ஒரே காஸ் பிரச்னைஸ என்னால முடியலைஸ’, `வயிறு கல் மாதிரி இருக்கு, பசி எடுக்குறதே இல்லை, சரியா சாப்பிடவும் முடியலைஸ’ என்பன போன்ற புலம்பல்களை அடிக்கடி கேட்டிருப்போம். வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்னை. சிலருக்கு, கடுமையான வயிற்றுவலியும் சேர்ந்து படுத்தி எடுத்துவிடும். வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று விவரிக்கிறார் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன்.
உப்புசம் ஏற்படுவது ஏன்?
“உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாய்வு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது.
உப்புசத்தை ஏற்படுத்தும் பிற காரணங்கள்
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களை அருந்துவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற நேரங்களில் நம்மையும் அறியாமல் காற்றையும் சேர்த்து விழுங்குதல்.
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முளைகட்டிய தானியங்கள், வாழைக்காய், முட்டை, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, செயற்கைப் பழச்சாறுகள், வாய்வை உண்டாக்கும் உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடுதல்.
`லாக்டோஸ் ஒவ்வாமை’ (Lactose Intolerance) இருப்பவர்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுதல்.
சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா சேர்தல். ஒரு வேளை உணவு உண்டதும் அடுத்த வேளை உணவு உண்ண அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளுதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குதல்.
காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, எண்ணெயில் பொரித்த இறைச்சி, பாக்கெட்டுகளில் அடைத்த மசாலா அதிகமுள்ள உணவுகள், அதிகக் கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிடுதல்.
இவை தவிர, `இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable Bowel Syndrome) எனப்படும் வயிற்றில் எரிச்சல் பிரச்னை, சர்க்கரைநோய், `குளூட்டன்’ என்னும் புரதம் செரியாமை, அசுத்தமான நீர்நிலைகளில் வாழும் `ஜார்டியா’ (Giardia) எனும் பூச்சி, நீர் மூலம் உடலுக்குள் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளாலும் வயிற்று உப்புசம் ஏற்படலாம்.
உப்புசத்தால் உண்டாகும் பிரச்னைகள்
* வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல்
* வாய்வுத் தொல்லை
* சாப்பிட்டதும் அசௌகர்யமாக உணர்தல்
* வயிற்று இரைச்சல்
* வயிற்றுப்பிடிப்பு
* குமட்டல்
தவிர்க்கலாம்ஸ தடுக்கலாம்!
* `புரோபயாடிக்ஸ்’ (Probiotics) என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
* மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தாமதிக்காமல் உடனடியாக மலம் கழித்துவிட வேண்டும்.
* `குளூட்டன் ஃப்ரீ டயட்’ (Gluten free diet) உணவு முறையைப் பின்பற்றலாம். `குளூட்டன்’ என்னும் புரதம் இல்லாத உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.
* மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நாளொன்றுக்கு மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி அருந்துவது நல்லது.
* புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* எந்த உணவைச் சாப்பிட்டால் வாய்வு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். தொல்லை தொடர்ந்தால் வந்திருக்கும் பிரச்னைக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது இதைத் தீர்க்க உதவும்.