இரட்டைக் குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யம்தான். எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம். இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்துகொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் தெரியும், அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பது.
ஒரு கரு முட்டையும் ஒரு விந்தணுவும் இணைந்து கருத்தரித்து, அதன் பிறகு இரண்டாகப் பிரிவதால், ஒரே மரபணு அம்சத்துடன்கூடிய இரண்டு கருக்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் இரட்டையரை ‘ஐடென்டிகல் ட்வின்ஸ்’ (Identical Twins) என்கிறோம். ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளும் இதே வகையறாதான். இவற்றில் இரண்டு பிரிவினர் உள்ளனர். நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குடத்தை வைத்து இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.
* `மோனோகோரியானிக் மோனோஅம்னியாட்டிக்’ (Monochorionic Monoamniotic Twins) இரட்டையர்கள் – இருவரும் ஒரே நஞ்சுக்கொடியுடன், ஒரே பனிக்குடத்தில் இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.
* மோனோகோரியானிக் டை-அம்னியாட்டிக் (Monochorionic Diamniotic Twins) இரட்டையர்கள் – நஞ்சுக்கொடி இருவருக்கும் ஒன்றுதான். ஆனால், பனிக்குடப்பைகள் இரண்டு இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.
இரண்டு கரு முட்டைகளுடன், இரண்டு விந்தணுக்கள் சேர்ந்து, இரண்டு தனித்தனி கருக்களாக வளரும் குழந்தைகள், ‘ஃபிரேட்டெர்னல் ட்வின்ஸ்’ (Fraternal Twins) எனப்படுவார்கள். அதாவது, ஒரே மாதிரி இல்லாத இரட்டையர்கள். கருவில், இந்தக் குழந்தைகளுக்கு தனித்தனி நஞ்சுக்கொடிகள், இரண்டு பனிக்குடங்கள் இருக்கும். இருவருக்கும் ரத்த விநியோகம் தனித்தனியாக நடைபெறும். ஒரே கருவில் இருந்தாலும், இரண்டு குழந்தைகளும் தனித்தனி உலகத்தில் இருப்பார்கள். இப்படி உருவாகும் குழந்தைகளில், பெரும்பாலும் ஒரு குழந்தை ஆணாகவும், ஒரு குழந்தை பெண்ணாகவும்தான் இருப்பார்கள். இவர்களின் மரபணுக்களும் வித்தியாசமாகவே காணப்படும். இரட்டையர்களைப் பற்றிப் பல்வேறு நம்பிக்கைகளும் காலங்காலமாக உலவுகின்றன. `இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் பசியெடுக்கும்; இருவரும் ஒரே நேரத்தில் நோய்வாய்ப்படுவார்கள்ஸ’ என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
இந்த நம்பிக்கைகளில் எது உண்மை, இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மருத்துவ உண்மைகள் என்னென்ன? குழந்தைகள்நல மருத்துவர் கண்ணன் விளக்குகிறார்.
“இரட்டைக் குழந்தைகளைப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் காலங்காலமாக இருக்கின்றன. அப்படியான ஒன்று, ‘ஒரு குழந்தை பால் கேட்டு அழுதால், இன்னொரு குழந்தையும் அழும்’ என்பது. பொதுவாக, பிறந்த குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பார்கள். அதனால் குறிப்பிட்ட இடைவெளிகளில் குழந்தைகளுக்குப் பசியெடுக்கத் தொடங்கிவிடும். இது இயல்பான ஒன்று. ஒரு குழந்தைக்குப் பசியெடுத்தால், அடுத்த குழந்தைக்கும் பசியெடுக்கும் என்பது இல்லை.
திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல், இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவரை வில்லன் புரட்டி எடுத்தால், எங்கோ இருக்கும் அடுத்த கதாநாயகன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு, அடிவாங்கிக்கொண்டிருக்கும் தன் உடன்பிறப்பைக் காப்பாற்றச் செல்வார். இவையெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமே இல்லை. இரட்டையர்களுக்கென்று பிரத்யேகமாக எந்த உள்ளுணர்வும் கிடையாது. இரட்டையர்களில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்துவிட்டால்கூட, தன் உறவுகளில் யாரேனும் தவறிவிட்டால் எப்படிப்பட்ட உணர்வு ஏற்படுமோ அதுதான் ஏற்படும். இரட்டையர்களுக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் எதுவும் இருக்காது. இரட்டையர்களின் கைரேகைகளும் வேறு வேறாகத்தான் இருக்கும். உலகில் அனைத்து மனிதர்களுக்கும் கைரேகை என்பது மாறுபட்டிருக்கும். பெற்றோர் வெவ்வேறு இனத்தை, நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால், இரட்டைக் குழந்தைகளில் அதன் பாதிப்பு இருக்கும். ஒரு குழந்தை தந்தையின் நிறத்திலும், ஒரு குழந்தை தாயின் நிறத்திலும் இருக்கலாம்.
ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அடுத்த குழந்தைக்கும் உடல்நலம் பாதிக்கப்படும் என்று கூற முடியாது. ஆனால், சளி, காய்ச்சல், கண்வலி போன்ற தொற்றுநோய்கள் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால், அடுத்த குழந்தையையும் பாதிக்கும். இது இரட்டைக் குழந்தைகளுக்குத்தான் என்றில்லை, வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்தால் அடுத்த உறுப்பினருக்கும் பரவுவதுபோலத்தான். ஆனால், மரபணுக் குறைபாடுகளால் பிறவியிலேயே ஏதேனும் நோய் பாதித்திருந்தால், அது இரண்டு குழந்தைகளையும் பாதிக்கும். தாய் அல்லது தந்தையின் மரபணுவில் ஒரே வகை (Pattern) அமைந்துவிட்டால், தொடர்ந்து அடுத்தடுத்த குழந்தைகளிலும் அந்த மரபணுவின் தாக்கம் தொடரும்.
‘இரட்டைக் குழந்தைகளில் ஒரு பிள்ளை சவலைப்பிள்ளை’ என்ற சொலவடையை கிராமத்தில் கேட்டிருப்போம். அதாவது, ‘ஒரு குழந்தையைவிட மற்றொரு குழந்தை சற்று நோஞ்சானாக இருக்கும்’ என்பதுதான் அதன் பொருள். குழந்தைகள் தாயின் கருவறையில் இருக்கும்போது, ஒரே அளவில் ரத்த ஓட்டம் சென்றால், இரண்டு குழந்தைகளின் எடையும் ஒன்றுபோல இருக்கும். ஆனால், ஒரு குழந்தைக்கு அதிக அளவிலும், மற்றொரு குழந்தைக்கு குறைவான அளவிலும் ரத்த ஓட்டம் சென்றால், குறைவாக ரத்த ஓட்டம் செல்லும் குழந்தை எடையிலும், உருவ அமைப்பிலும் இன்னொரு குழந்தையைவிட வித்தியாசப்படும். இரு குழந்தைகளின் வளர்ச்சி என்பது ஒன்றுபோல 36 வாரங்களாக இருந்தாலும், எடையில் மாற்றம் காணப்படும். இதனை ‘ட்வின் டு ட்வின் ட்ரான்ஸ்ஃபியூஷன் சிண்ட்ரோம்’ (Twin-to-twin Transfusion Syndrome) என்கிறோம்.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண்களில் 58 பேர்களில் ஒருவருக்கு என்ற விகிதத்திலும், இரட்டைக் குழந்தைகளின் தந்தைகளில் 116 பேர்களில் ஒருவருக்கு என்ற விகிதத்திலும் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இரட்டையர்களாகப் பிறந்தவர்களுக்கும் இதே விகிதத்தின்படி, இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது.
இயற்கையான கருத்தரிப்பைவிட, குழந்தையின்மையால் செயற்கைக் கருத்தரிப்புக்குச் செல்லும் பெண்களுக்கு அதிக அளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பார்கள். அதிலும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது. காரணம், வயதான பெண்கள் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்று, செயற்கைக் கருத்தரிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் கருத்தரிக்கும் 44 சதவிகிதம் பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களில் 17 சதவிகிதம் பேருக்கு இரட்டைக் குழந்தைகளும், மற்றவர்களுக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்பிருக்கிறது.
‘இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும்’ என்று கிராமங்களில் இன்றும் இளம் பெண்களுக்கு இரட்டை வாழைப்பழத்தைக் கொடுக்க மாட்டார்கள். வாழைப்பழத்துக்கும் இரட்டைக் குழந்தைக்கும் தொடர்பே இல்லை. ஆனால், பால் பொருள்களுக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கும் தொடர்பு இருக்கிறது. ஒரு பெண் வழக்கமான அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாகப் பால் பொருள்களைச் சாப்பிட்டுவந்தால், அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.
இரட்டைக் குழந்தைகள் சுகப்பிரசவத்திலும் பிறப்பார்கள் என்றாலும், பல்வேறு மருத்துவச் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இப்போது பெரும்பாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில்தான் குழந்தைகள் பிறக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் புகட்டும் அளவுக்குத் தாயிடம் போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்கும். தாய்ப்பால் சுரப்பு என்பது உளவியல் சார்ந்த விஷயம். ‘என் குழந்தைகளுக்கு என்னால் தாய்ப்பால் புகட்ட முடியும்’ என்ற உறுதியோடு, ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான அளவு பாலை ஒரு தாயால் புகட்ட முடியும் என்கிறார் கண்ணன்.