தூங்கும் போது அதிக குறட்டைக்கு தீர்வு!
22 Nov,2018
வாயில் அதிக வறட்சி ஏன் ஏற்படுகிறது மூன்று ஆண்டுகளாக எனக்கு எச்சில் சுரப்பதில்லை. எனக்கு 55 வயதாகிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்குமா
வாயில் அதிக வறட்சி தன்மை எச்சல் சுரக்கும் ‘சலைவரி கிளான்டின்’ செயலிழப்பை காட்டுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. உதாரணமாக ‘ஆட்டோஇமியூன் டிசாடர்’ எனும் நம் உடம்பில் உள்ள அணக்கள், நம் உடம்பின் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்க பல வழிகளில் அதன் வெளிப்பாடுகளை கொண்டிரு்கும். அதில் ஒன்று வாயின் வறட்சி தன்மை. இதில் கண்ணின் வறட்சி தன்மையும் சேர்ந்து இருக்கலாம்.
இரண்டாவதாக சர்க்கரை நோய்க்கு ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சில சமயங்கிளல் கல்லீரல் கணையம் சம்பந்தமான தொந்தரவுகளும் வாயில் வறட்சியை ஏற்படுத்துகின்றன.
மிகவும் அதிகமான மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு வாயில் வறட்சி ஏற்படுகிறது. முகத்தில் சாலை விபத்தின் காரணமாக எச்சில் சுரப்பிக்கான நரம்புகள் செயலிழந்து விடுவதாலும் வாயில் வறட்சி ஏற்படுகிறது. மிக சாதாரணமாக வேண்டிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டாலும் வாயில் வறட்சி ஏற்படுகிறது. வாயில் வறட்சி தன்மையால் பல் சொத்தை, வாயில் துர்நாற்றம், உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இதற்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது, உணவுடன் தண்ணீர் குடிப்பது நல்லது.
* என்னுடைய மாமாவுக்கு 65 வயதாகிறது. இவருக்கு மூக்கடைப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நான்கு வேளை சொட்டு மருந்து விடுகிறார். பல ஆண்டுகளாக இவருக்கு இந்த பழக்கம் உள்ளது. இதை தவிர்க்க என்ன வழி
மூக்கில் சொட்டு மருந்து 3-5 நாட்களுக்கு மட்டுமே காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. சிலர் மூக்கடைப்பிற்கான காரணத்தை எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன் மூலம் அறியாமல் வெறும் சொட்டு மருந்துகளையே மூக்கில் பல ஆண்டுகளாக விட்டு விடுகிறார்கள். இது மூக்கின் சதைகளை 3-4 மடங்கு நிரந்தரமாக பெரிதாக்கி விடுகிறது.
சொட்டு மருந்தை நிறுத்தி விட்டு சி.டி., ஸ்கேன் மூலமாக மூக்கடைப்பிற்கான காரணத்தை அறிந்து மூக்கின் அலர்ஜி மற்றும் பிற காரணங்களுக்கு ஏற்றவாறு மருந்துகளோ அல்லது அறுவை சிகிச்சைகளோ தேவைப்படுகிறது.
* என்னுடைய நண்பனுக்கு 28 வயதாகிறது. 96 கிலோ எடை இருக்கிறார். இரவில் அதிக குறட்டையும், தூக்கமின்மையும் பகலில் தூக்கக் கலக்கத்துடன் இருக்கிறார். இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
நுரையீரலுக்கு போகும் காற்று வாய் மற்றும் தொண்டையை சேர்க்கும் பகுதியில் (ஓரோபேரிங்ஸ்) அதிகமான சதையினால் குறுகி விடுவதால் காற்று மிகுந்த சத்தத்துடன் குறட்டையாக கேட்கிறது. சில சமயம் இந்தப் பகுதியில் முற்றிலுமாக அடைப்பட்டு போகும் போது 5-15 வினாடிகள் மூச்சை நிறுத்தி விடுவர். இரவில் பலமுறை பதறி முழிப்பார்கள்.
இதனால் பகல் முழுக்க சோர்வாக உற்சாகமின்றி தூக்கக் கலக்கத்துடன் காணப்படுகிறார்கள். முதலில் தைராய்டு ரத்த பரிசோதனை கொடுத்து தைராய்டு பிரச்னையினால் மேற்கூறியவை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சி.டி., ஸ்கேன் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் பகுதிகள் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும்.
இரவில் ‘ஸ்லீப் ஸ்டடி’ எனும் முகத்தில் மாஸ்க் மூலமாக இரவு முழுக்க செய்யும் பதிவு எத்தனை முறை குறட்டை, எத்தனை முறை ஆக்ஸிஜன் அளவுக்கு கீழ் குறைகிறது, எத்தனை முறை மூச்சை நிறுத்துகிறார் என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக பதிவில் காட்டிவிடும்.
இதன் மூலமாக குறட்டையில்லாமல் இருப்பதற்கு காற்றை ‘சீப் பாப்’ எனும் கருவி மூலம் எவ்வளவு அழுத்தத்தில் செலுத்தலாம் என்பதை கண்டுபிடித்து கொடுக்கும் போது குறட்டை இருக்காது. உடல் எடை குறைவது, குறட்டை குறைவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
– டாக்டர் மீனா பிரியதர்ஷினி,
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்,