காதல்ஸ இயல்பாக நிகழ்வது. காதலர்களுக்குள் நிகழும் சிறு சிறு மோதல்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், குடும்பச்சூழல், எதிர்பார்ப்புகள்ஸ அனைத்தையும் மீறி வெற்றி பெறுவதுதான் காதலில் சுவாரஸ்யம். ஆனால், அந்தக் காதலே கற்பனை என்றால்? ஆம்ஸ மிக அரிதாகக் கற்பனையை நிஜமென்று நம்பி வாழ்கிறார்கள் சிலர். மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள். இது, `டெ கிளெராம்பால்ட் சிண்ட்ரோம்’ (Clerambault Syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. 1921-ம் ஆண்டு, முதன்முதலில் டெ கிளெராம்பால்ட் என்பவர்தான் இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.
“எரோட்டோமேனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்ஸ எப்படி குணப்படுத்துவது?’’
“மிகவும் அரிதாகக் காணப்படும் இந்த மனநிலைப் பிறழ்வில் ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களைவிட உயர் பதவியிலிருக்கும் ஆண்கள், தங்கள் மேல் காதல்கொண்டிருப்பதாக நம்புவார்கள். எல்லோராலும் விரும்பப்படும் புகழின் உச்சத்தில் இருப்பவர், எளிதில் யாராலும் நெருங்க முடியாதவர், சமூகத்தில் உயர்நிலையிலிருக்கும் ஒருவரே இவர்களது கற்பனைக் காதலின் கதாநாயகனாக இருப்பார். அவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்தும் பேச்சு, செய்கை அனைத்துமே தங்கள் மீது கொண்ட காதலை ரகசியமாகத் தெரிவிப்பதாகவோ, தங்களிடம் ரகசியமாகத் தொடர்புகொள்வதாகவோ, காதலைச் சூசகமாக உணர்த்துவதாகவோ உறுதியாக நம்புவார்கள்.
இந்தநிலை, திடீரென அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால், வேலை தொடர்பாக அலைபேசியில் தொடர்புகொள்வது, சிநேகமாகப் புன்னகைப்பது என தினமும் இயல்பாக நிகழ்பவற்றை தங்கள் மேலுள்ள காதலால் நிகழ்வதாகவே நம்புவார்கள்.
“என் பொண்ணு சரியாகத் தூங்குறது கிடையாது; எங்ககிட்டப் பேசுறதேயில்லை; எப்பவும் பதற்றமாவே இருக்கா. ‘ஏன் இப்படி இருக்கே?’னு கேட்டா, சத்தம் போடுறா. அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுறவ. அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியலைஸ’’ ஒரு தந்தை, தனது மகளின் மனநிலையில் திடீரென்று இப்படி ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு பயந்து, என்னிடம் அழைத்துவந்தார்.
அந்தப் பெண்ணின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், எல்லாப் பெண்களும் ஏதாவது ஒரு சூழலில் எதிர்கொள்ளும் சாதாரண மனநிலைபோலத் தோன்றினாலும், மிகவும் அரிதான ‘ டெ கிளெராம்பால்ட் சிண்ட்ரோமு’க்கும் இவைதாம் அறிகுறிகள். எரோட்டோமேனியாவின் அறிகுறிகள், `சீஸோஃபெர்னியா’ (Schizophernia) என்ற மனச்சிதைவு நோய், பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) மற்றும் அல்சைமர் நோயின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். ஆனால், `எரோட்டோமேனியா’, கற்பனையில் வாழும் ஒருவகை மனநிலை.
இவர்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் ஆண் உயர்ந்தநிலையில் இருப்பார். ஆனால், அந்தப் பெண்ணோ எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர் தன்னைக் காதலிப்பதாகவே நம்புவார். அதற்கேற்ப, அவர்களைத் தனியாகத் தொடர்புகொள்வது, பேச முயல்வது என்று தீவிரமாகச் செயல்படுவார். சில நேரங்களில், அந்த ஆணிடம் காதலைத் திணிக்கவும் செய்வார். இப்படிப்பட்டவர்களின் காதல் நிராகரிக்கப்படும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்; சிலர், இன்னும் ஒருபடி மேலே சென்று வன்முறையைக் கையாளவும் தயங்க மாட்டார்கள்.
பெரும் பதவி, புகழ், செல்வாக்குடன் இருப்பவர்களுடன் பேச, கலந்துரையாடச் சமூக ஊடகங்கள் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதால், இன்றையச் சூழலில் `எரோட்டோமேனியா’ மனநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. பல நேரங்களில் இவர்கள் காதலிப்பதாகச் சொல்பவர்கள் திருமணமானவராக, உயர்பதவியில் இருப்பவராக, அந்தஸ்தில் உயர்ந்தவராக, புகழ்பெற்ற நடிகர்களாக இருக்கக்கூடும். `எரோட்டோமேனியா’ என்ற நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர முடியாதவர்கள் என்பதே உண்மை.
மனஅழுத்தம், மனச்சோர்வு, பேச ஆள் இல்லாத நிலை, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலரும் இந்தப் பிரச்னையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். சிலர், தலையில் அடிபட்டதால் பாதிக்கப்படுவதும் உண்டு. இதைக் கண்டறிய மனநலம் சார்ந்த சில பரிசோதனைகள் உள்ளன. பெரும்பாலும் இந்த பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் காதுகளில் யாரோ பேசுவதுபோலக் குரல் கேட்பதாகக் கூறுவார்கள். சரியான தூக்கமின்மை, அதீதப் பதற்றம், எதிர்மறை எண்ணங்கள் ஆகிய அறிகுறிகளுடனேயே இவர்கள் மருத்துவரைச் சந்திக்க அழைத்துவரப்படுகிறார்கள்.இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டால், முதற்கட்டமாக ஆன்டிசைக்காடிக் (Antipsychotic) மருந்துகள் தரப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ச்சியாக மருந்து உட்கொள்வதன் மூலம் படிப்படியாக இந்த நிலை மாறும். சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் தேவைப்படும். இவற்றைத் தாண்டி உளவியல் ஆலோசனை, தனக்குப் பிடித்த செயல்களைச் செய்வது, மனஅழுத்தம் ஏற்படுத்தும் சம்பவங்களைத் தவிர்ப்பது, சிறு பயணம் மேற்கொள்வது என மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு. மேலும் குடும்பத்தினர், கணவர், குழந்தைகள் ஆகியோரின் அரவணைப்பும் துணையும் மிக மிக அவசியம்’’ என்கிறார் மருத்துவர்