ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல்
17 Sep,2018
நல்ல உடல்நிலையிலுள்ள முதியோர்கள் ஒருநாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டால் கடும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமென்று அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் தெரியவந்துள்ளது.
மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் பயனுள்ளதாக இருப்பது குறித்து இதற்கு முந்தைய ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நல்ல உடல்நிலையிலுள்ள 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் எவ்வித நன்மையை உண்டாக்குவதில்லை என்றும், மாறாக உயிரிழப்பிற்கு வித்திடும் உட்புற இரத்தப்போக்கை அவை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தனக்கு தானே மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை கெட்டியாவதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், மீண்டும் நோய்த்தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில், மாரடைப்பு அல்லது பக்கவாதம் தங்களை தாக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் ஆஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இது உண்மையில் நோயை வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுசார்ந்த ஆராய்ச்சிகள் மத்திய வயதுடையவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டபோது, தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிடுவதால் அவர்கள் முதுமையடையும்போது குறிப்பிடத்தக்க வகையில் உடல்நலத்துக்கு ஆபத்து அதிகரிப்பது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
'பலனில்லை'
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட நல்ல உடல்நிலையிலுள்ள 19,114 பேர்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அதில் பாதி பேருக்கு குறைந்தளவிலான ஆஸ்பிரின் ஐந்து வருடங்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆஸ்பிரின் மாத்திரைகள் நல்ல உடல்நிலை கொண்டவர்களிடத்தில் இதயம் சார்ந்த பிரச்சனைகளையோ அல்லது எவ்வித நன்மையையும் தருவதில்லை என்றும், மாறாக அவை உட்புற இரத்தப்போக்கை அதிகரிப்பதாகவும் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ள மூன்று கட்டுரைகள் கூறுகின்றன.
"இதன் மூலம் குறைந்தளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலம் சார்ந்த பிரச்சனையை தவிர்க்கலாம் என்ற உலகம் முழுவதுள்ள மில்லியன்கணக்கானோரின் எண்ணம் பயனற்றது என்பதும், அதனால் ஒருபயனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது" என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்நீல் கூறுகிறார்.
"நல்ல உடல்நிலையிலுள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளை பரிந்துரைக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இந்த ஆராய்ச்சியில் புற்றுநோயின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது களநிலவரத்துக்கு மாறாக உள்ளதால் இதுகுறித்து மேலதிக தகவல்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.