நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்
28 Jan,2019
என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என்று அடிக்கடி புலம்புபவரா நீங்கள்? அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நீங்கள் ஒல்லியாக இருப்பதற்கு, உங்களது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணமென்று தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், சிறந்த உணவு பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் பிஎல்ஓஎஸ் ஜெனிடிக்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
ஒருவர் குண்டாக இருப்பதற்கான காரணங்களை விளக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மரபணுரீதியிலான மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கான காரணத்தை விளக்கும் வகையிலான ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டதில்லை.
இந்நிலையில், உடல் பருமன் குறியீட்டு எண் (BMI) 18ஐ விட குறைவான அளவுடைய பிரிட்டனை சேர்ந்த 1600 பேரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான 2,000 பேர், சராசரியான உடல் எடையை கொண்ட 10,000 பேருடன் அது ஒப்பிடப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
உடல் பருமன் உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களை கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமனோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.
இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆராய்ச்சியாளரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சடாஃப் பாரூக்கி, "இந்த ஆராய்ச்சியின் மூலம் ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் காரணமில்லை என்பதும், அந்த குறிப்பிட்ட நபரின் உடலிலுள்ள மரபணுக்களில் உடல்பருமனை நிர்ணயிக்கும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பதே காரணமென்பது முதல் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.
"எடையை மையமாக கொண்டு ஒருவரை விமர்சிப்பது எளிதானதாக தோன்றலாம். ஆனால், அதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்க்கும்போது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.""நமது உடல் எடையை கட்டுப்படுத்துவதில் நாம் நினைப்பதைவிட மிகவும் குறைவான அளவே நம்மிடம் கட்டுப்பாடு உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒருவர் ஒல்லியாக இருப்பதற்குரிய காரணியாக விளங்கும் குறிப்பிட்ட மரபணுக்களை கண்டறிவதே தங்களது அடுத்த இலக்கு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டிடுபிடிக்கப்பட்டுள்ள காரணங்களை மையாக கொண்டு, நீண்டகால அடிப்படையில் எடை குறைப்பிற்கான திட்டங்களை தீட்டுவது சாத்தியமாகுமா என்ற கோணத்தில் செயல்படுவதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
'மரபார்ந்த வித்தியாசம்'
இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் டாம் சாண்டர்ஸ், "இது மிகவும் முக்கியமான, சரியான முறையில் நடத்தப்பட்ட ஆய்வு. ஏனெனில், அபரிதமான உடல் பருமனை கொண்டிருப்பவரும், சராசரியை விட குறைந்த உடல் எடையை கொண்டிருப்பவரும், வேறுபட்ட மரபணு தொகுப்பு எண்ணிக்கையை கொண்டிருப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாக உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
"பெரும்பாலும் ஒருவர் வயதுக்கு வந்த பின்பு ஏற்படும் உடல் பருமனுடன், சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, கலோரி மிகுந்த உணவுகள் போன்றவற்றிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், ஒருவரது உடல் பருமனுக்கு காரணமாக எது கூறப்பட்டாலும், காலங்காலமாக கூறப்படும் உடற்பயிற்சியும், நல்ல உணவும் ஒருவர் உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்