மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், நெஞ்சில் லேசாக வலி எடுத்தாலும் ‘மாரடைப்பாக இருக்குமோ?’ என்று பயப்படுகிறார்கள் மக்கள். நெஞ்சுப் பகுதியில் ஏற்படுகிற எல்லா வலிகளும் மாரடைப்பின் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. வேறு சில பிரச்னைகள் காரணமாகவும் இப்படியான வலி உண்டாகலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பயம் அல்லது கவலை அதிகமாக இருந்தாலும் நெஞ்சில் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம்.
‘அது மாரடைப்பு அல்ல, ஒருவகை மனம் சார்ந்த பிரச்னைதான். அதைச் சரிசெய்தால் போதும். வலியும் சரியாகிவிடும்’ என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள். மனம் சார்ந்து ஏற்படும் ஒரு பிரச்னை, மாரடைப்பு ஏற்படுவது போன்றதொரு மாயபிம்பத்தை நம் மனதில் ஏற்படுத்துமா? மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் கேட்டோம்.
“பயம், பதற்றம். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஆனால் இரண்டும் ஒன்றல்ல. பதற்றத்தால் ஏற்படும் வலியைவிட, பயத்தால் ஏற்படும் வலி சற்றே ஆபத்தானது. காரணம், பய உணர்வு அதிகரிக்கும்போது இதயத்துடிப்பும் அதிகரிக்கும். இது, மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அல்லது வாந்தி, குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். பயம் அதிகரிக்க அதிகரிக்க, பிரச்னை தீவிரமடைவது போன்ற எண்ணம் மேலோங்கும். இப்படிப்பட்ட எண்ணங்கள், உண்மையிலேயே இதயத்துடிப்பை அதிகப்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது. என்றாலும், இது மாரடைப்பாக மாறாது. பயம், பதற்றம் மட்டுமல்ல, எந்த ஓர் உணர்ச்சி அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்பட்டாலும், இதைப்போல ஏதோ ஒரு சிக்கல் ஏற்படும்.
சிலர், குறிப்பிட்ட ஏதோவொன்றை அதிகமாக யோசித்து தீவிரமான மனஅழுத்தத்தில் இருப்பார்கள். என்றோ ஒருநாள் அவர்கள் எதிர்பார்த்ததுபோல நெகட்டிவான சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால், ‘இனி எல்லாமே நாம் நினைத்ததுபோல தவறாகத்தான் நடக்கும்’ என நினைத்துப் பதற்றப்படத் தொடங்குவார்கள். இந்த நிலை தொடர்ந்தால், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும். ‘நம்முடைய பிரச்னை மிகத் தீவிரமானது’ என மனம் நம்பும்போது, தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துமே நின்றுவிட்டதுபோலத் தோன்றும்.
இப்படிப்பட்ட ஓர் உணர்வின் அதீத வெளிப்பாடாக எழும் அறிகுறிகளே மூச்சுத்திணறல், தசை இறுக்கம், அதிக வியர்வை, நெஞ்சுவலி, உடல் ஜில்லிடுவது அல்லது சூடாவது போன்றவை. இப்படியான பாதிப்புகள் நிஜமாக இருக்காது என்றாலும், மனம் அவற்றையே முழுமையாக நம்பும்.
அந்த வகையில், பதற்ற உணர்வு அதிகமாகி ஏற்படும் பாதிப்புதான் ‘ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety Attack). ஏற்கெனவே அதீத மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இ்ந்த வகை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மனஅழுத்தம் மட்டுமின்றி, எதிர்பாராத சூழலில் நடக்கும் ஏதாவதொரு சம்பவம்கூட, இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக, திடீரென யாரேனும் தாக்க வரும் சூழல், எதிர்பார்த்திராத விபத்தைச் சந்திக்க நேர்வது போன்றவை. பதற்றம் அதிகமாகும்போது, ‘ஆங்ஸைட்டி அட்டாக்’ ஏற்படும் என்பதுதான் அடிப்படை. இதுபோலவே மற்றொரு வகை பாதிப்புதான், ‘பேனிக் அட்டாக்’ (Panic Attack). அதாவது, பயத்தால் ஏற்படும் பிரச்னை. இந்தப் பிரச்னைகளில், உடல் சார்ந்த பிரச்னைகளைவிட மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். காரணம், பயம் அதிகரிக்கும்போது பதற்றம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளும் அதிகரிக்கும். எனவே, சில நிமிடங்களில் பிரச்னை அதன் தீவிரத்தன்மையை அடைந்துவிடும்.
