நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும், ரத்த நாளங்கள் வழியாகவே செல்கின்றன. ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை வைத்தே, வயதை தீர்மானிக்கலாம். 60, 70 வயதைக் கடந்த சிலர், வயதிற்கு ஏற்ற வயோதிகத்துடன் இல்லாமல், இளமையாக இருப்பதைப் பார்த்து, ‘வயதே தெரியலையே’ என்று சொல்வோம். அவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக, தலை முதல் கால் வரை தடங்கல் இல்லாத, சீரான ரத்த ஓட்டத்துடன் இருப்பதே இதற்கு காரணம்.
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில், ஒரு சில நிமிடங்கள் ரத்த ஓட்டம் தடைபட்டாலும், அந்த இடத்தில் உள்ள செல்கள் இறந்து விடுன்றன. மூளையின் குறிப்பிட்ட அந்தப் பகுதி, உடலின் எந்த பகுதியை கட்டுப்படுத்துகிறதோ, அந்த இடம் செயலிழந்து விடும்; அதுதான், ‘ஸ்ட்ரோக்!’
இதே போல, வயிறு, இதயம், கால்கள் என்று உடலின் அனைத்து பாகங்களுக்கும், சீரான ரத்த ஓட்டத்தை தருவதற்கு, முக்கிய ரத்த நாளங்கள் உள்ளன. குடலுக்கு ரத்த ஓட்டத்தை தர, மூன்று முக்கிய ரத்த நாளங்கள் உள்ளன.
அவை கல்லீரல், மண்ணீரல், வயிறு என்று, வயிற்றின் உள் உறுப்புகளுக்கு சீராக ரத்த ஓட்டத்தைத் தரும். இதில் தடை ஏற்பட்டாலும், வயிறுப் பகுதியில் தீவிர வலி வரும். சாப்பிட்ட உடன் வலி வருவதால், ‘அல்சர்’ என்று நினைத்து, அதற்கான மாத்திரைகள் தருவர்; ஆனாலும் எந்தப் பலனும் கிடைக்காது.
பிரச்னையை கவனித்து, சிகிச்சை செய்யாவிட்டால், குடல் அழுகும் அபாயமும் உண்டு.
உடற்பயிற்சி போன்ற அதிக உடல் உழைப்பு இருக்கும் சமயங்களில், ரத்தக் குழாய் விரிவடைந்து, மற்ற நேரங்களில் சுருங்கும். ரத்த நாளங்கள் அடைப்பிற்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சிகரெட் புகைப்பது ஆகிய நான்கும் முக்கிய காரணங்கள். உடல் பருமன், உடலுழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவையும் காரணமாக அமைகின்றன.
இவற்றால் ஏற்படும் அடைப்பால், சுருங்கி விரியும் தன்மை குறைந்து, செல்களுக்கு போதுமான ஆக்சிஜனும், ஊட்டச் சத்துக்களும் கிடைப்பதில்லை. உடல் பருமன் அதிகம் இருந்தால், ரத்த நாளங்களை அதிகம் பாதிக்கும்.
ரத்த நாள அடைப்பால், அதிகம் பாதிக்கப்படுவது கால்கள். துவக்கத்தில் சிறிது துாரம் நடந்தாலே, கால்களில் வலி ஏற்படும்; சில நிமிடங்கள் உட்கார்ந்தால், சரியாகி விடும். கவனிக்காமல் இருந்தால், தொடர்ந்து ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் இல்லாமல், செல்கள் அழிந்து விடுகின்றன. கால்கள் கறுப்பாக மாறுவது இதன் அறிகுறி.
இயங்கிக் கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. தினமும், 40 நிமிடங்கள் சீரான நடைப் பயிற்சியுடன், ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதால், எல்லா இடத்திற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்; ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் பொரித்த, வறுத்த, அதிக உப்பு சேர்த்த உணவுகளை தவிர்ப்பதும் முக்கியம்.
அரசு மருத்துவமனையில், ரத்த நாளங்களை துல்லியமாகப் பரிசோதிக்கக் கூடிய, நவீன சி.டி., ஆஞ்சியோகிராம் உள்ளது.
ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ‘ஸ்டென்ட்’ பொருத்துவது உட்பட, நவீன சிகிச்சை வசதிகளை, முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பெற முடியும்.