ஆடும் பற்களை என்ன செய்வது
25 Aug,2018
நான் சிரிக்கும்போது ஈறுகள் அதிகமாக தெரிகிறது. பற்களின் பாதிக்கு மேல் ஈறுகள் வளர்ந்து உள்ளன. பல் தேய்க்கும் பொழுது ஈறுகளில் ரத்தம் கசிகிறது. சில சமயம் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய ஏதாவது சிகிச்சை முறை உள்ளதா?
பல காரணங்களால் சில சமயம் ஈறுகள் அதிகமாக வளர்கின்றன. அதை சுத்தம் செய்வது கடினம். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கு இது முக்கியமான காரணம். இதனை நவீன சிகிச்சை முறையான ‘லேசர் ஜின்ஜைவெக்டமி’ மூலம் சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் லேசர் கருவி மூலம் ஈறுகளை சரியான அளவிற்கும், வடிவத்திற்கும் கொண்டுவர முடியும். இந்த சிகிச்சைக்கு ஊசியோ அறுவை சிகிச்சையோ தேவை இல்லை. சற்றும் வலி இருக்காது. இந்த சிகிச்சை முறையால் உங்கள் புன்னகை அழகாக மாறுவதோடு ஈறுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எனக்கு பல் எடுத்து 2 ஆண்டுகளாகின்றன. கழட்டி மாட்டும் பல் செட் போட விருப்பம் இல்லை. எனக்கு ‘டென்டல் இம்ப்ளான்ட்’ மூலம் பற்கள் கட்டலாமா? இதனை பொருத்துவதற்கு பல் எடுத்து எவ்வளவு நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்?
கழட்டி மாட்டும் பல் செட்கள் முதலில் நன்றாக இருந்தாலும் அவை தாடை எலும்புகள் தேய்வதை தவிர்ப்பதில்லை. பல் இல்லாத இடங்களில் எலும்பு தேய்ந்து நாளடைவில் பல் செட் போடுவதும் கடினமாகிவிடும். இதை தவிர்க்க ‘டென்டல் இம்ப்ளான்ட்’ வைப்பதே சிறந்த வழி். இதன் மூலம் இயற்கை பற்களை போலவே பற்களை பெறலாம். ‘டென்டல் இம்ப்ளான்ட்’ என்பது டைட்டானியம் என்னும் உலோகத்தால் ஆனது. இதனை பல்லின் வேர் இருந்த இடத்தில் வைத்து விட்டு அதன் மீது பற்களை பொருத்தி விடலாம். பல் எடுத்தவுடன் அதே இடத்தில் இம்ப்ளான்ட்களை உடனடியாக வைக்கலாம்.
சில நேரங்களில் பற்களின் சொத்தை காரணமாக சீழ் இருந்தால் பல்லை எடுத்துவிட்டு, ஒரு மாத காலம் வரை பொறுத்து இம்ப்ளான்ட் வைக்க வேண்டும். பல் எடுத்து ஒரு வருடத்திற்குள் இம்ப்ளான்ட் வைப்பது நல்லது. இந்த முறையில் பல் கட்டும்போது அருகில் இருக்கும் பற்களை கரைத்து அதனோடு சேர்த்து பல் கட்டத் தேவையில்லை. பல் கட்டுவதற்காக சொத்தை இல்லாத பற்களை கரைப்பது தவறு. இம்ப்ளான்ட் மூலம் பொருத்தப்படும் பற்கள் நீண்ட காலம் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இன்றைய நவீன சிகிச்சை முறைகளில் இம்ப்ளான்ட்கள் மூலம் பல் கட்டுவது அனைவருக்கும் உகந்த சிகிச்சை.
எனக்கு சில மாதங்களாகவே பின் பற்களில் சில ஆடுகின்றன. எனக்கு பல் எடுக்க விருப்பம் இல்லை. பற்களை எடுக்காமல் இவற்றை சரி செய்ய முடியுமா? பற்கள் எடுப்பதை எவ்வளவு காலம் தள்ளிப்போடலாம்?
பற்கள் ஆடுவதற்கு முதல் காரணம் பற்களை சுற்றி உள்ள எலும்பு பலமின்றி இருப்பது. பற்களில் ஏற்படும் ஈறு நோய் நாளடைவில் அதனை சுற்றி உள்ள எலும்பிலும் பரவி விடும். இந்த கிருமிகளினால் பற்களை சுற்றி உள்ள எலும்பு தேய்ந்து பற்களின் பிடிமானம் குறைந்து ஆட ஆரம்பிக்கும் . ஆடும் பற்களை எல்லாம்எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பற்கள் ஆடுவதற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்துவிடலாம்.
ஈறுகளை சுத்தம் செய்வது முதல் கட்டம். பின்னர் ஈறுகளின்அடியில்சென்று எலும்பின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி விட வேண்டும். பின்னர் அந்த இடத்தில் ஈறுகளின் அடியில் மருந்து வைத்து கட்டிவிட வேண்டும். ஓரிரு வாரங்களுக்கு ஒரு முறை ஈறுகள் ஆறும் வரை கண்காணிக்க வேண்டும்.
இதன்மூலம் பற்களை சுற்றி உள்ள எலும்பு பலப்பட்டு ஈறுகளில் உள்ள கிருமிகள் நீங்கி பற்கள் ஆடுவது குறையும். இந்த சிகிச்சையோடு சேர்த்து ‘சப்ளின்டிங்’ முறையில் ஆடும் பற்களை அதன் இரு பக்கமும் உள்ள பற்களோடு நுாலினால் சேர்த்து கட்டி விட வேண்டும். இதன் மூலம் ஆடும் பற்களின் மேல் படும் விசைகளை மற்ற பற்கள் பகிர்ந்து கொள்ளும். சில மாதங்கள் கழித்து இந்த நுாலினை அகற்றி விடலாம். அதற்குள் ஆடும்பற்கள் பலம் பெற்று குணமடைந்து விடும்.