சில நிமிடங்களில் ஏற்படும் பாதிப்பென்பதால், உளவியல் சிக்கல்களைத் தாண்டியும் உடல் சார்ந்த சிக்கல்களே அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நினைப்பது, ‘நமக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது’ என்பதைத்தான். இது, உயிர் மீதான அவர்களின் பயத்தை ஏற்படுத்தி, பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும்.
தவிர்க்கக் கூடாத அறிகுறிகள்
உணர்ச்சி கட்டுப்பாடின்மைதான் இத்தகைய பாதிப்புகளுக்கு அடிப்படை என்பதால், அட்டாக் வருவதற்கு முன்பாகவே சில அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, நெஞ்சுப் பகுதியில் லேசான வலியுணர்வு, நெஞ்சை இறுக்கும் உணர்வு போன்றவை. அந்த நேரத்திலேயே மருத்துவர்களை அணுகவும். ஒருவேளை அது உணர்ச்சி கட்டுப்பாடின்மைதான் என்றால், உடல் சார்ந்து எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் அறிவுரை தருவார்கள். இருந்தும், பின்வரும் பிரச்னைகளோ, பழக்கங்களோ இருந்தால், தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகவும்.
தன்னை அறியாமல் அடிக்கடி ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பது.
நடத்தை காரணமாக, குடும்பம் மற்றும் அலுவலகம் சார்ந்த இயல்பு வாழ்க்கையில் பிரச்னை வருவது.
உடல் சார்ந்த வேறேதும் தீவிரமான அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புகள் இருப்பது.
அடிக்கடி பதற்றமாவது அல்லது பய உணர்வு ஏற்படுவது, எப்போதும் மனஅழுத்தத்தோடு இருப்பது.
புகை மற்றும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவது.
முதலுதவி, சிகிச்சைகள்
அட்டாக் வந்துவிட்டது என்றால், உடனடியாக என்ன செய்வதென்று தெரியாது. பாதிப்பின்போது ஏற்படும் வலி உணர்வை, மனமும்கூட, உடல் சார்ந்த பிரச்னைகளாகவே நம்பும். இது இயல்புதான். பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான, அதே நேரம் ஆபத்தான அறிகுறி மூச்சுத்திணறல். அப்படி ஏற்பட்டால், அந்த வேளையில் அருகிலிருக்கும் காகிதப்பைகளின் துணையோடு மூச்சுவிடுங்கள். நீங்கள் வெளிவிடும் காற்றைத்தான் நீங்கள் சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுவாசிக்க வேண்டும். இது முதலுதவி சிகிச்சைதான். மூச்சுப் பிரச்னை சரியானவுடன், அடுத்தகட்டமாக, மருத்துவரை அணுகவும்.
உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்தால், மனஅமைதி கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் அதைப் பரிந்துரைப்பதுண்டு. தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர்களுக்கும் ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா? உணர்ச்சிகளுக்கான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களில் பாதிப்பு ஏற்படுவதுதான். செரடோனின் (Serotonin), டோபமைன் (Dopmine), நார்பினெப்ரின் (Norepinephrine), காமா அமினோப்யூட்ரிக் அமிலம் (Gamma-Aminobutyric Acid) ஆகியவைதான் அந்த நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள். எனவே, அவற்றைச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள், மாத்திரைகள் தரப்படும். அனைத்துக்கும் முதன்மையாக கவுன்சலிங் தரப்படும்” என்றார் ரங்கராஜன்.
பயம்ஸ பாதிப்புகள்
மனம் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறியும் ‘Diagnostic and Statistical Manual of Mental Disorders’ என்ற அமைப்பு, பயத்தால் ஏற்படும் பாதிப்பை (Panic Attack) இரண்டு வகைகளாகப் பிரித்திருக்கிறது. ஒன்று, எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்பு. மற்றொன்று, குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படும் பாதிப்பு.
எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்பு என்பது, சூழல் மற்றும் சந்தர்ப்பங்களைச் சார்ந்தது. நம்மால் அதைச் சரியாக கணிக்க முடியாது.
எதிர்பார்த்து ஏற்படும் பாதிப்பு என்பது, போபியா (Phobia) பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்படுவது. சிலருக்கு, குறிப்பிட்ட ஏதாவதொரு விஷயத்தைக் கண்டால் பயம் ஏற்படும். அது தெரிந்தும், அதை நோக்கிச் செயல்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படும்.