தூக்கமின்மை உங்களது உயிரை பறிக்குமா?
19 Nov,2018
"எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், எனக்கு தூக்கமே வருவதில்லை" என்று தினந்தினம் கவலைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
அதாவது, இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கும், விரைவான மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று 'ஸ்லீப் மெடிசின் ரெவியூஸ்' (Sleep Medicine Reviews) என்ற சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காலை நான்கு, ஐந்து மணிவரை தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் சற்று நிம்மதியை கொடுக்கலாம்.
கிட்டதட்ட 37 மில்லியன் மக்களை கொண்டு நடத்தப்பட்ட 17 ஆய்வுகளை ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடல்பருமன், இதயம் தொடர்பான பிரச்னை, சர்க்கரை நோய், வாழ்நாள் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு எச்சரிப்பதற்கு நேரெதிராக இந்த ஆராய்ச்சி முடிகள் உள்ளன.
தூக்கமின்மையை வெல்ல முடியுமா?
தூக்கமின்மையை அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியாது. ஆனால், இரவில் நீங்கள் உறங்குவதற்குரிய வாய்ப்புகளை அதிகரிக்கும் வழிமுறைகள் உள்ளன.
பகல்பொழுதில் தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்து உங்களை சோர்வாக்குவதும், நீங்கள் கணக்கில்லாமல் குடிக்கும் காபியை கட்டுப்படுத்துவதும் உங்களுக்கு உறக்கம் ஏற்படுத்துவதற்கு உதவலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு கூறுகிறது.
அதுமட்டுமின்றி, புகைபிடிப்பது, அதிகளவு உண்பது, மதுபானம் அருந்துவது ஆகியவை உங்களது உறக்கத்துக்கு தடையாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
உங்களது மனதில் பெரும்பாலான நேரங்களில் மேலோங்கியுள்ள விடயங்களை குறித்து வைத்து அவற்றை தீர்க்க முயற்சிப்பது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்வது போன்றவற்றையும் முயற்சித்து பார்க்கலாம்.
வாழ்வை கசப்பாக்குகிறது
"தூக்கமின்மையால் மோசமாக பாதிக்கப்பட்ட நாட்களில் நான் வெளியே செல்வதற்கே அச்சமடைவேன். சோர்வாகவும், மன உளைச்சலுடனும் இருக்கும் அச்சமயத்தில் எனது பிரச்சனையை வேறு யார் மேலோ திணித்துவிடுவேன் என்ற பயமே அதற்கு காரணம்" என்று 29 வயதாகும் எழுத்தாளரான அல்மரா அப்கரியன் கூறுகிறார்.
மிகவும் அரிதாக சில நாட்களில் ஆறு மணிநேரம் உறங்கினாலும், மனக்கவலைகள், மன அழுத்தத்தின் காரணமாக இரவு முழுவதும் இடையிடையே எழுந்து சிரமத்திற்குள்ளாவதாகவும், அது தனது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
"தூக்கமின்மையால் ஏற்படும் உடல்சோர்வின் காரணமாக தேவையான நேரத்தில் முழு திறனுடன் செயல்பட முடியவில்லை. அதாவது, தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகளினால் மனதுக்கு புத்துணர்வை தரும் நண்பர்களுடனான சந்திப்பை கூட அடிக்கடி மேற்கொள்ள முடிவதில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
"தூக்கமின்மையின் காரணமாக ஏற்படும் நீண்டகால பிரச்சனைகளை எண்ணி நீங்கள் வருந்துகிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, 'இது தொடர்ந்து நீடிக்காது என்று நம்புகிறேன்' என அல்மரா கூறுகிறார்.
தொடக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தூக்கமின்மை, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தினசரி வாழ்வில் ஒன்றிவிடுவதாக அல்மராவும், மற்றவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.