இதனை பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் க்ளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது. நமது பாட்டி காலத்தில் கூட, சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.
கிளிசரின்
க்ளிசரினுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவுவார்கள். இதனை தொடர்ச்சியாக செய்து வருவதால் முகம் மிருதுவாக மாறி, எல்லா நேரத்திலும் பளபளப்பாக ஜொலிக்கும். கடுமையான வெயில் காலங்களிலும், நடுங்கும் குளிர் காலங்களிலும் இது நல்ல பலனைத் தருகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சரும வறட்சி
சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதில் கிளிசரின் சிறந்த பலன் அளிக்கிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் மற்றும் ஈரப்பதத்துடன் இருக்க முடிகிறது. உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இழந்து காணப்பட்டால், கிளிசரின் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறட்சியைப் போக்கலாம்.
pH அளவு
சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவுகிறது கிளிசரின். பொதுவாக வியர்வை மூலம் சருமத்தின் நீர் ஆவியாகி வெளியேறுகிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் சருமத்தில் உண்டாகும் நீர் இழப்பை குறைத்து சருமத்தை நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது.
சருமத்தில் ஈரப்பதத்தால் ஆன ஒரு அடுக்கை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் போன்றவற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து , சருமத்தை ஆரோக்கியமாகவும், நீர்ச்சத்தோடும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் நீங்கள் கிளிசரின் பயன்படுத்துவதை அதிகரிக்கலாம்.
பூஞ்சை எதிர்ப்பு
இயற்கையாக குணப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ள கிளிசரின் ஒரு இயற்கை மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, எக்சிமா, சோரியாசிஸ் போன்ற சரும நிலைகளுக்கு சிறந்த தீர்வைத் தருவது கிளிசரின்.
இறந்த செல்கள்
சரும அணுக்களில் உள்ள புரதங்களை உடைத்து அவற்றை சருமத்தில் இருந்து வெளியேற்ற உதவுகிறது கிளிசரின். இதனால் புதிய சரும அணுக்கள் உற்பத்தி அதிகரித்து, தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் திரும்பக் கிடைக்கிறது.
பல அழகு சாதனப் பொருட்களில் கிளிசரின் பயன்படுத்துவதன் காரணத்தை இப்போது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். இன்று சந்தையில் பல ஒப்பனைப் பொருட்கள் கிளிசரின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் மற்ற ரசாயன சேர்க்கைகள் இருப்பதால் வீட்டில் தயாரிக்கப்பட்ட கிளிசரின் அழகு சிகிச்சைகளை மேற்கொள்வது உங்கள் சருமத்தை மேலும் பாதுகாக்கும்.
நைட் மாய்ச்சரைசர்
50 மிலி கிளிசரின் மற்றும் 50மிலி பன்னீர் ஆகிய இரண்டையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்தவுடன் இந்த கலவையை ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த திரவத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் அப்படி விட்டு விடுங்கள். மறுநாள் காலை உங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
கை மாயச்ச்சரைஸர்
2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் கிளிசரின், 2 ஸ்பூன் ஓட்ஸ் ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எல்லா ,மூலப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடர்த்தியான பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் கைகளில் தடவி நன்றாக காய விடவும். நன்றாகக் காய்ந்தவுடன், பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக ஸ்கரப் செய்து பின்பு கழுவவும்.
க்ளென்சர் மற்றும் சாப்ட்னர்
இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கிளிசரின், இரண்டு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் அல்லது ஜிரேனியம் எண்ணெய், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்பு இதனை உங்கள் சருமத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவையில் உள்ள சர்க்கரை உங்கள் சருமத்தில் ஊடுருவி அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. பின்னர் தண்ணீரால் உங்கள் சருமத்தை கழுவினால் ஒரு மிருதுவான சருமம் தயார்.
பாத வெடிப்பைப் போக்க
பாதத்தில் ஏற்பட்ட வெடிப்பைப் போக்குவதில் கிளிசரின் பெரிதாக பயன்படுகிறது. தொடர்ந்து கால் வெடிப்பில் கிளிசரின் பயன்படுத்துவதால் வெடிப்புகளில் உண்டாகும் வலி குறைகிறது. க்ளிசரினை எடுத்து உங்கள் பாதங்களில் மென்மையாக மசாஜ் செய்வது மட்டுமே போதுமானது. அல்லது வெதுவெதுப்பான எள்ளு எண்ணெயுடன் கிளிசரின் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம்.
வயது முதிர்வைக் குறைக்கும் மாஸ்க்
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்வோம். ஒரு ஸ்பூன் சோளமாவு, இரண்டு ஸ்பூன் ஐஸ் தண்ணீர், ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதால் நல்ல விளைவுகளை விரைவில் காணலாம்.
மேக்கப் அகற்றுவதில் கிளிசரின்
சருமத்தை சுத்தம் செய்வதில் கிளிசரின் பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதனால் சருமத்தில் பயன்படுத்திய மேக்கப்பை கலைக்கவும் நாம் கிளிசரினை பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் கிளிசரின் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை எலுமிச்சை பழத்தின் சாறு, இரண்டு ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். ஒரு பஞ்சு எடுத்து இந்த கலவையில் நனைத்து உங்கள் முகம் முழுவதும் இந்த கலவையைத் தடவவும். சிறிது நேரம் கழித்து, சாதாரண நீரில் உங்கள் முகத்தைக் கழுவவும். இதனை இரவு நேரம் உறங்கச் செல்வதற்கு முன் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
பருக்கள் கட்டிகளைப் போக்குவதற்கு
ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி, ஒரு சிட்டிகை கற்பூரம், ஒரு ஸ்பூன் விட்ச் ஹஸல் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கட்டிகள் மற்றும் பருக்கள் பாதித்த இடத்தில் இந்த கலவையைத் தடவவும். நன்றாக காய விடவும். பின்னர் தண்ணீரால் முகத்தைக் கழுவித் துடைக்கவும்.
கவனமாக கையாளும்போது கிளிசரின் சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புத பொருள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அழகு சிகிச்சைகளில் கிளிசரின் பயன்படுத்தும் இன்னும் பல்வேறு வழிகள் உங்களுக்குத் தெரிந்தால் அதனையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.