் பொசிஷன் மாறும்போதும், தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
* வலி அதிகமாவதால், கழுத்தை சௌகர்யமில்லாத பொசிஷனில் வெகு நேரத்துக்கு வைத்துக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை.
* வயிறு தொடர்பான சிக்கல் அதிகமாக இருப்பது, அடிக்கடி நிலை தடுமாறுவது போன்றவை இருந்தால், அதற்கான தீர்வை உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
* புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
* உடல்பருமனாக இருக்கும் நோயாளிகள், வெகு காலமாக மிதமான மற்றும் உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளை மட்டும் செய்து வருவது பிரச்னையின் தீவிரத் தன்மையை அதிகரிக்கும்.
* எந்த வேலையைச் செய்யும்போது கழுத்தில் வலி அதிகரிக்கிறதோ, அதை மீண்டும் செய்யாமலிருப்பது நல்லது.
* பின் கழுத்தில் அடிக்கடி இறுக்க உணர்வு வருவது, பின்னந்தலையில் வலி அதிகமாக இருப்பது, கை மற்றும் தோள்பட்டையில் அவ்வப்போது உணர்விழப்பது போன்ற அறிகுறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது.
நோயை உறுதிசெய்யும் முறை
உங்கள் அன்றாட வேலைகளை- செய்யச் சொல்லி மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். நடக்கும் முறை, கழுத்தைத் திருப்பும்விதம், கைகளை உபயோகப்படுத்தும் முறை போன்றவை கண்காணிக்கப்படும். வித்தியாசமாகச் செய்தால், அடுத்தகட்ட பரிசோதனைகள் செய்யப்படும்.
எக்ஸ்ரே, சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படும். நரம்புப் பகுதிகளைக் கண்டறிய, எலெக்ட்ரோ மையோகிராம் (Electromyogram) செய்து பார்க்க வேண்டும்.
சிகிச்சைகள்
முதற்கட்டத்தில் கழுத்துப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படும். பிரச்னை தீவிரமாக இருந்தால், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதன் பிறகும் வலி குறையவில்லையென்றால், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். வெகு சிலருக்குத்தான் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதால், பயப்படத் தேவையில்லை.”
ஜெ.நிவேதா.
கழுத்துவலியைக் குறைக்கஸ
* கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள், நேராக அமர்ந்து வேலை பார்க்க வேண்டும். கீபோர்டில் டைப் செய்யும்போது, கைகளுக்கும் கீபோர்டுக்கும் இரண்டு இன்ச் இடைவெளி இருக்க வேண்டும். கால்களுக்கு அடியில் ஃபுட் ரெஸ்ட் (Foot Rest) பயன்படுத்தவும்.
* தூங்கும்போது, சிறிய தலையணையை உபயோகப்படுத்தவும். தோள்பட்டைக்கும் சேர்த்தே தலையணை வர வேண்டும்.
* உடல் பருமனாக இருப்பவர்கள், தலையணை இல்லாமல் தூங்கக் கூடாது.
* புத்தகம் வாசிக்கும்போதும், டி.வி பார்க்கும்போதும் நேராக அமர்ந்திருக்க வேண்டும்.
* ஒத்தடம் கொடுத்தால், வலி உணர்ச்சி தற்காலிகமாக குறையத் தொடங்கும். எனவே, அதைப் பின்பற்றலாம்.
* இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பள்ளங்கள் அதிகமிருக்கும் இடங்களிலும், ஸ்பீடு பிரேக்கர் இருக்கும் இடங்களிலும் மிகவும் மெதுவாகச் செல்ல வேண்டும். அதிக எடையுள்ள ஹெல்மெட்டைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள் கவனிக்கவும்!
`கர்ப்பிணிகளும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் அவசியம் ஃபோலிக் ஆசிட் நிறைந்த கீரைகள், பழங்கள், ஆட்டிறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது ஓர் ஆய்வு. இதனால், கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏற்படும் `ஸ்பைனா பைஃபைடா’ (Spina Bifida) என்ற ஒரு வகை முதுகுத்தண்டுவட நோயைத் தடுக்க முடியுமாம்; புற்றுநோய் வராமலும் காக்குமாம்.