விதைப்பை பெரிதானது போன்ற, வீங்கியது போன்ற பிரச்சனைகளை விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் என்கிறோம். விந்தகங்களைக் கொண்டிருக்கும் பையே விதைப்பை எனப்படுகிறது. விந்தணுக்கள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆகியவற்றை உற்பத்தி செய்வதே விந்தகங்களின் முக்கியப் பணியாகும்.
காரணங்கள் (Causes)
விதைப்பைகளில் வீக்கப் பிரச்சனைகள் ஏற்படப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அவற்றில் சில:
கவட்டைக் குடலிறக்கம் (கவட்டைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வீக்கம்)
விதைப்பைப் பகுதியில் காயங்கள்
விரைமேல் நாள அழற்சி (விந்தணுக்களைக் கொண்டு சென்று சேகரிக்கும் குழாயில் ஏற்படும் அழற்சி போன்ற நோய்கள்)
விரைச்சிரை முறுக்கம்
கட்டிகள்
நோய்த்தொற்றுகள்:
விதைப்பையில் ஏற்படும் இதுபோன்ற வீக்கங்கள் புற்றுநோய் சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் அல்லாதவையாகவும் இருக்கலாம்.
புற்றுநோய் அல்லாத விதைப்பை வீக்கங்களில் அடங்குபவை:
விரைவீக்கம்: விதைப்பையில் திரவம் சேருதல்
விரைப்பை இரத்தக்கட்டு: விதைப்பையில் இரத்தம் சேருதல்
விரைப்பை இரத்தக்கட்டு: இறந்த விந்தணுக்கள் மற்றும் திரவங்கள் சேர்ந்த கட்டி போன்ற வளர்ச்சி
விரைமேல் நாள அழற்சிக் கட்டி: விதைப்பைக்குப் பின்புறமுள்ள, விந்தணுக்களைக் கொண்டு செல்லும் நாளத்தில் ஏற்படும் வீக்கம்
சுருள் சிரைப்பிதுக்கம் (வெரிக்கோசீல்): விதைப்பையில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைதல்
விந்தகப் புற்றுநோய்: விந்தகங்களில் உள்ள செல்கள் வழக்கத்திற்கு மாறாக வளரும்போது, அது விந்தகப் புற்றுநோயாக மாறக்கூடும். பெரும்பாலும், விந்தகத்தில் கெட்டியான கட்டி போன்று இருக்கும். இது மிக அரிதான ஆனால் கடுமையான விதைப்பை வீக்கப் பிரச்சனையாகும்.
அறிகுறிகள் (Symptoms)
அறிகுறிகள் காரணத்தை பொறுத்து மாறுபடும், பொதுவான சில அறிகுறிகள்:
விதைப்பையில் வலியற்ற அல்லது வலியுடன் கூடிய கட்டி போன்ற பகுதிகள்
விதைப்பை பெரிதாவது
விதைப்பை சருமம் சிவந்து இருப்பது
விந்தகம் மிக மென்மையாக அல்லது வீக்கமாக இருப்பது
விந்தகங்களில் ஒன்று அல்லது இரண்டும் அளவு அல்லது வடிவம் மாறுதல்
கண்டறிதல் (Diagnosis)
பின்வரும் வழிகளில் மருத்துவர் விதைப்பை வீக்கப் பிரச்சனைகளைக் கண்டறியலாம்:
உடல் பரிசோதனை: வழக்கமான உடல் பரிசோதனையின்போது மருத்துவர் இதனைக் கண்டறிய முடியும். விதைப்பையில் உள்ள திரட்சியின் பண்பு, அளவு மற்றும் வடிவத்தைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காக மருத்துவர் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சி ஆவு செய்வார் (இதனை டிரான்ஸ்இல்லுமினேஷன் என்பார்கள்).
படமெடுத்தல் சோதனைகள்:
அல்ட்ராசவுண்ட்: உள் உறுப்புகளைப் படமெடுப்பதற்காக அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப்படும். விந்தகத்தின் இடம், அளவு மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கண்டறிய இது உதவும்.
CT- ஸ்கேன்: திரட்சி எந்த அளவுக்கு உள்ளது, அருகிலுள்ள திசுக்களோ பிற உறுப்புகளோ பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக CT-ஸ்கேன் செய்யப்படுகிறது.
இரத்தப் பரிசோதனை: விந்தகப் புற்றுநோய் சம்பந்தப்பட்ட புரதங்களின் நிலைகள் உள்ளதா எனக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
திசுப்பரிசோதனை: விந்தகத் திசுக்களில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான பிரச்சனைகள் உள்ளதா எனக் கண்டறிவதற்காக விந்தகத் திசுப்பரிசோதனை செய்யப்படலாம்.
சிகிச்சை (Treatment)
விதைப்பையில் ஏற்படும் இது போன்ற சில வீக்கங்கள் தீங்கற்றவை, அவற்றுக்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. சில சமயம், நன்றாக உடலைக் கவனித்துக்கொள்வதன் மூலமும், வலி நிவாரண மருந்துகள் அல்லது ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மூலமே இந்தப் பிரச்சனை சரியாகிவிடும்,
சில சமயம் விரைவீக்கம், விதைப்பை இரத்தக்கட்டு போன்ற விதைப்பையில் இருக்கும் திரவங்கள், இரத்தம் அல்லது இறந்த செல்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படும்.
விதைப்பையில் ஏற்படும் இதுபோன்ற வீக்கங்களால் ஏற்படும் அசௌகரியத்தைப் போக்க, ஜாக்ஸ்ட்ராப் விதைப்பை சப்போர்ட் உதவக்கூடும்.
விந்தகப் புற்றுநோய் இருந்தால், பாதிக்கப்பட்ட விந்தகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் (இதற்காக ரேடிக்கல் இங்கியூனல் ஆர்ச்சியக்டமி எனும் அறுவை சிகிச்சை செய்யப்படும்) அல்லது புற்றுநோய் செல்களை அழிக்க கீமோதெரப்பி பயன்படுத்தப்படலாம்.
தடுத்தல் (Prevention)
பாதுகாப்பான உடலுறவின் மூலம், பால்வினை நோய்த்தொற்றுகளால் ஏற்படும் விதைப்பை வீக்கப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது விதைப்பையில் அடிபடுவதைத் தடுக்க, அத்தலெட்டிக் கேப் பயன்படுத்தலாம்.
சிக்கல்கள் (Complications)
பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:
குழந்தையின்மை
பருவமடையும்போது வளர்ச்சி குறைவு அல்லது தாமதம்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
விதைப்பையில் வீக்கம் அல்லது கட்டி போன்று ஏதேனும் இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்லவும். விந்தகப் புற்றுநோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த, விந்தகம் அல்லது விதைப்பையில் ஏதேனும் புதிதாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர் ஆய்வு செய்வார்.
எச்சரிக்கை (Red Flags)
விதைப்பையில் வலியுடன் ஏதேனும் வீக்கம் அல்லது கட்டி போன்ற திரட்சி இருப்பதைக் கவனித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவும்.