இதயம்ஸ உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புதான், நாம் உயிருடன் இருப்பதற்கான சாட்சியும் ஆதாரமும் என்றால், அது மிகையாகாது.
ஒவ்வொரு துடிப்பின்போதும் இதயமானது அதன் சுழற்சிக்காக பிராணவாயு மற்றும் சத்துகள் நிறைந்த ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் மூலம் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு சேர்க்கிறது.
அப்படி இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ, கடுமையாகத் தடைப்பட்டாலோ இதயத் துடிப்பும் அதன் செயல்பாடும் மாறுபடும். இதன் விளைவாக, மாரடைப்பு (இதயச் செயலிழப்பு) ஏற்படக் கூடும்.
அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆர்.எஸ்.ஹரிஹரன்.
“மனிதன் ஆரோக்கியமான உணவை உண்டபோதும் நல்ல உணர்வுகளைக் கொண்டிருந்தபோதும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபோதும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தபோதும் உடலுழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோதும் இதயமும் 100 வயதைத் தாண்டி துடித்ததற்கான ஆதாரங்கள் ஏராளம் உண்டு.
ஆனால், இன்றைய சூழலில் ஆரோக்கியமான காற்றும் உணவும் கிடைக்கவில்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்ள ஒதுக்கும் நேரம் மிக மிகக் குறைவு. இதன் விளைவாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறோம்.
இதுபற்றி ஆராய்ந்தால் எத்தனையோ காரணங்கள் நம் கண்முன் விரிகின்றன. குறிப்பாக, இதயநோய் ஏற்படுவதற்கான முதன்மையான காரணிகளுள் சர்க்கரைநோய் முக்கிய பங்கு வகிக்கிறது.
1990-ம் ஆண்டுக்குமுன் சர்க்கரை நோயும் இதயம் சார்ந்த நோய்களும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால், இதய நோய்க்குச் சர்க்கரை நோய் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதய நோய்களுக்கான காரணிகளை ஆராய்ந்தால், அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.
1) மாறுதலுக்கு உட்பட்ட காரணங்களாக உடல் பருமன், மது அருந்துதல், புகைப்பிடித்தல், உடல் உழைப்பின்மை, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத கொழுப்புச் சத்து, கட்டுக்குள் இல்லாத சர்க்கரை அளவு, அதிக டிரைகிளிசரைடு அளவு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லலாம்.
2) மாறுதலுக்கு உட்படுத்த இயலாத காரணங்களாக வயது, பாலினம், மரபணு, உடல் முதலியவை சொல்லப்படுகிறது.
இதயம் சார்ந்த நோய்களின் வகைகள்
மாரடைப்பு
நம் இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான பிராணவாயு மற்றும் சத்துப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதே `கரோனரி ஆர்ட்டரி’ (Coronary Artery) எனப்படும் ரத்தக்குழாய்.
இந்த ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் சில நொடிகளிலேயே இதயத்துக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த அடைப்பு அதிவேகமாக ஒரு நொடியில் நிகழ்ந்தால் மாரடைப்பு (Heart attack) எனப்படும்.
ரத்தக்குழாயில் ஏற்படும் இந்த அடைப்பு ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாமல், இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைக் குறைத்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும். இதுவே ஆஞ்சினா (Angina) எனப்படும். ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் நிலையை அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) எனப்படும்.
இதயச் செயலிழப்பு (Heart Failure)
நம் முழு உடம்புக்கும் ரத்தத்தை `பம்ப்’ செய்து அனுப்புவது இதயத்தின் இடது கீழறை (Left Ventricle) ஆகும். இந்த அறையின் தசைகள் நீண்டநாள் சர்க்கரை நோய் காரணமாகவும் `கரோனரி ஹார்ட் டிசீஸ்’ (Coronary heart disease) காரணமாகவும் பாதிப்படையக்கூடும். இதனால், முழு உடலுக்கும் ரத்தத்தைச் சரியாக `பம்ப்’ செய்ய இயலாது. இதைத்தான் `இதயச் செயலிழப்பு’ என்பார்கள். இதயச் செயலிழப்பின் முக்கிய அறிகுறி மூச்சுத்திணறல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதய அடைப்பு (Heart block)
நமது இதயத்தில், மின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மின் பரிமாற்றத்தின்போது ஏதேனும் கோளாறோ அல்லது மாற்றமோ நிகழ்ந்தால் `பல்ஸ் ரேட்’ குறையும். இந்த நிலைதான் இதய அடைப்பு எனப்படுகிறது.
கரோனரி ஆர்ட்டரி டிசீஸ் – சர்க்கரை நோய்
கரோனரி ஆர்ட்டரி டிசீஸ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகத் தீவிரமாகக் காணப்படும். இந்நோய் மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகளை நான்கு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது.
மாரடைப்பைப் பொறுத்தவரை, சர்க்கரை நோய் இல்லாதவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.
தமனியின் வயது (Arterial age)
தமனிக்கு எத்தனை வயதோ அதுதான் நமக்கும் வயது. சர்க்கரை நோயாளியை எடுத்துக்கொண்டால், அவரது தமனியின் வயது = அவருடைய வயது + அவருக்குச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால அளவு.
எடுத்துக்காட்டாக, ஒருவரின் வயது 50 என வைத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 40-வது வயதிலிருந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால் அவரது வயது 50. ஆனால் அவரது தமனியின் வயது 50+10 =60. இப்படியாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தமனி விரைந்து முதுமையடைகிறது. சர்க்கரை நோய் தமனி முதுமை அடைவதை வேகப்படுத்துகிறது.
பெண்கள் மற்றும் மெனோபாஸ் (Women and menopause)
ப்ரீ மெனோபாஸ் (Pre-menopause) எனப்படும் முன் மாதவிடாய்க் காலத்தில், ஒரு பெண் தன் சமவயது ஆணைவிட 10 ஆண்டுகள் இளையவராகக் கருதப்படுகிறார். இது பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டின் விளைவு.
எனவே இந்தக் காலகட்டத்தில், ஆண்களைவிடப் பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், சர்க்கரை நோய் பாதித்தால் இந்த நல்ல வாய்ப்பு முற்றிலும் அகன்றுவிடும். சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஆண்களைப்போலவே இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாதவிடாய்க்குப் பின்னர் (Post menopause) பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு சரிசமம் தான். ஆனால், சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட
அதிகம். எனவே கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சுழற்சி மற்றும் ரத்தக் குழாய் சார்ந்த நோய்களான மாரடைப்பு, மூளை முடக்குவாதம் (Brain Stroke), பெரிபெரல் வஸ்குலர் டிசீஸ் (Peripheral Vascular disease) போன்றவை 10 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படக்கூடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறிகள்!
நெஞ்சுவலி மற்றும் வியர்வை, மிகக் குறைந்த அளவு வலி, இடது மார்பைச் சுற்றிய பகுதிகளில் விநோதமான வலி, சில நேரங்களில் உடல் முழுவதும் வியர்ப்பது போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதனை வலியற்ற மாரடைப்பு (Painless heart attack) என்கின்றனர். இதயத்துடிப்பில் மாற்றம், அதீத படபடப்பு, திடீர் மூச்சுத்திணறல், அதீத சோர்வு போன்றவை மட்டுமல்லாமல் திடீர் மரணமும் மாரடைப்பின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் பல நேரங்களில் மின்சாரத் தூண்டல் மூலம் மீண்டும் இதயம் துடிக்கக்கூடும்.
வாழ்வியல் மாற்றங்களே அடிப்படை
இத்தகைய இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அல்லது நோய் அணுகுவதிலிருந்து தள்ளிப்போட நம் வாழ்வியல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதே முதற்படியாக இருக்கவேண்டும். இத்தகைய மாற்றத்தை முதலில் உணவு முறைகளிலிருந்தே தொடங்க வேண்டும்.
அதிக கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய், நெய் ஆகியவற்றில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். உடலுழைப்பு அவசியம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நீச்சல் பயிற்சி மிகவும் ஆரோக்கியமானது.
அசைவ உணவைப் பொறுத்தவரையில், ஆடு மற்றும் மாட்டு இறைச்சியைவிட கோழியின் இறைச்சி உகந்தது. கோழி இறைச்சியைவிட மீன் உகந்தது. மீன்களிலும் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்கள் சிறந்தவை.
தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், டால்டா ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது.
ரத்தத்தில் டிரைகிளிசரைடு அளவு அதிகமாக உள்ளவர்கள் மது பான வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதைச் சிறிது சிறிதாக நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். உடல் பருமனைக் குறைக்க, தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள், இரவுவேளை பார்ப்பவர்கள், ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் (வங்கிப் பணி, கால் சென்டர்), அதிக மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாவோர் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க முடிவெடுத்துச் செயல்பட வேண்டும்.
உதாரணமாக யோகா, கார்டனிங், புத்தகம் வாசித்தல், இசை கேட்டல், சிறு பயணம் போன்றவற்றில் ஈடுபடுவ